வியாழன், 9 ஜூன், 2016

சிறுநீரக மோசடி! கொல்கொத்தாவில் கைது.... ரானா ராஜ்குமார் ராவ் தெலுங்கான

கொல்கத்தா, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட திருரானா ராஜ்குமார் ராவை டெல்லி போலீசார் கொல்கத்தாவில் கைது செய்தனர். சிறுநீரக மோசடி இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்று பெரும் செல்வந்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் சிறுநீரக மோசடி சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் ‘நெட்வொர்க்’ அமைத்து ஒரு பெரும் கும்பல் செயல்பட்டு வருகிறது.


சிறுநீரகத்தை தானமாக பெறும் ஏழைகளுக்கு ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை கொடுக்கும் அந்த கும்பல், அந்த சிறுநீரகத்தை ரூ.30 முதல் ரூ.35 லட்சத்துக்கு வெளியில் விற்பனை செய்கிறார்கள். சில பெரிய மருத்துவமனைகளின் டாக்டர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர்.

கும்பல் தலைவன்

சில நேரங்களில் இந்த அறுவை சிகிச்சையின் போது சிறுநீரகம் வழங்கும் அந்த ஏழைகளுக்கு தெரியாமல் அவர்களின் 2 சிறுநீரகங்களையும் எடுத்து விடும் சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. இதனால் உயிரிழப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த கும்பலுக்கு தலைவனாக விளங்கி வந்த திருரானா ராஜ்குமார் ராவ் (வயது 38) என்பவரை கைது செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர்.

சுற்றி வளைத்தனர்

டெல்லியில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜ்குமார் ராவ் கொல்கத்தாவில் தங்கியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து கொல்கத்தா போலீசாரின் உதவியுடன் கிழக்கு கொல்கத்தாவின் ராஜர்கட் பகுதியில் அமைந்துள்ள ராஜ்குமாரின் வீட்டை டெல்லி போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு ராஜ்குமாரின் திருமணநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆடம்பர வாழ்க்கை

எனினும் போலீசார் அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்தனர். அவர் மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாக்கள் மாவட்டத்தின் பரசட் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தெலுங்கானாவை சேர்ந்த ராஜ்குமார் ராவ் கடந்த2 ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வந்துள்ளார். சிறுநீரக மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு அங்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

வெளிநாடுகளிலும் மோசடி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது வெளிநாட்டிலும் தனது கைவரிசையை காட்டி வந்ததாக போலீசார் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் டெல்லி போலீசார் கைது செய்த 2 பெண் சிறுநீரக கொடையாளர் மூலம் இது தெரியவந்தது.

ராஜ்குமார் ராவ் கைது செய்யப்பட்டதன் மூலம் சிறுநீரக மோசடி தொடர்பான பல்வேறு விவரங்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.   dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக