வெள்ளி, 17 ஜூன், 2016

இந்தியாவுக்கு ஆதரவான மசோதா அமெரிக்க செனட்டில் தோல்வி

இந்தியாவை உலகளாவிய ராணுவக் கூட்டாளியாக சேர்ப்பது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட்டில் தோல்வியடைந்தது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் விளக்கமளித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
அமெரிக்க செனட் அவையில் இந்தியாவுக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்பது ஊடகச் செய்திகள் மூலம்தான் வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தை வடிவமைக்கும் பணி இப்போதுதான் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது.

எனவே, இப்போது உடனடியாக சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அவசரமானது.
இந்தியாவை நெருங்கிய ராணுவக் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள அமெரிக்கா எடுத்த முடிவை இனிமேல்தான் தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவிக்கும் வகையில்தான் அது தொடர்பான ஓர் அம்சம் செனட் அவையில் கொண்டுவரப்பட்டது என்றார் அவர்.
முன்னதாக, இந்தியாவை ராணுவக் கூட்டாளியாக சேர்ப்பதற்காக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு செனட் அவையில் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் அந்தமசோதா தோல்வியடைந்தது.
இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு: அமெரிக்க செனட் ஒப்புதல்
வாஷிங்டன், ஜூன் 16: இந்தியாவுடன் மேம்படுத்தப்பட்ட ராணுவ ஒத்துழைப்பை அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. குரல் வாக்கெடுப்பு மூலம், இந்த மசோதா நிறைவேறியது.
"இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு' என்ற தலைப்பில், சட்டத்திருத்த மசோதாவை அவை உறுப்பினர் ஜான் சுல்லிவன் தாக்கல் செய்தார். அந்த மசோதாவை அனைத்து செனட் உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரித்து வாக்களித்தனர். அந்த மசோதாவில், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக ஆய்வு செய்தல், ராணுவக் கொள்கைகள், முக்கிய விவகாரங்களில் திட்டமிடல், ராணுவத் தளவாடங்களில் பரஸ்பர ஆதரவு, பேரிடர்க் காலங்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்திய ராணுவத்துடன் அமெரிக்க ராணுவம் இணைந்து செயல்படுவதை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக