வியாழன், 30 ஜூன், 2016

வினுப்பிரியவின் கொலையாளி : காதலை ஏற்காததால் ஆபாசமாக மாப்பிங் செய்தேன்

சேலம்,:'பேஸ்புக்'கில் வினுபிரியாவின் புகைப்படத்தை, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவன் கைது செய்யப்பட்டான். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மோட்டூர் புவனகிரி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 46. அவரது மகள் வினுபிரியா, 21. கடந்த, 16ம் தேதி, பேஸ்புக்கில், வினுபிரியாவின், 'மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச புகைப்படம், பரவியது. இது குறித்து, புகார் அளித்த வினுபிரியாவின் பெற்றோர் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.மார்பிங் ஆபாச படம் தொடர்ந்து, பரவி வந்ததால், மனமுடைந்த வினுபிரியா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   அம்மா, அக்கா, தங்கச்சி யாரேனும் இருந்து இவன் சொன்னதைக் கேக்கலேன்னா அவங்க படத்தையும் மார்பிங் செய்து போடுவானா ????

இந்த தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, வினுபிரியாவின் பெற்றோரும், தன்னார்வ அமைப்புகளும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். எஸ்.பி., அமித்குமார் சிங் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நேற்று முன்தினம் வினுபிரியாவின் உடலை பெற்று, அடக்கம் செய்தனர்.வினுபிரியாவின் மார்பிங் ஆபாச படத்தை, பேஸ்புக்கில் பரப்பிய, சேலம் மாவட்டம், கல்பாரப்பட்டியைச் சேர்ந்த, பழனிசாமியின் மகன் சுரேஷ், 21, நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டான்.
போலீசின் பிடியில் சிக்கிய சுரேஷ், அனைத்து உண்மைகளையும் தெரிவித்து, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தான். தொடர்ந்து, சுரேஷிடம் நடத்திய விசாரணைக்கு பின், சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.
சேலம் எஸ்.பி., அமித்குமார் சிங் கூறியதாவது: ஜூன், 24ம் தேதி முதல், வினுபிரியாவின் மார்பிங் படம் குறித்து, விசாரணையை துவக்கினோம். எந்த மொபைல் போனில் இருந்து, 'அப்லோட்' ஆனது என்பதை கண்டறிந்து, குற்றவாளி உறுதி
செய்யப்பட்டான். வினுபிரியாவின் மீது ஏற்பட்ட ஒருதலை காதலால், சுரேஷ், இந்த விபரீத செயலை அரங்கேற்றி உள்ளான். தன் செயலை போலீசில் ஒப்புக்
கொண்டுள்ளான். அவனிடமிருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மட்டுமே குற்றவாளி என்பது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், விசாரணை தொடர்ந்து
நடத்தப்படும். வினுபிரியாவை பழிவாங்கும் நோக்கில் தான், மார்பிங் படத்தை பரப்பி உள்ளது தெரிய வந்துள்ளது. அவன் மீது, தற்கொலைக்கு துாண்டியது, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது
உட்பட நான்கு பிரிவுகளிலும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வினுபிரியாவுக்கு வலைவீசிய 4 பேர்

வினுபிரியா, பேஸ்புக் மூலம் தன் நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இதில், முதல் ஆளாக வந்தவர் மேட்டூரை சேர்ந்த முகம்மது சித்திக், ௨௧. இருவரும், நெருங்கி பழகி உள்ளனர். பின், தனுஷ் என்பவர், வினுபிரியாவுக்கு வலை வீசியுள்ளார்.
அவரிடமும் வினுபிரியா பிடி கொடுக்காததால், அடுத்ததாக, வந்தவர் குமார். அவரிடமும் வினுபிரியா சிக்கவில்லை. கடைசியாக சுரேஷ் களம் இறங்கினான். இவனின் காதலையும் வினுபிரியா ஏற்காததால் தான் விபரீதம் அரங்கேறி உள்ளது.

சைபர் க்ரைம் ஏட்டு 'சஸ்பெண்ட்'

வினுபிரியாவின் பெற்றோர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, ஏட்டு சுரேஷ்குமார், 2,000 ரூபாய் மதிப்புள்ள புதிய மொபைல் போனை, வினுபிரியாவின் பெற்றோரிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து, சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், விசாரணை நடத்தி, நேற்று மதியம், போலீஸ் கமிஷனர் சுமித் சரணிடம் அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில், சைபர் க்ரைம் ஏட்டு, சுரேஷ்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார்.


'போலீசார் மீது பொய் புகார்'

வினுபிரியா தற்கொலை விவகாரத்தில் போலீசார் மீது எழுந்த புகார் குறித்து, சேலம் எஸ்.பி., அமித்குமார் சிங் கூறியதாவது:
வினுபிரியாவின் பெற்றோர், முதன் முதலாக என்னை சந்தித்து புகார் அளித்த போது, வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அவரை
உடனடியாக பிடித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், 'வினுபிரியாவுக்கு நிச்சயம் செய்ய உள்ளதால், அவசரம் காட்ட வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்தனர். அதே போல், 'மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், டி.எஸ்.பி., கந்தசாமி ஆகியோரை விசாரணைக்காக மோட்டூருக்கு வரவேண்டாம்' என, பெற்றோர் தெரிவித்தனர். நாங்கள் உரிய முறையில், தேவையான நடவடிக்கை மேற்கொண்டோம். ஆனால், அவர்கள், 'போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை' என, பொய் புகார் கூறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.


கைது எப்படி?

வினுபிரியாவின், 'மார்பிங்' படம் பேஸ்புக்கில் எப்படி வெளியானது என்ற விசாரணையில், போலீசார் இறங்கினர். இதில், ஏர்செல் நிறுவனத்தின் சிம்கார்டு மூலமே பரப்பப்பட்டுள்ளது என, கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் காலை, ௧௧:௦௦ மணி: அந்த நிறுவனத்தின் மும்பை, டில்லியில் உள்ள உயரதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டனர்.
மதியம், 2:00 மணி: 80 ஐ.பி., எண்களை கொண்ட எட்டு பக்க பட்டியல், 'மெயில்' மூலம் சேலம் மாநகர போலீசாருக்கு கிடைத்தது. சங்கிலி தொடர் போல், எண்கள் இருந்ததால், மார்பிங் படத்தை முதலில் பரப்பிய நபரை கண்டறிய, மீண்டும் ஏர்செல் நிறுவனத்தின் உதவியை போலீசார் நாடினர். மாலை, 3:40 மணி: குற்றவாளி குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. மாலை, 4:00: தனிப்படை, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியில் முகாமிட்டு, சுரேஷின் நடவடிக்கையை கண்காணித்தது.
இரவு, 9:45 மணி: வீட்டுக்கு சுரேஷ் வந்தான். இரவு, 11:15 மணி: வீட்டில் துாங்கிய சுரேஷை போலீசார், தட்டி எழுப்பி கைது செய்தனர்.

'காதலை ஏற்காததால் பழி வாங்கினேன்'

போலீசாரிடம் சுரேஷ் அளித்த வாக்குமூலம்: பத்தாம் வகுப்பு வரை படித்தேன். சேலை விற்பனை கடை வைத்துள்ளதோடு, தறிப்பட்டறைகளில் மேஸ்திரி
வேலை செய்து வந்தேன். வினுபிரியா, சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் நண்பரானார்; நட்பு காதலாக மாறியது. என் காதலுக்கு வினுபிரியா, சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் அவரை மனதார காதலித்து வந்தேன். கடந்த சில வாரங்களுக்கு முன், அவரின் பெற்றோரிடம், வினுபிரியாவை திருமணம் செய்து வைக்கும் படி, முறைப்படி பெண் கேட்டேன். அவர்கள் பெண் தர மறுத்து விட்டனர்.
ஜூன், 12ம் தேதி, வினுபிரியாவின் தந்தையுடன் போனில் பேசி திருமணம் செய்து வைக்கும்படி கேட்டேன். அவர்கள் என் காதலை ஏற்காததால், வினுபிரியாவை பழி வாங்க முடிவு செய்தேன்.
அவரின் வீட்டருகே, சேலை விற்பனை செய்வது போல் சுற்றினேன். என் மொபைலில், வினுபிரியாவை படம் எடுத்தேன். அதை மார்பிங் செய்து, என் பேஸ்புக் ஐ.டி.,யிலிருந்து, வினுபிரியாவை காதலிப்பதாக கூறிய தனுஷுக்கும், அவர் மூலம், நண்பர்கள் பலருக்கும் அனுப்பினேன்.
வினுபிரியாவை பழி வாங்கும் நோக்கில், 'மைதிலி வினுபிரியா' என்ற பெயரில் போலி ஐ.டி., உருவாக்கி, வினுபிரியா படங்களை வெளியிட்டேன். அப்போது தான், வினுபிரியாவுக்கு ஆபாச படம் பற்றி தெரியவரும் என்பதற்காக, இப்படி செய்தேன்.
இவ்வாறு சுரேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக