புதன், 29 ஜூன், 2016

இளங்கோவன் ராஜினாமா...இனி தமிழக காங்கிரஸ் மெல்ல காணாமல் போகும் ?

யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக துணிச்சலாக பேசுவது, கூடவே நக்கலும், நையாண்டியும். தனக்கு எதிராக பேசுபவர் யாராக இருந்தாலும், கட்சியில் இருந்து அதிரடியாக தூக்குவது, பலருடன் மோதல் போக்கை கடைபிடிப்பது என தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியேற்றதில் இருந்து சர்ச்சைகளுடனே வலம் வந்தார் இளங்கோவன்.இதனால் அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டார், அதுவே அவருக்கு பலமாகவும் இருந்தது. ஆனால் இந்த சர்ச்சைகளே அவரது பதவி பறிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்யுமாறு மேலிடம் அழுத்தம் கொடுத்ததாலயே அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் பேசப்படுகிறது.

இளங்கோவனுக்கு எதிரான முக்கிய புகார்களில் மூன்று புகார்கள் அதிகமாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுவேன் என ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரச்சாரம், தேர்தல் பணி என ஆரம்பித்தவர் ஜோதிமணி. அரவக்குறிச்சி தொகுதி ஜோதிமணிக்கு அளிக்கப்படும் என இளங்கோவன் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தொகுதி பங்கீட்டில் அரவக்குறிச்சி தொகுதிக்கு போதிய அழுத்தம் கொடுக்காமல் திமுகவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் இளங்கோவன். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிமணி தன்னிச்சையாக அரவக்குறிச்சியில் போட்டியிடுவேன் கூறினார்.

ஆனால் கட்சி தலைமையின் உத்தரவுக்கு எதிராக போட்டியிட்டால் கட்சியை விட்டு தூக்கிவிடுவோம் மிரட்டல் விட்டார் இளங்கோவன். இதனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார் ஜோதிமணி. ஆனால் ராகுல் காந்தி அரவக்குறிச்சி தொகுதியை ஜோதிமணிக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் பேச இளங்கோவனுக்கு அறிவுறுத்தியும் அவர் போதிய முயற்சி எடுக்கவில்லை.

இதனால் இளங்கோவன் தொடர்பான புகார்களை ஜோதிமணி டெல்லிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கு ஒரு போரே வெடித்தது. இந்திராகாந்தி பிறந்தநாள் தொடர்பான பேனர் விவகாரத்தில் விஜயதாரணியை அசிங்கமாக திட்டியதகவும், அவர் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்றும் கொந்தளித்தார் விஜயதாரணி.

இந்த விவகாரத்தில் இளங்கோவன் மீது காவல் துறையில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றார் விஜயதாரணி. பின்னர் தேசிய தலைமை தலையீட்டால் இந்த விவகாரத்தில் பின்வாங்கினார் விஜயதாரணி. ஆனாலும் இளங்கோவன் மீது கோபத்தில் விஜயதாரணி உள்ளதாக கூறப்படுகிறது. அவரும் தன் பங்கிற்கு இளங்கோவன் மீது புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பியதாக பேசப்படுகிறது.

மேலும் செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி குறித்து பேட்டி அளித்த விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை  கட்சியில் இருந்து நீக்கினார் இளங்கோவன். ஆனால் அவர் தனது நீக்கம் செல்லாது என இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரும் அவ்வப்போது இளங்கோவனுக்கு எதிராக புகார்கள் அனுப்ப, மொத்தமாக சேர்ந்து இளங்கோவனுடைய பதவிக்கு ஆப்பு வைத்து விட்டதாக சத்தியமூர்த்தி பவனில் பேசப்படுகிறது webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக