செவ்வாய், 14 ஜூன், 2016

வழக்கறிஞர்களும் பிராஸ்ட்டிட்யூட்டுகளும் : மார்க்கண்டேய கட்ஜு


அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்ததற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த திருத்தத்தைத் திரும்பப்பெறும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், ஊடகங்கள் என்று அனைவரையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட ஸ்டேட்டஸ் நமது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை உசுப்பிவிட்டிருக்கிறது. மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் விபச்சாரிகளும்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதாவது:

“நான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு பல வழக்கறிஞர்கள் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை பரிந்துரைத்து அனுப்பினேன். என்னுடைய அந்த பட்டியலில் திமுக-வுக்கு ஆதரவான வழக்கறிஞர்களின் பெயர்கள் இல்லாததால் அதில் திமுக-வுக்கு மகிழ்ச்சி இல்லை. (அந்தப் பட்டியலில் அதிமுக-வுக்கு ஆதரவான வழக்கறிஞர்களும் இல்லை) அப்போது காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசில் திமுக அதிகாரத்தில் இருந்தது. அதனால், இந்த நியமனத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆறு மாதங்களாக இந்த விஷயத்தைக் கிடப்பில் போட்டிருந்தார்கள். நான் பரிந்துரைத்திருந்த வழக்கறிஞர்கள் பெயர்களில் உள்ளவர்கள் (தற்போது ஒருவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கிறார். மற்றொருவர் தமிழர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருக்கிறார்) ஒருநாள் என்னைச் சந்திப்பதற்கு என்னுடைய இல்லத்துக்கு வந்தார்கள். என்னிடம் அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையைக் கூறினார்கள். நான் அவர்களுடைய பெயர்களை பரிந்துரைத்து பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர்கள், ‘இதுவரைக்கும் நியமனம் செய்யப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடைய வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் வழக்கு நடத்த வருவதை கட்சிக்காரர்கள் நிறுத்திவிட்டார்கள். இவர்கள், விரைவாக நீதிபதியாகப் போகிறார்கள். அதனால், இவர்களுக்குக் கொடுக்கிற வழக்கறிஞர் கட்டணம் வீணாகப்போகும் என்பதால் அவர்கள் மற்றொரு வழக்கறிஞரிடம் போகிறார்கள்’ என்றார்கள். இதைக் கேட்டபிறகு நான், அவர்களுக்கு ஒரு கதை சொன்னேன். ஒரு ஊரில் ஒரு விபச்சாரி இருந்தாள். ஒருநாள் அவள் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தாள். அதனால் அந்த ஊரில் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், பின்னர் அந்த கல்யாணம் நின்றுபோனதால், கல்யாண அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டது. அதனால், அவளும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. மேலும், அவளுடைய எல்லா வாடிக்கையாளர்களையும் இழந்துவிட்டாள். அந்த விபச்சாரி மாதிரிதான் அவர்களும் இருக்கிறார்கள் என்று அந்த வழக்கறிஞர்களுக்குச் சொன்னேன். இதைக்கேட்ட வழக்கறிஞர்கள்,
‘தலைமை நீதிபதியே என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் வருத்தமாக இருக்கிறோம். எங்களை ஒரு விபச்சாரியுடன் ஒப்பிடுகிறீர்களே’ என்றார்கள்.
நான் அதனை அவர்களுக்கு ஒரு நகைச்சுவையாகத்தான் பதிலளித்தேன். பிறகு இந்த வழக்கறிஞர்கள் உண்மையில் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தது. அதன் பிறகே இவர்களுடைய நியமனத்துக்கு உத்தரவிட்டது’ என்று எழுதியிருக்கிறார்.
ஒரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞர்களைப் பாலியல் தொழிலாளியோடு ஒப்பிட்டு கதை சொல்லியிருப்பது வழக்கறிஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞருமான ராஜூ கூறுகையில், ‘மார்க்கண்டேய கட்ஜுவின் இந்தப் பதிவை பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர், டெல்லியில் ஒன்று பேசுவார். இங்கே வந்து ஒன்று பேசுவார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தம் பற்றி ஏதாவது பேசியிருந்தால் நாம் பேசலாம். இதை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை’ என்றார்.
கட்ஜுவின் இப்பதிவு குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் கூறுகையில், ‘நீதிபதிகள் நியமனத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுகிறார்கள் என்று ஏற்கெனவே இவர் சொன்னதுதான். இது ஒன்றும் புதுசு இல்லை. இதையெல்லாம் மார்க்கண்டேய கட்ஜு நீதிபதி பதவியில் இருக்கும்போது பேச வேண்டியதுதானே. ஏன் ஓய்வு பெற்ற பின்னர் பேசுகிறார்? அப்போது பேச தைரியம் இல்லை. அதனால், இவர் முதுகெலும்பு இல்லாத நீதிபதி என்றெல்லாம் நாம் சொன்னதுதான். இவர் வெற்று வாய்ச்சவடால் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால், இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை’ என்று கூறினார்.
தமிழக வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் இப்பதிவு வழக்கறிஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக