வியாழன், 21 ஜூலை, 2016

சீமான் காஷ்மீர் பற்றி : இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன.

சென்னை: காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழும் வகையிலான சூழலை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது.

அதுவும் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகிற காஷ்மீர் நிலத்தில் நடக்கின்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் போன்றவை நம் மனதைப் பதைபதைக்கச் செய்கின்றன. பேரெழில் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு மனித ரத்தத்தினால் உறைந்திருப்பது மிகப்பெரிய வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் 21 வயதே நிரம்பிய காஷ்மீர் இன மக்களின் பேரன்பைப் பெற்ற புர்ஹான் வானி என்கின்ற இளைஞன் கூலிப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியான ராணுவக்கட்டுப்பாடுகளினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் துன்பச்சூழலில் சிக்கித் தவிக்கும்போது புர்ஹான் வானி என்ற இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்ற அடக்குமுறைகள் காணச்சகிக்காதவை.
இந்தியப் பெருநிலத்தில் நன்கு வளர்ச்சியடைந்த 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கென தனித்துவமான மொழி வகை,பண்பாட்டு விழுமியங்கள், வேறுபட்ட பொருளாதார வாழ்க்கை நிலைகள் போன்ற பல குண இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்திய வல்லாதிக்கமானது, இந்திய ஒன்றியத்தின் கீழ் வாழ்கின்ற வேறுபட்ட இந்தத் தேசிய இனங்களின் தனித்துவத் தன்மைகளை அழித்து, ‘ஏக இந்தியா’ என்ற பெயரில் 200 பெரும் முதலாளிகளுக்கான வேட்டைக்காடாக நாட்டை நிறுவ முயற்சிக்கிறது.
காஷ்மீர் தேசிய இனம், தமிழ்த்தேசிய இனம் போன்ற பல்வகை தேசிய இனங்கள் இந்திய வல்லாதிக்கத்தின் இந்தக் கொடுங்கோன்மை போக்குகளுக்கு முகம்கொடுக்காமல் தங்கள் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்கப் போராடி வருகின்றன. காஷ்மீர் தேசிய இன மக்களின் உளமார்ந்த எண்ணங்களுக்கு சற்றும் மதிப்பு கொடுக்காது இந்திய வல்லாதிக்கம் தனது ஏகாதிபத்திய பிழைப்புத்தனங்களுக்காக காஷ்மீரையும், காஷ்மீர் மக்களையும் தனது எதேச்சதிகாரப் பிடிக்குள் வைத்திருக்கிறது. காஷ்மீர் மக்களை தனது சொந்த நாட்டு மக்களென கருதாமல் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் துன்புறுத்தி இந்திய ராணுவம் அடக்குமுறைகளை ஏவி வருகிறது.
சிறுகுழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என எந்தப் பாகுபாடுமில்லாது அனைவரையும் துப்பாக்கிமுனைகளுக்கு முன்னாள் நிற்க வைத்து இந்தியப் பெருமிதத்தை நிறுவ முனைவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. பனிப்படர்ந்த மலைகள், கண்ணாடி பிம்பங்களென துலங்கும் ஏரிகளும், கள்ளங்கபடமற்ற முகங்களை உடைய காஷ்மீர் பெருநிலம் மனிதவாதைகளால் சீர்குலைந்து அழிவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ராணுவச் சிறப்புச்சட்டத்தின் கீழ் சிக்குண்டிருக்கும் காஷ்மீர் நிலத்தையும்,காஷ்மீர் மக்களையும் காப்பாற்ற வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையாகிறது.
எனவே, இந்தியாவில் வாழ்கிற பல்வேறு தேசிய இன மக்களும் காஷ்மீர் மக்கள் மீது இந்திய வல்லாதிக்கம் தொடுத்துள்ள ஈவு இரக்கமற்ற மனிதத்தன்மையற்ற அடக்குமுறைகளுக்கு எதிராக, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் என்கின்ற இருபெரும் வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் அப்பாவி மக்களும்,இளைஞர்களும் அழித்தொழிக்கப்படுவதை இந்தியப் பெருநிலத்தில் வாழ்கின்ற வெவ்வேறு தேசிய இன மக்களும் ஒருமித்தக் குரலில் கண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழினத்தின் இன்னொரு தாய்நிலமான தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகள் போன்றே காஷ்மீர் நிலத்திலும் நடந்துவருவதை தமிழர்களாகிய நாங்கள் உளமார்ந்த வேதனையுடன் இந்நாட்டில் வாழ்கின்ற மனிதநேயமிக்க பல்வேறு இன மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். பேரழிவுக்கு உள்ளான தமிழ்த்தேசிய இனத்தின் ஆறாத காயங்கள் போல இனி எந்தத் தேசிய இன மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கின்ற ஆழ்ந்த அக்கறையின்பேரில் இந்தியாவில் வசிக்கிற அனைவரும் காஷ்மீர் மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
காஷ்மீர் மக்களை இனிமேலும் தனிமைப்படுத்தி, ‘தீவிரவாதி’,. ‘பயங்கரவாதம்’ கட்டம்கட்டி அழித்தொழிப்பதை அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது. மேலும்,ஆக்கிரமித்துள்ள ராணுவமும், சிறப்பு ராணுவச் சட்டங்களும் உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், காஷ்மீர் மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை இந்தியப்பெருநாடு ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. அழிவிற்கும், இழிவிற்கும் உள்ளாகி இருக்கிற காஷ்மீர் மக்களின் ஆற்றமுடியா சோகத்தில் தமிழர்களாகிய நாங்களும் பங்கேற்கிறோம் என்றும், காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு என்றென்றும் தமிழ்த்தேசிய இனம் உடன்பிறந்த சகோதரனாய் விளங்கும் எனவும் இதன்வாயிலாக நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக