செவ்வாய், 7 ஜூன், 2016

மாயாவதி காங்கிரசுடன் புதிய உறவு? பாஜகவுக்கு எதிரான நகர்வு...

மூன்று மாநிலங்களில், பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தோல்வியுற செய்யும் வகையில், மாயாவதியுடன், காங்., ரகசியமாக கைகோர்த்து உள்ளதால், ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்., அரசை கவிழ்ப்பதற்கு, பா.ஜ., தரப்பில் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரை வளைத்தும் கூட, தன் முயற்சியில் பா.ஜ., தோல்வியடைந்தது. அதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததே காரணம்.
மிகவும் இக்கட்டான அந்த சூழ்நிலையில், காங்கிரசை, மாயாவதி காப்பாற்றியதற்கு காரணம், விரைவில் வரப்போகும் உ.பி., சட்டசபை தேர்தல் தான்.
பா.ஜ.,வுக்கு, எந்தவொரு விஷயத்தில் ஆதரவை தெரிவித்தாலும், அது உ.பி., சட்டசபை தேர்தலில், தன் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என, கணக்கிட்டதாலேயே, அவ்வாறு மாயாவதி செய்தார்.
இந்நிலையில், தன் பா.ஜ., எதிர்ப்பை மீண்டும் காட்டுவதற்கு, மாயாவதிக்கு மற்றொரு வாய்ப்பாக, ராஜ்யசபா தேர்தல் கிடைத்துள்ளது. பலரும் போட்டியின்றி தேர்வாகிவிட்டாலும், சில மாநிலங்களில், கூடுதல் ஓட்டுகளை குறிவைத்து, சிலரை சுயேட்சை வேட்பாளர்களாக, பா.ஜ., களமிறக்கி உள்ளது. காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
உத்தரகண்ட், ம.பி., - உ.பி., ஆகிய மூன்று மாநிலங்களிலும், காங்., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு, வேறு கட்சிகளை சேர்ந்த, ஒருசில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த மாநிலங்களில், மாயாவதி கட்சிக்கு கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், அவர்களின் ஆதரவை காங்., மேலிடம் கோரியுள்ளது. மாயாவதியும், இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். இதனால், இந்த மாநிலங்களில், காங்., சார்பில், ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
பா.ஜ., சார்பில் சுயேச்சையாக களமிறக்கப்பட்டவர்கள், தோல்வியடையும் நிலை உருவாகி உள்ளது. மாயாவதியின் இந்த அதிரடி அரசியல், பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது டில்லி நிருபர்  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக