வியாழன், 9 ஜூன், 2016

ஆவணப்பட இயக்குநர் ஆண்டோவுக்கு அஞ்சலி...வாட்டர், துரும்பர்கள்,யாருக்காக.....

ஹெச்.ஜி.ரசூல்:
ஹெச்.ஜி.ரசூல்ஆவணப்பட இயக்குநர் ஆன்றோவை ஒரு சில மாற்றுத்திரை திரையிடல் நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். கலை இலக்கியப்பெருமன்றம் ,கீற்று வெளியீட்டகம் நடத்திய திரைவிழாக்கள் அவை. தமிழகத்தின் ஆவணப்படவரலாற்றில் துரும்பர்கள் எனப்படும் புதிரை வண்ணார்கள், நீலகிரிவாழ் ஆதிப்பழங்குடிகள் என அடித்தளமக்கள் சார்ந்த உலகத்தையும் வாழ்வியல் துயரங்களையும் ஆன்றோவின் ஆவணப்படங்கள் நம்மிடையே காட்சிப்படுத்தி உள்ளன. புனைவுகளின்றி உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தும் ஒரு படைப்பாக்கமுறையைக்கொண்டதுதான் டாக்குமென்டரி ரியலிசம் – ஆவணப்பட யதார்த்தம் என்னும் வகைமை.தனது தும்பல் என்னும் கிராமத்து மண்ணிலிருந்து பயணத்தை துவங்கிய ஆன்றோவின் தும்பலில் இன்று குடியரசு தினம் எளியமக்களின் நிறைவேற்றப்படாத கனவுகளையும் தேவைகளையும், ஆளும் அரசுகளின் போலிமையான கொண்டாட்டங்களையும், ஏமாற்றுகளையும் ஒரு சேர காட்சிகளின் வழியாக விவரணையாக்கம் செய்திருந்தது.

நவம்பர் 2005 களில் வெளிவந்த கனவுப்பாலம் – டிரீம் பிர்ட்ஜ் பெரும் வெள்ளம் பாய்ந்தோடும் ஆற்றைக்கடக்க ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு தலையில் பெரும் சுமட்டோடு இடுப்பளவு நீரில் நடந்து செல்லும் வயதான பெண்ணின் அவலம், இன்னும் நம் நதியோரக்கிராமங்களுக்கு கனவாகவே போய்விட்ட நடை பாலங்களைக் குறித்துப் பேசுகிறது.
ஆன்றோவின் பிளஸ் 2 வேதியியல் பாடம், உலக பாரம்பர்ய 39 நினைவுச்சின்னங்கள் ( வேர்ல்ட் ஹெரிட்டேஜ் 39 சைட்ஸ்) போன்ற ஆவணப்படங்கள் கல்விசார்ந்தும், வரலாற்றியல் அறிவுசார்ந்து இன்னொரு படைப்பாக்க முறையியலை நமக்கு அறிமுகம் செய்கின்றன.பொதுப்பரப்பின் சாதாரண விழிப்புணர்ச்சி சார்ந்த ஹெச்.ஐ.வி.எய்ட்ஸ், உள்ளுர் நிதி திரட்டல் ( லோக்கல் பண்ட் ரைஸிங்) போன்ற அரசு நிறுவனமே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஆவணப்படுத்தல்களையும் ஆன்றோ செய்துள்ளார் என்றாலும் அவரது தனித்துவமானது போக்கையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆன்றோவின் ஆவணப்படத்தின் ஒரு முக்கிய தரப்பாகவெறுமனே பொத்தாம் பொதுவாக ஆவணப்படுத்தும் திரைக்காட்சிகளிலிருந்து மற்றுமொரு நீட்சியாக இது விரிவடைந்த்து.அவரது பிற்கால ஆவணப்படம் என்பது வெளிச்சத்திற்கு வராத அடித்தள மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் இனவரைவியல் படம் ( எத்தினோகிராபிக் பிலிம் ) என்கிற நிலையில் மாறுபாட்டைந்தது. துரும்பர்கள் எனப்படும் ஒடுக்குதலுக்கும், தீணடாமை கொடுமைக்கும் ஆளான புரத வண்ணார்கள் குறித்த எச்சம் மிச்சம் ஆவணப்படம் இதை சாத்தியப்படுத்தியது.இது 2015 ஏப்பிரலில் திரையிடப்பட்டது.இவ்வாறாக ஆன்றோ தனது படைப்புத்திறனை நீட்சி செய்து பார்த்தவர். இது போன்றதொரு முக்கிய ஆவணப்படம் புலியாருக்கு. இப்படம் முதுமலை புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டம் எவ்வாறு நீலகிரி ஆதிவாசி தோடர் பழங்குடிமக்களின் வாழும் உரிமைகளை பறிக்கும் அபாயங்களை பேசுகிறது.இதனை சேகர் தத்தாத்ரியின் புலிகள் பற்றிய உண்மைகள் எனும் ஆவணப்படத்தோடு இணைத்து ஒப்பு நோக்கு உரையாடல்களும் நிகழ்ந்தது.
மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராகவும் இருந்த ஆன்றோவின் படைப்பு வரிசையில் நீரும் வாழ்வும் ( வாட்டர் அன்ட் லைப்) என்பதான ஆவணப்படமும் உண்டு
ஆவணப்படம் என்ற ஒற்றை மாதிரியில் பன்மை வடிவங்களை , எதிர் அழகியலை காட்சிமொழியாக படைத்த ஆன்றோவின் பயணம் நிறைவுறாத பயணமாகவே ஆகிவிட்டது. தனது அடுத்த படைப்பு தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு குறிப்பை 18 ஏப்பிரல் 2016 இல் ஆன்றோ என்னும் ஆன்டெனி மைக்கேல் எழுதுகிறார்.
சேலம் மாநகராட்சியின் தண்ணீர் வழங்கும் வடிகாலில் ஜவுளி ஆலை சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலக்கும் ஆபத்தை தனது அடுத்த படம் வாட்டர் வெளிப்படுத்த இருப்பதாக அதில் சொல்லியிருந்தார்.51 தினங்களுக்குள் ஆன்றோவின் மறைவு நிகழ்ந்திருக்கிறது… ஒரு படைப்பாளியின் பிரதிசார்ந்த மரணமாக இல்லாமல் உண்மையான மரணமாக இது நிகழ்ந்திருப்பது நம் மனதுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.
ஹெச்.ஜி.ரசூல், எழுத்தாளர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் பதிப்பகமும் டயலாக் அமைப்பும் இரண்டு ஆவணப்படங்களைத் திரையிடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் திரையிடப்படவிருந்த படங்களில் ஒன்றான வன உயிர்கள் ஆவணப்பட இயக்குநர் சேகர் தத்தாத்ரியின் புலிகளைப் பற்றிய உண்மைகள் என்ற ‘ட்ரூத் அபௌட் டைகர்ஸ்’ படத்தைப் பார்த்திருந்தேன். அந்தப் படத்தைப் பார்க்கிற யாரும், ‘புலிகள் வனங்களில் வாழும் ஆதிவாசிகளால் வேட்டையாடப்படுகிறது. அதனால், புலிகளை காப்பாற்ற வனங்களில் வாழும் ஆதிவாசிகளை வெளியேற்ற வேண்டும்’ என்று அந்தப் படம் சொல்கிற கருத்துக்கு உடன்படக்கூடிய அளவுக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பு முறை இருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த எனது நண்பர் கூட அப்படியான தொனியில் என்னிடம் பேசினார்.
முற்றிலும் ஆதிவாசிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தோடு பேசிய நான், அவருக்கு பதில் சொல்ல, அதனை மறுத்து பேசும் படத்தை என்னால் குறிப்பிட முடியவில்லை. ஆனால், அன்று மாலை சேகர் தத்தாத்ரி இயக்கிய ‘ட்ரூத் அபவுட் டைகர்ஸ்’ படத்துக்கு அடுத்து, ‘புலிகள் யாருக்காக’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. மிக எளிமையான அந்தப் படம் ஆதிவாசிகளின் பக்கமிருந்து பேசிய பேருண்மைக்கு முன்னால், சேகர் தத்தாத்ரியின் படம் தோற்றுப்போனது. அந்த நிகழ்ச்சியில் அந்தப் படத்தின் இயக்குநர் ஆண்டோ பேசினார். அவர் ‘ஆதிவாசிகள் எப்படி வன சூழலோடு வாழ்கிறார்கள். புலிகளை வேட்டையாடுவது வேறு யாரோ? ஆனால், இவர்கள் ஆதிவாசிகளை வெளியேறச் சொல்கிறார்கள்’ என்று பேசினார். மிக எளிமையாக எடுக்கப்பட்ட அந்த படம் ஆதிவாசிகளின் கலாச்சாரத்தை, அவர்களின் உரிமைகளை, பிரச்னைகளை உரத்துப் பேசியது. அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அதன் பிறகு அவருடன் தொடர்பு கொள்வதற்கான காரணங்கள் இல்லாமல் போனது. ஆனால், ஆண்டோவின் ‘புலிகள் யாருக்காக’ என்ற அந்தப் படம் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டது. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டோவை தொடர்புகொண்டு இந்த இரண்டு படங்களைப் பற்றி எழுதுவதற்காக அவருடைய ஆவணப்படம் கிடைக்குமா என்று கேட்டேன். மறுநாளே ஆண்டோ அனுப்பி வைத்தார். சூழல் காரணமாக அதை எழுத முடியாமலே போய்விட்டது. ஆனால், அவருக்கு நான் இப்படி ஒரு அஞ்சலி எழுதுவேன் என்ற துயரத்தை எதிர்பார்க்கவில்லை. ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசனின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான ஆண்டோவின் மறைவுச் செய்தியைப் படித்தபோது நிச்சயமாக ஆண்டோவாக இருந்துவிடக் கூடாது என்றே விரும்பினேன். என் நினைவில் நீங்கா இடம் பிடித்துவிட்ட ஆவணப்படத்தின் இயக்குநர் ஆண்டோதான். உண்மை அல்லாதவைகள் போலிகளால் ஜிகினா பூசிக்கொண்டு மினுக்கும்போது, ஆவணப்பட இயக்குநர் ஆண்டோ போன்றவர்களின் கேமிராக்கள் மூலம் உண்மைகள் எப்போதும் மிக அடக்கமாக எளிமையாக வெளிப்பட்டன என்று சொல்வதே அவரின் எல்லா பணிகளையும் புரிந்துகொள்ள சரியான வழியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆவணப்பட இயக்குநர் ஆண்டோவுக்கு அஞ்சலி.
- பாலாஜி  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக