வெள்ளி, 17 ஜூன், 2016

கபாலியை தூக்கி பிடிக்கும் பாமரத்தனம் .. வெளங்கிடும்

காக்கா முட்டை, விசாரணை போன்றவை முழுமையான சினிமா இல்லை என்றாலும், அவற்றை வெகுஜன சமூகம் கொண்டாடும்போது, நல்ல சினிமாவிற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுவதாக தோன்றியது. ஆனால் அந்த படங்களை கொண்டாடிய நண்பர்கள், உறியடி, கபாலி போன்ற படங்களையும் கொண்டாடும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. உறியடி கூட சின்ன பட்ஜெட் படம், ஏதோ ஒரு அரசியலை முன்னெடுக்கிறது என்று சொல்லி தப்பிக்கலாம். ஆனால் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் போன்றவற்றை மட்டுமே முன்வைத்து, தலைவன்டா, ஸ்டைல்டா, தெறிக்கும் டா, இந்த மாஸ் யாருக்கும் வரும் என்று கேட்பதை பார்த்தால் பகீர் என்று இருக்கிறது. காக்கா முட்டை போன்ற படங்களை கொண்டாடியதை பார்த்து, திரைப்பட ரசனை வளர்ந்துவிட்டது என்று தவறாக நினைத்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதெப்படி காக்கா முட்டை போன்ற ஒரு படத்தை கொண்டாடிய நண்பர்களால் மீண்டும் ரஜினியின் வெற்று ஸ்டைலை ரசிக்க முடியும்? விசாரணை போன்ற ஒரு அரசியல் படத்தை கொண்டாடிவிட்டு, எவ்வித உருப்படியான் ஆரசியலும் இல்லாத ரஜினியை ரசிக்க முடியும்.சினிமா சில நேரங்களில் வெகுஜன மக்களின் ஊடகம்தான்.

ஆனால் ரஜினியை கொண்டாடும் வெகுஜன மக்கள் பற்றி எனக்கு பிரச்சனையில்லை. விசாரணையும், காக்கா முட்டையும் வெளிவந்தபோது தமிழ் சினிமா முன்னேறிவிட்டது, உலக தரத்தை அடைந்துவிட்டது என்று கொண்டாடிய அதே நபர்கள் இன்று கபாலியை தூக்கிப் பிடிப்பது எந்த அடிப்படையில், எனில் அத்தகைய நபர்களின் திரைப்பட ரசனை எத்தகையது, யாரை ஏமாற்ற இவர்கள் நல்ல படங்கள் வரும்போது கொண்டாடுவது போல் பாவனை செய்கிறார்கள் என்று கேள்விதான் எழுகிறது. இத்தனைக்கும் இன்னும் படமே வெளிவரவில்லை. வெளிவந்திருக்கும் ஒன்றிரண்டு துண்டுப் படங்களை வைத்தே இத்தனை ரகளை என்றால், படம் வெளிவந்தால் தமிழ் சமூகம் என்னாவது?

முகநூல் ஒரு பெரும் மாயவலை. இங்கே தங்களுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள எப்போதும் வெகுஜன ரசனை சார்ந்தும் சிலர் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் அப்படி வெகுஜன நண்பனாக இருந்தால் ஒருபோதும் மாற்றத்தை நோக்கி நாம் நகரமுடியாது. பல நேரங்களில் வெகுஜன விரோதியாகவே இருப்பவர்கள்தான் மாற்றத்திற்கான விதையை விதைக்கிறார்கள். வெகுஜன நண்பர்கள் இப்போது தங்களுக்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். ஆனால் நாளடையில் அந்த இருப்பு நீர்த்துப்போய்விடும்.
Arun Mo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக