வெள்ளி, 22 ஜூலை, 2016

நீதிமன்றம் கெடு விதித்தது... அண்ணா நூற்றாண்டு நூலக சீரமைப்பு பணி அக்டோபர் 31 க்குள் முடிக்கவேண்டும்

அண்ணா நூற்றாண்டு நூலகம்... தமிழக அரசுக்கு அக். 31 வரை கெடு ...
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகச் சீரமைக்கும் பணிகளை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென இறுதிக் கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் அதனைச் சீரமைக்க வேண்டுமென ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நூலகத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு தொடர்ந்து கெடு விதித்துவந்தது. இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி ஏழாம் தேதியன்று நடந்த விசாரணையில், அண்ணா நினைவு நூலகத்தின் நிலை குறித்து அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கசெய்யப்பட்டது. இதையடுத்து, நூலகத்தை ஜூன் 30ஆம் தேதிக்குள் சரிசெய்யும்படி கெடுவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 தமது உத்தரவுகளைச் செயல்படுத்தியது குறித்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும் விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மனோன்மணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், கடந்த ஆறாண்டுகளாக நூலகத்தில் புத்தகங்கள் வாங்கப்படவில்லையென்றும் உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்தையும் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். நடந்த பணிகள் குறித்து நவம்பர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் கூறினர். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. 2011ல் புதிய அரசு பதவியேற்ற பின் இந்த நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு முன்வைத்தது. இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.  bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக