வெள்ளி, 10 ஜூன், 2016

திமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம்.. கோவை, நாமக்கல், நெல்லை...

கோவை மாநகர் வடக்கு, நாமக்கல் கிழக்கு, திருநெல்வேலி மேற்கு மாவட்டங்களின் திமுக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீரகோபால் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மு.முத்துசாமி கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செ.காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பார்.இளங்கோவன் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாள கி.துரைராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவ.பத்மநாபன் திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்கட்சி சீரமைப்பின் பின்னணி:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் (51.74 சதவீதம்) வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்களில் காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என 9 இடங்களில் (15 சதவீதம்) மட்டுமே வெற்றி பெற்றது.
திமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் 100-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர். 101 முதல் 1,000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் 8 தொகுதிகளிலும், 1,001 முதல் 5,000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் 21 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
இதற்கிடையில், திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 21-ம் தேதி சந்தித்தனர். திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் 33 இடங்களில் காங்கிரஸ் தோற்கும் நிலை ஏற்பட்டது என அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், திமுக செயற்குழு கூட்டம் கடந்த மே 24-ம் தேதி நடந்தது. கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு எதிராக எப்படியெல்லாம் வேலை செய்தார்கள் என்பதை, தோல்வி அடைந்த வேட்பாளர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "தேர்தலில் உள்கட்சி பூசலால் ஒருசில இடங்களில் தோல்வி ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதுபற்றி செயற்குழுவில் பலரும் தெரிவித்தனர். எதிரிகளைக்கூட மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.
தேர்தல் தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என தோல்வியடைந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இன்று கோவை மாநகர் வடக்கு, நாமக்கல் கிழக்கு, திருநெல்வேலி மேற்கு மாவட்டங்களின் திமுக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக