செவ்வாய், 21 ஜூன், 2016

சட்டசபையில் அமளி.... கலைஞர் பற்றிய விமர்சனத்தால் திமுக உறுப்பினர்கள் ஆவேசம்

கருணாநிதி குறித்து அதிமுக எம்எல்ஏ பேசியதைக் கண்டித்து பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். சட்டப்பேரவையில் திங்கட்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), ''இந்தியாவிலேயே முதல்முதலாக ஊழலுக்காக சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்டவர் கருணாநிதி'' என கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், கருணாநிதி பற்றி உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் மறுப்பு தெரிவிக்கவே, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். பலர் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்குமாறு வலியுறுத்தினர்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ''கன்னிப் பேச்சு என்பதால் குற்றச்சாட்டு இல்லாமல் பேச வேண்டும்'' என ராஜன் செல்லப்பாவை கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டவாறு இருந்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அவர்களை கண்டித்த பேரவைத் தலைவர், ''திமுக உறுப்பினர்களுக்கு பேச போதிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, அனைவரும் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்'' என கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியனை பேசுமாறு பேரவைத் தலைவர் அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேரவையில் அமைதி திரும்பியது.tamithehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக