புதன், 22 ஜூன், 2016

பெண்களுக்கு 50%: மாநகராட்சியில் மட்டும்!

சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சட்ட முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்யும் சட்டத்தை வரும் உள்ளாட்சித் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, மூன்றில் ஒருபங்கு இடஒதுக்கீடு வழங்கும் பழைய சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் வேலுமணி, " உள்ளாட்சி பதவிக்காலம் முடியும் அக்டோபர் 24ம் தேதிக்குள் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் மறுசீரமைப்பு பணிகளைச் செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடும், மற்ற அமைப்புகளில் 50% இடஒதுக்கீடும் இருக்கும்" என்று தெரிவித்தார்.
அமைச்சரின் தகவலின்படி, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இருக்கும் என்று தெரிகிறது.
மேலும், மாநாகராட்சித் தேர்தலில் மேயரை தேர்ந்தெடுப்பதற்கு தனித்தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், மாநகராட்சி மாமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒரு கட்சியாகவும், மேயர் வேறு ஒரு கட்சியாகவும் இருக்கிறார். இதனால், மாநகராட்சி செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. எனவே, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே மேயராகும்படி, சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதற்கு, சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தமிழகத்தில் 1996ஆம் ஆண்டுதான் நீண்டகாலத்துக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அந்தத் தேர்தலில், மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்தனர். திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலினை சென்னை மேயராக கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேயர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. அப்போதும், திமுக-வின் மு.க.ஸ்டாலின் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் அதிகளவில் இருந்தனர். இதனால் மாமன்றக் கூட்டம் போர்க்களமாகக் காணப்பட்டது. அதன்பின்னர், சர்ச்சைக்குரிய இரட்டைப் பதவி விவகாரத்தில் ஸ்டாலின் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது. மீண்டும் ஒரு மேயரை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, ஆளுங்கட்சியாக திமுக இருந்ததால், பல திமுக-வினர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து திமுக-வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மேயரை தேர்வு செய்தனர். பிறகு 2011 தேர்தலில், அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது, மேயரை கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் முறை ஒழிக்கப்பட்டு, மக்களால் நேரடியாக மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, மீண்டும் அதிமுக ஆட்சியே அமைந்துள்ளநிலையில் மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. மின்னம்பலம் ,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக