செவ்வாய், 19 ஜூலை, 2016

மீண்டும் தி.மு.க அணியில் திருமாவளவன்!' -மடைமாற்றிய 3 விஷயங்கள்

மக்கள் நலக் கூட்டணிக்குள் பெருத்த குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி, செயற்குழு கூட்டம். 'மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற அணியை உருவாக்குவது எங்கள் நோக்கம்' என்கிறார் திருமாவளவன். தி.மு.க, காங்கிரஸை நோக்கிய பயணமாகவே இதைக் கருதுகின்றனர் அரசியல் வட்டாரத்தில்.
சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று' என்ற முழக்கத்தோடு, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த அணிக்குள் ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளோடு தே.மு.தி.கவும் த.மா.காவும் இணைந்தன. தேர்தல் முடிவுகள் மக்கள் நலக் கூட்டணிக்குச் சாதகமாக அமையவில்லை.

இதையடுத்து, தே.மு.தி.கவும் த.மா.காவும் தனித்தனி நிலைபாடுகளை எடுத்துக் கொண்டு பிரிந்துவிட்டன. 'விஜயகாந்த் மற்றும் வாசனோடு தேர்தல் நேரத்து உடன்படிக்கை மட்டுமே செய்து கொண்டோம். மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது' என அறிவித்தார் திருமா. ஆனால், "உள்ளாட்சித் தேர்தல் வரையில் தொடருவோம் என்பதை எடுத்துக் கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு நாம் சந்தித்தால், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் போலத்தான் அமையும்" என வி.சி.க நிர்வாகிகள் தொடர்ந்து திருமாவளவனிடம் பேசி வந்தனர்.
அதை மனதில் வைத்தோ என்னவோ, 'மதச்சார்பற்ற அணியில் இணைவோம்' என வி.சி.க தீர்மானம் இயற்றியதை, மக்கள் நலக் கூட்டணியின் மற்ற தலைவர்கள் அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். " வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அரசின் மதவாதச் செயல்பாடுகளுக்கு எதிரான ஓர் அணியைக் கட்டமைக்க வேண்டிய கடமையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் ஒரு முடிவை எடுக்கவில்லை. அவர்களுக்கான கிரியா ஊக்கியாக நாங்கள் இருக்கிறோம். இதற்கு முன்பு ஆட்சி செய்த பா.ஜ.க அரசுக்கும் மோடி தலைமையிலான இந்த அரசுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.  2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பா.ஜ.கவுடன் அணி சேர்ந்த கட்சிகளிடம், 'ராமர்கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவற்றைக் கொண்டு வருவதில் ஈடுபாடு காட்ட மாட்டோம்' என உறுதியளித்தார் வாஜ்பாய். ஆனால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் அமல்படுத்துவோம்' எனத் தேர்தல் அறிக்கையில்  தெரிவித்தார் மோடி.
தற்போது பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகளில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஈடுபட்டிருக்கிறார். காஷ்மீரில் சொந்த மக்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதுவரையில், 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, இந்த அரசை வாஜ்பாய் அரசோடு ஒப்பிடவே முடியாது. இந்த ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான மதச்சார்பற்ற அணியை உருவாக்க வேண்டிய கடமை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இருக்கிறது. இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதற்கான முன்மொழிவை, எங்களுடைய செயற்குழு கூட்டத்தில் இருந்தே தொடங்கியிருக்கிறோம்" என்றார் நிதானமாக.

வி.சி.கவின் தீர்மானம் குறித்து சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " வி.சி.கவின் செயற்குழு தீர்மானம் குறித்து இன்னமும் திருமாவளவனிடம் பேசவில்லை. அவருடைய கருத்தைக் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்" என்றார்.
"சட்டப் பேரவைத் தேர்தலின் போது மதுவிலக்கு, ஊழல் உள்ளிட்டவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினோம். மக்களவை தேர்தலில் நாடு தழுவிய அளவில் மத சார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்’’ என்கிறார் திருமாவளவன். ஆக, தி.மு.க, காங்கிரஸ் அணியை நோக்கிய திருமாவின் பாதையில், எந்தெந்த கட்சிகள் பயணிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது &ஆ.விஜயானந்த்  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக