செவ்வாய், 14 ஜூன், 2016

நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது.. கண்டெயினர் சந்நிதியில் மோடி முதல் கடைகேடி வரை பஜனை

jaya-victory-caption-1நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக்கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க! அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க! ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!மே 21 அன்று இரவு ஜெயா டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “வி-டு-த-லை, விடுதலை” என்ற பாடல் வரிக்கு, ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது பின்புறத்தை குளோசப்பில் ரசிகப் பெருமக்களுக்கு காட்டியபடி ஆடிக்கொண்டிருந்தார்.... வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.

jaya-victory-paid-crowd
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்ச்சாரக் கூட்டத்திற்காக கொண்டுவரப்பட்டவர்களுக்கு பகிரங்கமாக பணம் விநியோகிக்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தின் கட்டளை, விதிகளுக்கு ஜெயாவின் மரியாதை.
சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளிலிருந்து ஜெ. பெற்ற விடுதலையாக இருக்கட்டும், அல்லது சுயமரியாதை உணர்விலிருந்து தமிழ் மக்களுக்கு அவர் வழங்கியிருக்கும் ‘விடுதலை’யாக இருக்கட்டும் அனைத்துக்கும் அந்தக் காட்சி பொருந்தக் கூடியதே. மணிரத்தினத்தின் அழகியல் உணர்வைப் பாராட்டத்தான் வேண்டும். தற்போதைய தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் உறுதி செய்கின்றன.
தமிழக வாக்காளர்கள் தம்மைத் தாமே இருண்ட காலத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதிகார வர்க்கம், பல எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நீதித்துறை, வாக்காளர்கள் ஆகிய அனைவரையும், அனைத்தையும் தன்னால் விலைக்கு வாங்க முடியும் என்பதை ஜெயலலிதா பலமுறை நிரூபித்திருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அதனை மீண்டும் நிரூபித்து விட்டார். எந்தக் காரணத்துக்காக முன்னர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் (வலது கம்யூ. தவிர) புறக்கணித்தார்களோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் பன்மடங்கு அதிகமாக இந்த பொதுத் தேர்தலில் தமிழகமெங்கும் தொழிற்பட்டிருக்கின்றன.
ஜனநாயகம் என்ற பெயரால் அழைக்கப்படுவதற்குத் தேவைப்படுகின்ற ஒப்பனைகளைக் கூட இந்த ‘ஜனநாயகம்’ இழந்து வருகிறது. அ.தி.மு.க.வின் கூட்டாளியாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அ.தி.மு.க.வைத் தவிர மற்றெல்லா கட்சிகளும் கூறிவிட்டன.
“நம்பிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டப்பட்டால் மரத்தடி சொம்பு நாட்டாமைகளுக்குக் கூட ரோசம் வரக்கூடும். நம்பிக்கை இல்லாத நடுவரை வைத்து பள்ளிக்கூட கால்பந்து போட்டியைக் கூட நடத்த முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் கைப்பாவை என்று அனைத்து கட்சிகளாலும் காறி உமிழப்பட்ட பின்னரும் ‘நான்தான் நடுவர்’ என்று புன்னகை மாறாமல் கூறுகிறார் லக்கானி.
இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள், சிறுதாவூர் கன்டெய்னர், ஐவர் அணியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள், கரூர் அன்புநாதனின் கரன்சி கோடவுன், தமிழகம் முழுவதும் அமைச்சர்களின் பினாமிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடிகள், திருப்பூர் கன்டெய்னர் லாரிகள் – என அடுக்கடுக்காக எழுந்த எந்தக் குற்றச்சாட்டிற்கும் தேர்தல் ஆணையமோ வருமான வரித்துறையோ பதிலளிக்கவில்லை.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி 60,000 கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் அதிகரிக்கிறது என்றும், அதற்குக் காரணம் உங்களுக்கே தெரிந்ததுதான் என்றும் கூறுகிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாராலும் தடுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் வக்கற்ற நிலையை பிரகடனம் செய்கிறார், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி.
அன்புநாதனுக்கு கேட்டவுடன் முன் ஜாமீன் வழங்குகிறது உயர்நீதி மன்றம். அன்புநாதன் பிடிபடக் காரணமாக இருந்த எஸ்.பி.வந்திதா பாண்டேவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் விஷ்ணுப்பிரியாவைப் போல ‘தற்கொலை’ செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு.
jaya-victory-police-paying
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக போலீசு அ.தி.மு.க.வின் விசுவாசமிக்க தொண்டனைப் போலத் தொப்பிகளை விநியோகிக்கும் காட்சி.
தேர்தல் தொடர்பான பணிகளில் ஆளும் கட்சியானது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெற்ற வெற்றியையே ரத்து செய்யலாம் என்று விதி இருந்த போதிலும், ஜெயலலிதா உரையாற்றும் மைதானங்களில் புல் புடுங்குவது முதல், ஓட்டுக்குப் பணம் கடத்துவது வரையிலான எல்லா வேலைகளையும் அதிகார வர்க்கமும் போலீசும்தான் செய்திருக்கின்றன. இன்னின்ன அதிகாரிகள் என்று ஆதாரபூர்வமாக அம்பலமான பின்னரும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலை நியாயமாக நடத்துவதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவது கூடத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், வருமான வரித்துறை, உள்துறை அமைச்சகம், மத்திய உளவுத்துறை, ரிசர்வு வங்கி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள் – ஆகிய எல்லா நிறுவனங்களும் கன்டெய்னரின் சந்நிதியில் கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றன. ஜெயலலிதாவின் வெற்றி என்பது இந்தக் கட்டமைப்பின் தோல்வியை முன் எப்போதையும் விட அதிகமாக பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறது.
“ஜெயலலிதாவை இனி தேர்தல் மூலம் தோற்கடிக்கவே முடியாதோ” என்ற கேள்வி எதிர்க்கட்சிகளின் மனதில் எழத்தான் செய்கிறது. இருந்த போதிலும், அந்தக் கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லாத காரணத்தினால், கேள்வியை தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, அப்படி ஒரு கேள்வியே எழும்பாதது போல தம்மைத் தாமே தைரியப்படுத்திக் கொள்கிறார்கள்.
jaya-victory-tasmac
தமிழ்நாட்டைக் குடிநாடாக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள்.
இந்தக் கட்டமைப்பு நியாயப்படுத்த முடியாத அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்ற போதிலும், வேறு மாற்று குறித்த சிந்தனையே எழாத வண்ணம், ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் மக்களை இந்த தேர்தல் அரசியல் வரம்புக்கு உள்ளேயே சிந்திக்கும்படி கட்டுப்படுத்துகின்றன. இருக்கின்ற நிலைமையை அங்கீகரித்து, அனுசரித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே வெவ்வேறு கோணங்களிலிருந்து மக்களுக்கு வலியுறுத்துகின்றன.
ஜெயலலிதாவின் வெற்றி சாமர்த்தியமா, சதித்திட்டமா?
தேர்தல் முடிவு குறித்து நடைபெறும் விவாதங்களைக் கவனித்துப் பாருங்கள். இந்த தேர்தலில் எல்லா விதமான கிரிமினல் வழிமுறைகளையும் பயன்படுத்தித்தான் ஜெ. கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2009-2014-இல் இந்தியா முழுவதும் உயர்ந்துள்ள வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6%. தமிழகத்தில் இது 29.1%. அதாவது 1.21 கோடி புதிய வாக்காளர்கள். இவர்களில் போலி வாக்காளர்கள் 40 இலட்சம் பேர் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல், பிறகு தாம்பரம் தொகுதி போலி வாக்காளர் பட்டியலை ஆதாரத்துடன் கொடுத்து உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பது போல நடித்தது ஆணயம். தமிழகம் முழுவதும் அகற்றப்பட்ட போலி வாக்காளர்கள் 6.5 லட்சம் மட்டும்தான். மீதி சுமார் 33 இலட்சம் போலி வாக்காளர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் பழைய முறைக்குப் பதிலாக வாக்காளர்களையே கைப்பற்றி விட்டார் ஜெயலலிதா. ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்களித்தவர்களின் கையில் வைக்கப்படும் மை, வைத்தவுடன் அழிந்து கள்ள ஓட்டு சதியை அம்பலமாக்கியிருக்கிறது. இத்தனை அயோக்கியத்தனங்கள் அப்பட்டமாக அரங்கேறிய
போதிலும், ஜெயலலிதாவின் இந்த முறைகேடான வெற்றியை எந்த ஊடகமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
jaya-victory-caption-2தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட ஊடகத் தரகர்கள், தேர்தல் முடிவு குறித்த ஆய்வை ஐ.பி.எல்.ஆட்டம் குறித்த ஆய்வு போல மாற்றுகிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தியதையம், விலைக்கு வாங்கியதையும், ஆதிக்க சாதி ஓட்டுக்களை அறுவடை செய்ததையும், மோசடி வாக்குறுதிகள் மற்றும் இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஏய்த்ததையும் அவரது திறமைகளாக காட்டுகிறார்கள். “எப்படி வியூகம் அமைத்திருந்தால் தி.மு.க. வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று விவாதம் நடத்துகிறார்கள். தேர்தல் என்பதே ஒரு விளையாட்டு போலவும், அதில் சாமர்த்தியமாக ஆடி ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டதாகவும், சாமர்த்தியக் குறைவான தி.மு.க.வும் மற்ற கட்சியினரும் தோற்றுவிட்டதாகவும் காட்டுகிறார்கள்.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பா?
ஜெ.பெற்ற வாக்குகளில் உண்மை எத்தனை, போலி எத்தனை என்பது ஒரு புறமிருக்கட்டும். 5 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியைப் பரிசீலித்து எடை போட்டு அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி சீர்தூக்கிப் பார்த்துத்தான் வாக்களித்திருக்கிறார்களா?
2011-இல் ஆட்சிக்கு வந்தவுடனே மின் வாரியம் கடனில் மூழ்கி இருப்பதாக சொல்லி ஜெ.மின் கட்டணத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் மின் வாரியத்தின் கடன் பன்மடங்கு உயர்ந்துவிட்டதே, ஏன் என்று மக்களுக்குத் தெரியுமா? தற்போது 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாரே, இதன் சாத்தியம் குறித்து பரிசீலித்துத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா? “மின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது” என்று 2011-இல் கட்டணத்தை உயர்த்தியபோது ஜெயலலிதா கூறினாரே, அதை யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா?
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேருந்து சேவை சீர்குலைந்திருக்கிறது.பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் 25 ரூபாய் என்று குறைக்கப் போவதாக கூறுகிறார் ஜெ. ஆனால் தனியார் முதலாளிகளோ பால் விலையை உயர்த்துகிறார்கள்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆறாயிரமாகியது. இப்போது அவற்றில் 500 கடைகளை மூடப்போவதாக ஜெ.வாக்குறுதி அளிக்கிறார். இவை பற்றியெல்லாம் மக்களுடைய புரிதல் என்ன? கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் யோக்கியதை இது எனும்போது, அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா?
சொற்களால் அதிகாரத்தை நக்கும் தொலைக்காட்சி நெறியாளர்கள்!
jaya-victory-caption-3ஐந்தாண்டு கால ஆட்சியின் சரி -தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று கருதுவது, பொதுப்படையான ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை. மேற்கண்ட கேள்விகளை மக்கள் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, இப்படி கேள்வி எழுப்பி பரிசீலிக்க விடாமல் தடுப்பதற்கும், பல்வேறு கோணங்களில் மக்களைத் திசை திருப்புவதற்கும்தான் ஊடகங்கள் வேலை செய்கின்றன. தொலைக்காட்சி நெறியாளர்கள் எனப்படுவோர், சொற்களால் அதிகாரத்தை நக்குவதை ஒரு அனிச்சைச் செயலாகவே செய்யும் வண்ணம் தமது நாவினைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.
தலித் இளைஞர்கள் படுகொலை, முத்துக்குமாரசாமி தற்கொலை, விஷ்ணுப்பிரியாவின் மர்ம மரணம் போன்ற பிரச்சினைகளையோ அ.தி.மு.க. அமைச்சர்களின் கொள்ளை குறித்த குற்றச்சாட்டுகளையோ, மறுக்க முடியாத நிலை ஏற்படும்போது, “தி.மு.க. மட்டும் யோக்கியமா” என்ற கேள்வியின் மூலம் எந்த பிரச்சினையையும் துருவி ஆராய முடியாமல் தொலைக்காட்சி நெறியாளர்கள், நடுப்பக்க கட்டுரையாளர்கள் என்று அழைக்கப்படும் ஊடக கூலிப்படையினர் தடுத்து விடுகின்றனர். ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தேர்தல் மோசடி பற்றி கேள்வி எழுப்பினால், உடனே திருமங்கலத்தை காட்டி அந்த வாதம் முடக்கப்படுகிறது. லஞ்ச ஊழல், அதிகார முறைகேடு ஆகிய விவகாரங்கள் எதைக் கிளப்பினாலும், ஒவ்வொன்றிலும் தி.மு.க. தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது ஒன்றே அம்மாவை விடுவிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்தப் படுகிறது.
ஜெயலலிதா விவகாரத்தில் மட்டுமல்ல, பொதுவிலேயே தர்க்க ரீதியாக அல்லாமல், அறிவற்ற முறையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் என்று கூறப்படும் நடுத்தர வர்க்கமே, இவ்வாறு சிந்திக்கிறது. அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிந்தனை முறையைத்தான் அது சமூகம் முழுமைக்கும் பரப்புகிறது.
பிம்பத்தை நம்ப வைக்கும் பித்தலாட்டம்
jaya-victory-degenerate-party
பொறுக்கித் திண்ணும் பிழைப்புவாதக் கூட்டத்தையும் (இடது) அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளையும் அடித்தளமாகக் கொண்டதுதான் அ.தி.மு.க.
கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்களால் உருவாக்கப்படும் பிம்பத்தின் மீது ஒரு பித்தையும் மூட நம்பிக்கையையும் ஏற்படுத்தி, “அந்த பிம்பம்தான் நான்” என்று நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி, இந்த விசயத்தில் ஒரு முன்னோடி. மாற்றம், முன்னேற்றம் என்ற அன்புமணியின் விளம்பரமாகட்டும், வழமையான அரசியல்வாதியின் தோற்றத்தை நிராகரித்து சாதாரண நடுத்தர வர்க்க மனிதனின் தோற்றத்துக்கு மாறிக் கொள்வதன் மூலம் மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முனைந்த ஸ்டாலினாக இருக்கட்டும் – நுகர் பொருட்கள் குறித்து விளம்பரங்கள் தோற்றுவிக்கும் மனப்பதிவைத்தான் இவர்கள் மக்களிடம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த மனநிலையைத்தான் வாக்குகளாக மாற்றுகிறார்கள்.
பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை, எல்லா கட்சிகளுடைய கொள்கையும் தனியார்மய – தாராளமயக் கொள்கைதான் என்பதால், விவாதம், அறிவியல் பூர்வமான ஆய்வு ஆகியவற்றிலிருந்து முடிந்தவரை மக்களை விலக்கி வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். மற்றபபடி, இவர்கள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகள், திட்டங்களெல்லாம் தம்மைப் பற்றி இவர்கள் தோற்றுவித்துக் கொள்ளும் பிம்பத்துக்கான பின் இணைப்புகள் மட்டுமே.
குறிப்பிட்ட பிரச்சினைகளின் பருண்மையான விவரங்களுக்குள் செல்லாமல், எம்.ஜி.யாரின் பரோபகாரம், ஜெயலலிதாவின் துணிச்சல், கருணாநிதியின் நிர்வாகத் திறன் என்பன போன்ற உருவாக்கப்பட்ட அபிப்ராயங்களின் அடிப்படையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்தபோது “கடையை மூடும் பேச்சுக்கே இடமில்லை” என்றது ஜெ.அரசு. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என்ற தி.மு.க.வின் அறிவிப்பை முதலில் கேலி செய்து விட்டு, பின்னர் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் பரவத் தொடங்குவதைக் கண்டு பீதியடைந்து மூக்கறுபட்டுத்தான் “படிப்படியாக மதுவிலக்கு” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் ஜெயலலிதா. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, “நான் ஒரு முடிவு எடுப்பதென்றால் ஆயிரம் முறை யோசித்துத்தான் எடுப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். படிப்படியாக மூடுவேன் என்றால் மூடுவேன்” என்று சவடாலாகப் பேசி சமாளித்தார் ஜெயலலிதா.
jaya-victory-killed-in-crowd
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து அகால மரணமடைந்தவர்கள்.
“நான் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவள்.என்னை நம்பு” என்பதற்கு மேல் ஜெயாவின் வாக்குறுதியில் வேறு எதுவும் இல்லை.இதை நம்பி வாக்களித்தவர்கள் எத்தனை சதவீதம் பேராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவர்களுடைய நம்பிக்கைக்கான அடித்தளம் எது? ஒரு பிரச்சினையைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கத் தெரியாத ஒருவன், அப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் யார் என்பதை மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க இயலுமா?
இயலாது.எனினும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தமது தேவை என்ன என்று புரிந்து கொள்ள முடிந்த மக்கள்தான் தமக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதையும் முடிவு செய்ய இயலும். “உங்களுடைய தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது. அது எனக்குத்தான் தெரியும்” என்று கூறுகின்ற ஒரு பாசிஸ்டு தன்னைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
அதனை உத்திரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு, தன்னைத் தேர்ந்தெடுக்கும் மக்களை விலைக்கு வாங்குகிறார். அல்லது உத்திரவாதமாக தன்னை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கூடிய போலி வாக்காளர்களை உருவாக்குகிறார். தேர்தலில் வெற்றியும் பெறுகிறார். இந்தச் “சாதனை”யின் முழுப்பெருமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியதல்ல. “சொந்த” மூளையைப் பயன்படுத்தி அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் இதில் பங்குண்டு.
இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் கூடாது என்று உறுதியாக நம்புகின்ற ஆதிக்க சாதியினரில் கணிசமானோரும், ஜனநாயகம் என்றால் என்னவென்றே உணர்ந்திராத ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவினரும் இணைந்த ஒரு விநோதமான கலவைதான் இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி. தொழில்துறை நசிவு, விவசாயப் பாதிப்புகளுக்கு இடையிலும், கோவை மாவட்டத்தின் ஒரு தொகுதி தவிர மற்றெல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றி, அம்மாவட்டத்தின் கவுண்டர் சாதிவெறி ஜெயலலிதாவுக்கு செலுத்தியிருக்கும் அன்புக் காணிக்கை. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும் தென்மாவட்டங்களோ தேவர் சாதிவெறியின் நிலைக்களன்கள். இந்த ஆதிக்க மனோபாவமும், ஏழைகளான உதிரி வர்க்கங்கள் மற்றும் பெண்களின் அடிமை மனோபாவமும்தான் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை தெரிவு செய்ய தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கின்றன. இந்த வாக்கு வங்கியின் பிடியில் தமிழகம் ஒரு பிணைக்கைதியாகச் சிக்கியிருக்கிறது.
குஜராத்தில் மோடியைத் தேர்ந்தெடுத்த இந்து மதவெறி, அதற்கு முன்னால் படேல் சாதி வெறியாக இருந்தது. உ.பி.யில் மோடிக்கு வெற்றி தேடித்தந்த இந்து மதவெறி, ஜாட் சாதிவெறியின் இன்னொரு வடிவம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, எந்த நெறியுமற்றது, ஒழுக்கமற்றது. அது கழுத்தை வெட்டும், காலிலும் விழும், கவுரமே இல்லாமல் பொறுக்கித் தின்பதற்கு முண்டியடிக்கும், பிறகு ஆண்ட பரம்பரை என்று மீசையையும் முறுக்கும்.
ஜெயலலிதாவுக்குப் பதிலாக தி.மு.க. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அது இந்த அரசியல் சமூகக் கட்டமைவின் தோல்வியை எந்த விதத்திலும் மாற்றப்போவதில்லை. மாறாக ,புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையில்தான் தி.மு.க. ஈடுபடும். ஆனால் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி, தமிழ்ச்சமூகம் உள்ளுக்குள் அழுகத்தொடங்கி விட்டதை அறிவிக்கின்றது.
அனைத்தும் தழுவிய வீழ்ச்சி!
“ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன” என்கிறது தோழர் சிவசேகரத்தின் ஒரு கவிதை வரி. ஆற்று மணல் கொள்ளையால் உள்ளூர் விவசாயம் அழிவதைக் கண்ணால் கண்டபடியே, கொள்ளையனிடம் கோயில் திருவிழாவுக்குப் பணம் வாங்குகிறார்கள் மக்கள். உடுமலை சங்கர் கொலையையும், கவுசல்யாவின் தற்கொலை முயற்சியையும் பார்த்தபடி இரக்கமே இல்லாமல் கடந்து செல்கிறது தமிழ்ச் சமூகம். முத்துக்குமாரசாமியும், விஷ்ணுப்பிரியாவும், எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவிகளும் தம்மைத்தாமே தண்டித்துக் கொள்கின்றனர். பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்று அம்பலப்படுத்திய ஒப்பந்தக்காரர்கள் முகவரி இல்லாமல் போகிறார்கள். அன்புநாதனையும் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியையும் கல்லூரித் தாளாளரையும் விடுவிக்கின்றது நீதிமன்றம். கொங்கு நாட்டு கன்டெய்னர் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று நிறுவப்பட்டதைப் போல, கோகுல்ராஜ் கொலையையும், “தற்கொலை என்று நிரூபிப்பேன்” என்கிறான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் யுவராஜ்.
திரும்பிய திசையிலெல்லாம் கொடுமைகள் கூத்தாடும்போது, ஓட்டுக்குப் பணம் வாங்கிய கொடுமையைப் பற்றி மட்டும் குமுறுவது அபத்தமல்லவா?
அரவக்குறிச்சியிலும் தஞ்சையிலும் மட்டும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டுபிடித்து, அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலைத் தள்ளி வைக்கிறது ஆணையம். ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தை வெளிப்படையாக, ஊர் மக்கள் முன்னிலையில், ‘ஜனநாயக பூர்வமாக’ வழங்க வேண்டுமென்றும் உள்ளூர் கட்சிக்காரர்கள் அதில் ‘ஊழல்’ செய்ய அனுமதிக்க கூடாது என்றும் ஒரு புதிய ஒழுக்க நெறியை உருவாக்குகின்றன தமிழகத்தின் கிராமங்கள். சென்னை மாநகரின் வெள்ளம் பாதிக்கப்படாத பகுதிளைச் சேர்ந்த அபார்ட்மென்ட் நடுத்தர வர்க்கமோ கூசாமல் வெள்ள நிவாரணம் வாங்குகிறது, ஓட்டுக்கும் பணமும் வாங்குகிறது.
இது ஒரு அனைத்தும் தழுவிய வீழ்ச்சி. இந்த அரசுக் கட்டமைப்பு, இதனை நியாயப்படுத்தும் தேர்தல் ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, மக்கள் கொண்டிருந்த விழுமியங்கள் ஆகிய அனைத்தும் தகர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். “நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக் கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்ட வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. ரசிகப் பெருமக்களுக்கு ஐஸ்வர்யா ராய் வழங்கிய குளோசப் காட்சியின் அரசியல் மொழிபெயர்ப்புதான், வாக்காளப் பெருமக்களுக்கு ஜெயலலிதா வழங்கியிருக்கும் இந்த குளோசப் காட்சி.
பின்புறத்தைக் காட்டினால் முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம். இது முன்புறம். இந்த அவமதிப்பிலிருந்து நாம் தப்ப முடியாது. இது திரைப்படக்காட்சி அல்ல, இதுதான் ஆட்சி.
– சூரியன். வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக