செவ்வாய், 7 ஜூன், 2016

அறிவாலய விசாரணையில் ஐவர்?

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வில் மறுசீரமைப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. ‘ ஒன் மேன் ஆர்மி என்ற பெயரில் ஸ்டாலின் பயணத்தை வடிவமைத்தவர்களின் குளறுபடிகளும் தோல்விக்குக் காரணம்’ என்கின்றனர் தி.மு.க.வின் சீனியர்கள்.

தி.மு.க.வின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மரபுகளை மாற்றி பிரசாரம் செய்ததில், ஓ.எம்.ஜி என்று சொல்லப்பட்ட ஒன் மேன் குரூப் அணிக்குப் பெரும் பங்கு உண்டு. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையில் தேர்தல் களத்தில் புகுந்து விளையாடியது இந்த டீம். ‘ நமக்கு நாமே பயணம்’, ‘முடியட்டும் விடியட்டும்’ என்ற பெயரில் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஓ.எம்.ஜி பெரும்பங்கு வகித்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ” மோடியின் வெற்றிக்குக் காரணமான விளம்பர யுக்தியை இந்தத் தேர்தலில் செயல்படுத்திப் பார்க்கத்தான், ஓ.எம்.ஜி என்ற தனி குரூப்பைக் கொண்டு வந்தார் ஸ்டாலின்.

விளம்பரத் துறையில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துக் கொண்டு பிரசாரத்தை வடிவமைத்தார்கள். ஸ்டாலின் சென்ற இடங்களில் மேடை வடிவமைப்பு உள்பட நவீன யுக்திகளோடு பிரசாரத்தை வடிவமைத்தார்கள். இது ஓரளவுக்கு எடுபடவும் செய்தது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் முக்கிய நிர்வாகிகளை இந்த டீம் பொருட்படுத்தவில்லை. வேட்பாளர் தேர்வு, களநிலவரம் உள்ளிட்டவற்றைத் தீர்மானிப்பதில் இந்த அணி தோற்றுவிட்டது. சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவக் காரணமே, உள்ளூர் நிர்வாகிகளை ஓ.எம்.ஜி புறக்கணித்ததுதான்” என்றார் ஆதங்கத்தோடு.
தி.மு.க.வில் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகி ஒருவர், ” கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ‘ தேர்தல் தோல்விக்கு மாவட்ட நிர்வாகிகள்தான் காரணம்‘ என வேட்பாளர்கள் பலரும் குமுறிக் கொந்தளித்தனர். குற்றச்சாட்டு கூறிய அனைவரிடமும் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை எழுதி வாங்கியிருக்கிறார் ஸ்டாலின். ‘ மாவட்ட, ஒன்றிய, வட்ட, வார்டு உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்களில், யார் யார் அ.தி.மு.க.வுக்கு வேலை பார்த்தார்கள்? களத்திற்கு வராமல் உள்ளடி செய்தவர்கள் யார்? என விரிவான பட்டியலைத் தயாரித்துவிட்டார்கள்.
குன்னம் தொகுதியில் தனது நண்பர் துரைராஜ் என்பவருக்கு ஆ.ராசா சீட் வாங்கிக் கொடுத்துவிட்டு, சிவசங்கரை வேறு தொகுதிக்கு மாற்றியது, பெரம்பலூர், அரியலூரில் கிடைத்த தோல்விகள், குன்னூரில் மெஜாரிட்டி படுகர் சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனை நிறுத்தாமல், முபாரக்கை நிறுத்தியது, சுமார் 24 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்கக் காரணமானவர்கள் யார்? என தொகுதிவாரியாக மாவட்ட நிர்வாகிகள் செய்த குளறுபடிகள் அலசி ஆராயப்பட்டு வருகிறது. விசாரணை வளையத்தில், ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கோவை வீரகோபால், பொங்கலூர் பழனிச்சாமி, ஈரோடு என்.கே.கே.பி.ராஜா என பல முன்னணி நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் மீது கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு அதிகம்” என்கிறார் அவர்.
‘அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, தேர்தலில் உண்மையாக வேலை பார்த்த தொண்டர்களுக்குக் கொடுக்கப்படும் வெகுமதியாக இருக்கும்’ என்கின்றனர் உடன்பிறப்புகள்.
ஆ.விஜயானந்த்
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக