வியாழன், 9 ஜூன், 2016

570 கோடி : 2 வாரத்திற்குள் சிபிஐ பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிப்பட்ட விவகாரத்தில் 2 வாரத்திற்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 3 லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி ஹவாலா பணமாக இருக்குமா? என்ற கோணத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டுமே தவிர வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டது தவறானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் சிபிஐ விசாரணை கோரி அளிக்கப்பட்ட மனு மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா திமுக அளித்த மனுவின் நிலை என்ன? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து 2 வாரங்களுக்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருப்பூரில் கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிபட்டு 18 மணி நேரத்திற்கு பின்னரே எஸ்.பி.ஐ வங்கி உரிமை கோரியதை மனுவில் திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

3 லாரி பதிவெண்களும் போலியானவை என்றும், கோவையில் இருந்து விசாகபட்டினத்துக்கு பணத்தை எடுத்துச் செல்ல ரிசர்வ் வங்கி அனுமதி தரவில்லை என்றும், ஆவணங்களும் போலியானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியுடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் சீருடையில் இல்லை. தமிழக போலீசார் உடன் செல்லாதது ஏன் என எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன   தினகரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக