ஞாயிறு, 5 ஜூன், 2016

அன்பழகன் : தி.மு.க. தோல்விக்கு எதிர்க்கட்சிகள் காரணமல்ல. தி.மு.க.,வினர் தான் காரணம்.ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

கருணாநிதி சொல்வதை வேதவாக்காக கருதி செயல்பட்டிருந்தால், தோல்வியை தழுவி இருக்க மாட்டோம்' என, தி.மு.க., பொது செயலர் அன்பழகன் பேசிய பேச்சு, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று முன்தினம் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசும் போது, 'தி.மு.க., தோல்விக்கு எதிர்க்கட்சிகள் காரணமல்ல. தி.மு.க.,வினர் தான் காரணம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கருணாநிதியின் அறிக்கை, தீர்மானம், பேச்சு, அறிவுரையை யாரும் புறக்கணிக்கக் கூடாது. அப்படி புறக்கணித்தால், அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். கருணாநிதி சொல்வதை வேதவாக்காக கருதி செயல்பட்டிருந்தால், தோல்வியை தழுவி இருக்க மாட்டோம்' என்றார்.

சட்டசபை தேர்தலை, வியூகம் வகுத்து சந்தித்தது ஸ்டாலின் தான். அவர் விருப்பப்படி தான், வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட எல்லாமே நடந்தது என்பதால், அன்பழகன், ஸ்டாலினை குறிவைத்தே இப்படி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலை, தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் எதிர் கொண்டார். கூட்டணி அமைப்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் அவர் தான் தீர்மானித்தார்.
கொங்கு ஏரியாவில் செல்வாக்குள்ள கட்சிகளை கூட்டணியில் சேர்க்காமல் விட்டது, தமிழர் வாழ்வுரிமை கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றை புறக்கணித்தது எல்லாம் ஸ்டாலினின் தவறு. வைகோவே, முதலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற விருப்பப்பட்டார். ஸ்டாலின் அணுகுமுறையாலே, அவர் மூன்றாவது அணியை அமைத்ததோடு, விஜயகாந்தையும் தன் பக்கம் இழுத்துச் சென்றார்.
இதனாலேயே, பல தொகுதிகளில் தி.மு.க., தோற்றது. இதையெல்லாம் மனதில் வைத்து தான், அன்பழகன், கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசினார். இது ஸ்டாலின் தரப்பினரை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.- நமது நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக