செவ்வாய், 7 ஜூன், 2016

ராமதாஸ் : SRM பச்சமுத்துவின் பிரதிநிதி மதன்....இருவர்மீதும் மோசடி வழக்கு பதவு செய்யப்படவேண்டும் .

பச்சமுத்துவுடனான உறவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் மதன் என்பவர் முகவரி இல்லாத மிக மிகச் சாதாரண மனிதர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெபளியிட்டுள்ள அறிக்கையில், ”எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.


எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக மதனிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், தங்களுக்கு மருத்துவப்படிப்பில் இடமும் வழங்கப்படவில்லை; தாங்கள் கொடுத்த பணமும் இதுவரை திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறி சுமார் 50 பேர் சென்னை மாநகரக் காவல்துறையில்  புகார் அளித்துள்ளனர்.;

எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தங்கள் குழுமத்துக்கும், மதனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரது செயல்களுக்கு தங்கள் குழுமம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை.

ஏனெனில், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவுக்கு  மதன் எல்லாமுமாக இருந்திருக்கிறார். அவரது பெயரில் திரைப்பட நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் முதலீடு செய்து திரைப்படங்களை தயாரித்தும், வினியோகித்தும் உள்ளார். பச்சமுத்துவுடனான உறவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் மதன் என்பவர் முகவரி இல்லாத மிக மிகச் சாதாரண மனிதர் தான். இப்படிப்பட்ட சாதாரண மனிதரை நம்பி எவரும் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்துவிட மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்காக மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களின் பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி பச்சமுத்துவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையிடமும் பச்சமுத்து, மதன் ஆகிய இருவரின் பெயரிலும் தான் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக, தலைமறைவான மதன் எழுதி வைத்துள்ள கடிதத்தில்,‘‘மருத்துவப் பட்டப்படிப்பு, மேற்படிப்பு ஆகியவற்றுக்கு NEET நுழைவுத்தேர்வு உண்டு என்றாலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 102 இடங்கள் நிரம்பிவிட்டன. இதற்குக் காரணம் எனது உழைப்பு. நான் அனுப்பிய பட்டியலிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடமளிக்க வேண்டும். அவர்களிடம் வாங்கிய பணம் முழுமையாக உங்களிடம் (பச்சமுத்து) கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் மதனுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறுவது முழுப் பூசணிக்காயை  சோற்றில் மறைப்பதற்கு சமமானதாகும்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பும் பொறுப்பு மதனுக்கு  ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா மருத்துவ இடங்களும் மதன் மூலமே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதற்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் குறிப்பிட்ட தொகை மதனுக்கு தரகுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களை பிடித்து தருவதற்காக பல மாநிலங்களில் முகவர்களை மதன் நியமித்திருக்கிறார். மதனுக்கு உள்ள இத்தொடர்பு மூலம் தான் பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சமுத்து தொடங்கிய இந்திய ஜனநாயக கட்சி போட்டியிட முடிந்தது. இதை பல்வேறு ஊடக நேர்காணல்களில் பச்சமுத்துவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை பணம் வாங்கிக் கொண்டு சேர்க்கும் முகவராக மதன் செயல்பட்டார் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல்  பச்சமுத்து மற்றும் மதன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  சென்னை மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக தமது மூலம்தான் மாணவர் சேர்க்கை நடந்ததாகவும், 8 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை  பச்சமுத்துவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தமது கடிதத்தில் மதன் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மருத்துவப்படிப்பு  இடங்களை பணத்திற்கு விற்பனை செய்திருப்பது உறுதியாகிறது. இந்தச் செயல் இந்திய மருத்துவக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிரானது ஆகும்.

இத்தகைய முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அத்துடன், மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் குறித்து இந்திய மருத்துவக் குழு(MCI) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார் வெப்துனியா.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக