திங்கள், 13 ஜூன், 2016

குஷ்பூ நூல் வெளியிடுவதில் என்ன தவறு ? கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் திரைப்பட ஆளுமையும் “வெகுஜன அரசியல் தளத்தில் பாப்புலரான பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து ஆணாதிக்கத்தின் மீது எதிர்ப்புக் குரல் எழுப்பி வருபவருமான குஷ்பூ என் நூலை வெளியிட்டது குறித்து “ஒழுக்கியவாதிகள்” மத்தியில் பெரும் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. என்னிடம் நேரில் “நாங்கள் எப்பொழுதும் எங்கள் கருத்துக்களை நேரில்தான் பேசுவோம்” என்கிற ரீதியில் தங்களது புனித பிம்பங்களை முன்வைத்து என்னைக் கிண்டல் செய்தார்கள். ஒரு சிலர் என் காது பட பின்னால் பேசினார்கள் ஆரம்ப காலத்தில் பெண்களின் உடல்மொழியை முன்வைக்கும் பெண்ணியக் கவிதைகள் வெளிவந்தபோது இதுபோன்ற கலாய்ப்புகள் கேலி கிண்டல்களை முன்வைத்தவர்களின் தொடர்சியானவர்கள்தான் இவர்கள்.

இங்கே ஆண்கள் யாரை அங்கீகரிக்கின்றார்களோ அவர்கள்தான் பெண்ணியவாதிகள், பெண்ணியப் படைப்புகள்.. ஆண் மைய ஏதேச்சாதிகாரதிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வராத, ஆண்களிடம் அங்கீகாரத்திற்கு ஏங்குகிற, பெண்ணிய எழுத்துக்களுக்கு, முறுக்கேறிய நுனிமீசையிலிருந்து திறந்து கொள்ளும் அங்கீகாரம்.
பெண்ணிய எழுத்துக்களில் திறந்து கொள்ளும் உடல்களின் மொழி விகசிப்பை இரு ஆண் படைப்பாளிகள் (எல்லோரும் அல்ல. பெரும் பான்மையானவர்கள்) சந்தித்துக் கொள்ளும்போது அந்தமொழியின் வீரியத்தை நீர்த்துப் போகவைத்து கிளுகிளுப்பூட்டுகின்ற கவிதைகளாகவே பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.
குட்டிரேவதியின் “முலைகள்” என்ற (குழந்தைக்கு உணவூட்டும்) ஆண்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பு, அவரது கவிதையில் ஒரு Metaphor ஆக மாறுகிறது. “தேங்கித் ததும்பும் இரு கண்ணீர்த் துளிகள்” 2000 வருடக் கவிதா நீட்சியில் புத்தம்புதிய கருத்துரு.
அதே போல சல்மாவின் “எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி” என்கிற கருத்துருவில் சர்வதேச கவிதா தரிசனமாக நீள்கிறது.
சாரா என்கிற தற்கால இளம் பெண் கவிஞரின் “ஏழாமவன் என்னைப் புணர்ந்தபோது..” என்கிற மிக அற்புதமான கவிதை குறித்து பலரும் கலாய்த்ததை நான் அறிவேன்.
கடந்த 15 வருடங்களில் பெண் எழுத்துதான் தமிழை உலக அரங்குகளுக்குக் கொண்டு சேர்த்தது. ஜெயமோகன் போன்றவர்களின் தலையணை எழுத்துக்கள் அல்ல. அவர் பெண் படைப்பாளிகளைப் பார்க்கும் பார்வையை மாற்றி அவர்களது மொழியில் தாமும் கவனம் செலுத்தினால் தமிழில் தீவிர இலக்கிய எழுத்தாளராக வரமுடியும். இலையெனில் இப்பொழுதுள்ள பாபுலர் தளத்திலேயே தட்டாமாலை சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
மேலும் ஒன்று: நேற்று எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழியாக்கமான “பெருந்தச்சன்” நூலை திரைப்பட நடிகர் திரு.பிரதாப் போத்தன் வெளியிட பாபுலர் கலாசார நிகழ்வுகளை வெறுத்தொதுக்கும் தீவிர இலக்கிய எழுத்தாளர் திரு.கோணங்கி பெற்றுக் கொண்டார். இது மாபெரும் இலக்கிய நிகழ்வாக “ஒழுக்கியவாதிகளால் ” கொண்டாடப் படுகிறது.
என்ன ஒரு கொடுமை பாருங்கள்.. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மலையாள நடிகர் வெளியிட்டால் அதி இலக்கியம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தமிழ் நடிகை வெளியிட்டால் அது ஆபாசமான கிண்டல் பேச்சு.
இதுதான் ஒழுக்கியவாதிகளின் ஆண் மைய அதிகாரத்தின் வக்கிரம்.
கடந்த 50-60 வருடங்களாக ஆண்களுக்குப் போதிய வாய்ப்பு வழங்கியாகி விட்டது..
இனி பெண்களின் மொழி தான் இலக்கியத்தைத் தீர்மானிக்கும். அதுவும் ஆண்களால் அங்கீகரிக்கப் படாத, கிண்டல் செய்யப்படுகின்ற, தீவிரமான நி்ஜமான பெண்ணியக் கருத்துக்கள்.
அது மட்டுமல்ல.. உங்கள் புனித பிம்பங்கள் உடைபடும் காலம் இது. அடுத்த இளம்தலைமுறை வந்து விட்டது. இனிமேல் உங்கள் “ஒழுக்கிய” பருப்பெல்லாம் வேகாது…
கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்; அண்மையில் வெளியான இவருடைய நூல்கள்: முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், சங்க கால சாதி அரசியல். இரண்டும் எதிர் வெளியீடுகள்.   thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக