திங்கள், 20 ஜூன், 2016

எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரம்: டேப்புகளில் பேசப்படும் விஷயங்களின் அம்பானி, பிரமோத் மகாஜன் பின்புலம்


எஸ்ஸார் டேப்புகள் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டேப்புகளில் பேசப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, இந்தியாவையே உலுக்கிய வழக்கான பத்திரிகையாளர் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கு. 29.01.2003 அன்று அனில் அம்பானியும், சதீஷ் சேத்துக்கும் இடையேயான உரையாடல் பதிவாகியிருக்கிறது. அதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளரான ஷிவானி பட்நாகர் கொலைச் செய்யப்பட்ட வழக்கை பிரமோத் மகாஜனுக்கு ஆதரவாக நீர்த்துப்போகச் செய்வது குறித்து பேசப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான பிரச்னைகளை அமர்சிங்கை வைத்து ‘சமாளிப்பது’ என்றும் பேசப்படுகிறது. ஷிவானி பட்நாகர், பிரமோத் மகாஜன்
1999ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் ஷிவானி பட்நாகர் அவரது டெல்லி இல்லத்தில் கொலைச் செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் போன்ற பெரும்புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய டெல்லி ஐ.பி.எஸ் அதிகாரி ரவிகந்த் ஷர்மாவின் மனைவி மது ஷர்மா, மகாஜனுக்கு ஷிவானி கொலையில் தொடர்பு உள்ளதாகவும் இதை துணைப் பிரதமர் அத்வானி தொடர்ந்து மறைத்து வருவதாகவும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார்.
பிரமோத் மகாஜன் அப்போது பாஜக-வின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்தார். மேலும், அப்போதைய டெலிகாம் துறை அமைச்சராகவும் இருந்தார். பிரமோத் மகாஜனை வழக்கிலிருந்து காப்பதின் மூலம், டெலிகாம் துறையில் லாபி செய்து ரிலையன்ஸ் பலன்களை அனுபவிக்க முடியும். அதேபோல், 28.09.2002 அன்று அமர்சிங் மற்றும் சமாஜ்வாடிக் கட்சி எம்.பி குன்வார், அகிலேஷ் சிங் இடையேயான உரையாடல் பதிவாகியிருக்கிறது. அதில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் அமர்சிங் மூலமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ‘சமாளிக்கப்பட்டிருப்பது’ தொடர்பான பதிவுகள் இருக்கின்றன. இதற்காக அன்றைய நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பிரகாஷ் மணி திரிபாதி, எஸ்.எஸ்.அலுவாலியா, பிரபுல் பட்டேல், ப்ரேம் சந்த் குப்தா, கிரித் சோமய்யா ஆகியோருக்கு ரிலையன்ஸ் மூலமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏன் பணம் கொடுக்கப்பட்டது?
கேதன் பரேக் ஊழல் மற்றும் குளோபல் டிரஸ்ட் பேங்க் குற்றச்சாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த 'டீலிங்' நடைபெற்றுள்ளது. கேதன் பரேக் மும்பையைச் சேர்ந்த தரகர். இவர் 10 பெரு நிறுவனங்களின் பங்குகளில் முறைகேடுகளில் ஈடுபட்டார். இதனால், கடுமையான நட்டமும், வீழ்ச்சியும் ஏற்பட்டது. இதிலிருந்து ரிலையன்ஸுக்கு பிரச்னை வரக்கூடாது என்றே பணம் கொடுக்கப்பட்டது.
வெளியாகியிருக்கும் டேப்புகளில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அன்றைய பிரதமர் அலுவலகச் சிறப்பு அலுவலர் என்.கே.சிங்குடன் பேசும் பல உரையாடல்கள் வெளிவந்துள்ளன. இந்த உரையாடல்களில், முகேஷ் அம்பானி மத்திய பட்ஜெட் தயாரிப்பில் அதிகாரம் செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
22.11.2002 அன்று பதிவாகியிருக்கும் உரையாடலில் முகேஷ் அம்பானியும், ஷடல் அத்வால் என்ற ஜோசிய நிபுணரும் பேசிக்கொள்கின்றனர். அதில், டெலிகாம் துறையிலிருந்து ஒரு கோப்பை நீக்குவதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் அரசுக்கு செலுத்தவேண்டிய ரூபாய் 1,300 கோடி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக, டெலிகாம் நிர்வாக அதிகாரிகள் அஜோய் மேக்தா மற்றும் அஜய் சிங் உடனும் பேசப்படுகிறது.
வெளியாகியிருக்கும் பல டேப்புகள் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சுற்றி நடப்பவையாக மட்டுமே உள்ளது. 2000 -2011 வரையிலான 11 ஆண்டு காலத்தில் பல நூறு பேச்சுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், 2001, 2002, 2003 அளவிலான பேச்சுக்கள் மட்டும்தான் வெளியாகியிருக்கிறது. இக்காலகட்டத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக