திங்கள், 6 ஜூன், 2016

குஜராத் கலவரம்: உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி

குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர். இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார்.

தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், தன் மகளுடன் ஜாஃப்ரியின் இல்லத்தில் அடைக்கலமாகியிருந்தார். அப்போது இஸான் ஜஃப்ரி பலரிடம் தொலைபேசியில் பேசி இந்தக் கொலை தாண்டவத்தை நிறுத்த மன்றாடியதை நேரில் பார்த்தவர்.

“என் மகனும் மகளும் அந்த நாளில் என்னோடு இருந்தனர். அந்தக் குடியிருப்பு முழுக்க அப்போது எரிந்து கொண்டிருந்தது. நான் என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தேன். என் மகள், என் மகனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். எங்கள் சமயலறை மட்டும் எரியவில்லை; அதுவும் கூடிய விரைவில் தீப்பற்றிக் கொண்டது.
உயிரோடு எரிந்து சாவதைவிட, வெட்டிக் கொல்லப்படுவது மேல் என்று நினைத்து வெளியே வந்தோம். அப்போது பலர் இஸான் ஜஃப்ரியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். அவர் வீட்டின் முதல் மாடியில் இருந்தோம். அப்போது அவர் பலமுறை நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேச முயற்சித்தார். நாங்கள் மோடியிடம் பேசும்படி வலியுறுத்தினோம்.
இறுதியாக மோடி, இஸான் ஐயாவின் அழைப்பை எடுத்துப் பேசினார், “நீங்கள் இன்னும் இறக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று மோடி பேசினார்.
அந்த நேரத்தில் குடியிருப்பின் வாயிற் கதவுகளின் மேல் ஏறி குண்டர்கள், எங்களை நெருங்க ஆரம்பித்தார்கள். வேறு வழியில்லாமல் இஸான் ஜஃப்ரி எங்களைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களுடன் பேச வெளியே சென்றார்.
ஆனால், குண்டர்கள் அவரை இழுத்துச் சென்று அடித்து உதைத்தார்கள். அவர் மேல் பெட்ரோல் ஊற்றி அவரை உயிருடன் கொளுத்தினார்கள். எல்லா இடங்களிலும் தீ பற்றி எரிந்ததால் எங்களால் மூச்சு விடமுடியவில்லை. எனவே ஜாஃப்ரியின் வீட்டை வீட்டு வெளியேறினோம். அங்கிருந்து தப்பிக்கும்போது, கீழே சிதறிக்கிடந்த உடல்கள் தடுக்கி கீழே விழுந்தோம். அப்போதுதான் என் மகன் எங்களை விட்டுப் போனான்.
நான் மயங்கி விழுந்துகிடந்தேன். என் மகள் என்னை உலுக்கினாள். எழுந்தபோது என் முகத்தில் தீக் காயம் பட்டிருந்தது. ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறினோம். அப்போது ஒரு காவலரைப் பார்த்தேன். அவர் என் மீது கல்லெறிந்தார்.
எல்லா பக்கங்களில் இருந்தும் எங்களை நோக்கி ஆசிட் பாட்டில்கள், எரியும் டயர், நெருப்பு பந்துகள் வந்துகொண்டிருந்தன. நான் மக்கள் அலறுவதைக் கேட்டேன், கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. ஒரு சின்னப் பெண், நினைவின்றி விழுந்துகிடந்தாள். அவளுக்கு உதவ நினைத்தேன். ஆனால், என் கை, கால் எல்லாம் தீக்காயம் பட்டிருந்தது. என்னால் நகர முடியவில்லை. மாடியில் கிடந்தபோதுதான் என் மகன் என்னுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் எழுந்து கீழே போக எத்தனித்தேன், மற்றவர்கள் என்னைத் தடுத்தார்கள். கலவரக்காரர்கள் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்பதால் என்னை அவர்கள் போக விடவில்லை”.
இஸான் ஜஃப்ரி யார் என்றே தனக்குத் தெரியாது என புலனாய்வு குழு முன் சொன்னார் மோடி. ஆனால், மோடிக்கு ஜாஃப்ரியை நன்றாகத் தெரியும் என்கிறார் ரூபா பென். இஸான் ஜஃப்ரியின் தொலைபேசி பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர் யார் யாரையெல்லாம் தொலைபேசியில் அழைத்து பேசினார் என்கிற விவரங்கள் கிடைக்கப் பெறவேயில்லை.
நன்றி: கேட்ச் நியூஸ்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக