புதன், 22 ஜூன், 2016

தீவிரமடையும் வழக்கறிஞர் போராட்டம்


வழக்கறிஞர்களை தண்டிக்கும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கும் வழக்கறிஞர் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், இந்த சட்டத் திருத்தத்தை வாபஸ்பெறக் கோரியும், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நாளை பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம் கடந்த 19ஆம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும்விதமாக, “வழக்கறிஞர் சட்ட விதிகளில், செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்கீழ் வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உயர்நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதனால் அதை ஏற்றுக்கொண்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். திங்கட்கிழமை முதல் பணிக்குத் திரும்பவேண்டும்” என்றார். தமிழகத்தில் உள்ள 10 வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு அவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் இருக்காது என்பதையும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான பால் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை சந்தித்துப் பேசியபின்னர் வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை இருக்காது. எனவே, வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கையை வலியுறுத்தினார்.

ஆனால் தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கையையும் சரி, பால் கனகராஜ் கோரிக்கையையும் சரி, தமிழகம் முழுக்க உள்ள வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தைத்தவிர கீழ் நீதிமன்றங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. ஈரோட்டில் கூடிய வழக்கறிஞர்கள் ”வழக்கறிஞர்களை தண்டிக்கும் சட்டம் அமலில் இருக்கும்போது, அந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மட்டும் எடுக்கமாட்டோம் என்று நீதிபதிகள் வாய்மொழி வாக்குமூலம் அளிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்தச் சட்டம் கைவிடப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என அறிவித்தனர்.
இது நீதித்துறைக்கு பெரும் நெருக்கடியாக உருவாகியுள்ளநிலையில், அகில இந்திய பார் கவுன்சில் இணைச் செயலாளர் அசோக் குமார் பாண்டே தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், “எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலில்படி, தமிழ்நாட்டில் உள்ள சில பார் கவுன்சில்களும், பார் கவுன்சில் சங்கப் பிரதிநிதிகளில் சிலரும் பொறுப்பற்றமுறையில் நடப்பதாகத் தெரிகிறது. பார் கவுன்சிலை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் இவர்களை பார் கவுன்சில் ஒருபோதும் அனுமதிக்காது. நீதிமன்றத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போராடுகிறவர்களின் பெயர் விபரங்களை எடுத்து அந்த அறிக்கையை ஜுன் 22ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்” என்றும் கடிதம் எழுதியுள்ளார். இது வழக்கறிஞர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
அச்சுறுத்தும்விதமாக உள்ள இந்தக் கடிதமும், தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜுக்கு எதிராகவும் தமிழக வழக்கறிஞர்கள் திரும்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே பால் கனகராஜுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.முரளி இதுபற்றி கூறும்போது, “சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருக்கும் பால் கனகராஜின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர் நீட்டிக்கப்பட்ட காலத்தில்தான் இப்போது பதவியில் உள்ளார். பதவிக்காலம் முடிந்த ஒரு நபர் வழக்கறிஞர்கள்மீதான அடக்குமுறைச் சட்டத்துக்குத் துணைபோவதும், வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரச்சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நாளை காலை 10 மணிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்ட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வழக்கறிஞர்கள் சுமார் 500 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். அப்படி செயற்குழுவை கூட்டாதபட்சத்தில் வழக்கறிஞர்கள்மீதான அடக்குமுறைச் சட்டத்தை கைவிடக்கோரியும், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலின் அறிவிப்பையும், அகில இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பையும் வாபஸ்வாங்கக் கோரியும் போராட்டம் நடத்துவோம்” என்றார் முரளி.
நாளுக்கு நாள் வழக்கறிஞர்கள் பிரச்னை மூர்க்கமாகிவரும்நிலையில், சட்டம் மற்றும் நீதித் துறைக்கான மத்திய அமைச்சர் திரு சதானந்த கௌடா, “தமிழ்நாட்டில் நீதிமன்றத்துக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளை பேசித் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருந்து சில வழக்கறிஞர்கள் என்னைச் சந்தித்து புதிய சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும், இந்திய பார் கவுன்சிலும் இணைந்து பேசி ஒரு வாரத்துக்குள் இந்த பிரச்னைக்கு முடிவு காணப்படும்” என்றார் அமைச்சர்.

தமிழகத்தின் எந்த சமூகப் பிரச்னை, தமிழகம் தழுவிய பிரச்னையாக இருந்தாலும் முதன்முதலாக வீதிக்கு வருகிறவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும்தான். அவர்களையே சட்டம்போட்டு ஒடுக்கிவிட நினைப்பதை சிறுபிள்ளைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதிக சுயமரியாதை உள்ளவர்களும் முற்போக்காளர்களுமே வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் நாளை நீதிபதிகளாக இந்த நீதிமன்றங்களையும் பார் கவுன்சில்களையும் அலங்கரிக்கப் போகிறார்கள். அவர்களோடு மோதல்போக்கை கைவிட்டு பிரச்னையை சுமூகமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே நீதிக்காக நீதிமன்றங்களின் வாசலில் காத்துக்கிடக்கும் பாமர மக்களின் விருப்பமாக இருக்கிறது.  minnambala.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக