ஞாயிறு, 5 ஜூன், 2016

கார்த்திக் சுப்புராஜ் vs தயாரிப்பாளர்கள்: பின்னணி என்ன?


ஜுன் 3ம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘இறைவி’ திரைப்படம், பார்வையாளர்களை திருப்தி படுத்தினாலும் தயாரிப்பாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதற்குக் காரணம், ‘இறைவி’ படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும். பார்க்காதவர்களுக்காக இந்த விளக்கம்.
‘இறைவி’ படத்தில், தயாரிப்பாளருடன் ஏற்படும் தகராறில் அவரை அவமானப்படுத்தி விடுகிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. இந்த கடுப்பில் அவர் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்று கிடப்பில் போட்டு விடுகிறார், அப்படத்தின் தயாரிப்பாளர். பெரும் போராட்டத்துக்குப்பின் தான் இயக்கிய படம் ரிலீஸாகாததால் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

முதலில் எஸ்.ஜே.சூர்யா மன்னிப்பு கேட்டால் படத்தை ரிலீஸ் செய்வதாக சொல்கிறார் தயாரிப்பாளர். முரண்டு பிடிக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, பின் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அந்த தயாரிப்பாளரோ, ‘வெறும் வார்த்தையால் கேட்டால் மட்டும் போதாது… என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சொல்ல, இப்படியாகப் பயணிக்கிறது படத்தின் கதை.
இந்நிலையில், ‘இறைவி’ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் நேற்று வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்காரு, அமைதிப்படை பார்ட் 2, லட்டு போன்ற படங்களின் தயாரிப்பாளரான சுரேஷ்காமாட்சி வெளியிட்ட அந்த அறிக்கையில், “உங்களின் இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு ஒரு பூங்கொத்து. சிறிய வயதிலேயே இயக்குநராகும், அதுவும் தயாரிப்பாளர் ஒருவர் மனது வைத்ததால் இயக்குநராகும் பாக்கியம் பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். அதுவும் மூன்றாவது படத்திலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்ட இயக்குநராவது எவ்வளவு பெரிய கொடுப்பினை? ஆனால், இதுக்கெல்லாம் காரணமான தயாரிப்பாளர் என்கிற ஒரு இனத்தை விஜி முருகன் என்பவரின் கதாபாத்திரத்தின் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளீர்கள்.
‘இதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்னு தெரியுமா’ன்னு கேட்பதில் ஆரம்பித்து அவரின் கடைசி நிமிடம் வரை தயாரிப்பாளர் என்பவன் படு கேவலமானவன். எந்த எல்லைக்கும் போவான். அவனால் ஒரு இயக்குநரோ, படைப்பாளியோ, அவன் குடும்பமோ வெகு சாதாரணமாக நசுக்கப்படும் என அடுக்கடுக்காக சேற்றை வாரி இறைத்துள்ளீர்கள். தயாரிப்பாளன் என்பவனுக்கு கதை ஞானமே கிடையாது என்பதைப் போன்ற எண்ணத்தை பார்ப்பவர்கள் மனதில் நன்றாகவே நஞ்சாகக் கலக்க முடிந்திருக்கிறது உங்களால்? கொலைகாரனாகவும் மாறுவான்; எடுத்துவைத்த படத்தை வேறொருவனை வைத்து புதுப்படமாக கொண்டு வரும் ஈனத்தனத்தையும் செய்வான் என்றெல்லாம் பெருமைப்படுத்தி விட்டீர்கள் கார்த்திக். இந்த படத்தைப் பார்த்தவனிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கைகுலுக்கையில் நான் ஒரு தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்த நேருமானால் அவனின் என்மீதான மரியாதை என்னவாக இருக்கும்? சொல்லுங்கள். எவனோ ஒருவன் உயிரைச் சிந்தி காசு எடுத்துட்டு வருவான். அவன் காசில் படமெடுத்துவிட்டு அவனையே காறி உமிழ்வது போன்ற காரியத்தை எப்படி செய்ய முடிந்தது உங்களால்? இத்தகைய காட்சிகளையும் வசனங்களையும் வைக்க உங்களின் தயாரிப்பாளர்கள் எப்படி சம்மதித்தார்கள்? ஏவிஎம் சரவணன் சார் மாதிரி பெரியவர்கள் இப்படத்தைப் பார்த்தால் எப்படி நொந்து போவார்கள்? தயாரிப்பாளர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதை ஒரு தயாரிப்பாளனாக வன்மையாகக் கண்டிக்கிறேன். எத்தனையோ பெரும் படைப்பாளிகளைக் கொண்டது இந்த இயக்குநர் சமூகம். அவர்கள் தயாரிப்பாளர்களை எப்படி மதித்து வந்திருக்கிறார்கள், இன்னமும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை மனத்தில் கொண்டு இயங்குங்கள். இன்றைய சூழலில் கதை சொன்னவர்களை நம்பி பணம் போட்டு, மீண்டும் வாழ்க்கையின் அடித்தட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆனால், ஒரு தயாரிப்பாளரால் கிடப்பில் போடப்பட்ட படம் அல்லது நடுத்தெருவுக்கு வந்த இயக்குநர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்? காட்சிப்படுத்துதல் முக்கியம் என்பதைவிடவும் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் கார்த்திக். அடுத்த படத்துக்கும் இன்னொரு தயாரிப்பாளரைத் தேடித்தான் போவீர்கள் என்பதுதான் இதில் மிகப்பெரிய முரண். போங்க. படம் பண்ணுங்க. ஆனால் கண்ணாடி வீட்டுக்குள்ளேயிருந்து கல்லெறியாதீங்க. நல்லதல்ல!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்த கோடம்பாக்க உதவி இயக்குநர்கள் ‘யார் அந்த தயாரிப்பாளர்?’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் கோடம்பாக்க வட்டாரத்தில் சகஜம் என்றாலும் பலர் இந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்தான் என்றே கூறுகின்றனர். ‘அந்நியன்’ படம் தயாரிப்பில் இருந்தபோது அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன், ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் ஒரு கதை சொல்லி, அதை நானே இயக்குகிறேன் என்று சொல்ல, ரவிச்சந்திரனும் ஓகே சொல்ல இப்படி தொடங்கியதுதான் ‘மாஸ்கோவின் காவிரி’ படம்.
ஆனால், ஏதோ ஒரு தகராறில் இருவருக்கும் சிக்கல் உண்டாக, ரவிவர்மன், ஆஸ்கார் ரவி ஆபீஸுக்கு நடையாக நடந்து ஒருவழியாக
இரண்டு வருஷத்துக்குப் பிறகு அவரை நேரில் சந்தித்து, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, அதன் பிறகே படம் ரிலீசானது. இந்த ஒரு சம்பவத்தால் மட்டும் யாரும் அது ரவிச்சந்திரன் என்று கூறவில்லை. தங்கர்பச்சனின் தென்றல், ஜெயம் ரவி நடித்த பூலோகம், கமலின் விஸ்வரூபம் -2 என்று இவர் கிடப்பில் போட்டு ரிலீஸ் செய்த, இன்னும் ரிலீஸ் செய்யாத படங்களுக்கு பின்னால் பல கதைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இறைவி’ படத்தில் தயாரிப்பாளர்களை கேவலப்படுத்தியதாக எண்ணி சுரேஷ்காமாட்சி உட்பட பல தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜுக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள்.
ஒரு இயக்குநர் என்ற முறையில் கார்த்திக் சுப்புராஜுக்கு தயாரிப்பாளர்களிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவமோ அல்லது திரைத்துறையில் உள்ள நண்பர்கள், இயக்குநர்கள் மூலமாக கேள்விப்பட்ட ஒரு செய்தியோ ‘இறைவி’ படத்தில் வரும் விஜி முருகன் என்ற தயாரிப்பாளர் பாத்திரத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
எது எப்படியோ, திரைத்துறையில் உள்ள அவலங்களைச் சினிமாவால் மட்டுமே வெளியே கொண்டு வர முடியும் என்ற வகையில் கார்த்திக் சுப்புராஜின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கதே. மேலும், இப்படியெல்லாம் சர்ச்சைகள் வரும் என்பதை உணராதவரல்ல கார்த்திக் சுப்புராஜ்.   minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக