ஞாயிறு, 15 மே, 2016

இறுதிச்சுற்றில் தி.மு.க... இன்னொரு வாய்ப்பு வருமா? vikatan


றுதிச்சுற்று, கழுத்தை அடையும் நேரம் இது! மாலையா... கயிறா... என்பது இன்னும் சில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஜெயலலிதா தக்கவைக்கப் போராடுகிறார் என்றால், கருணாநிதியும் ஸ்டாலினும் கைப்பற்றப் போராடுகிறார்கள்!
ஆறாவது முறை முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையில், 93 வயதில் நடுங்கும் கரங்களோடு ஊர், ஊராகப் பிரசாரம் போகிறார் கருணாநிதி. அப்பாவே இவ்வளவு உற்சாகம்காட்டுகிறார் என்றால், மகன் ஸ்டாலின் சும்மா இருப்பாரா? ஸ்மார்ட் யூத்தாகத் தன்னைக் காட்டிக்கொள்ள, வானவில்லின் எல்லா நிறங்களிலும் சட்டைபோட்டுக் கலக்குகிறார். யாரும் தன்னைக் கிண்டல் செய்துவிடக் கூடாது என்பதற்காக, ‘எனக்கும் 63 வயது ஆகிவிட்டது. ஆனாலும் இளைஞன் மாதிரி சட்டைபோட்டு வந்திருக்கிறேன் என்றால், உங்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான்’ என்கிறார். வெளியில் உற்சாகத்தைக் காட்டிக்கொண்டாலும், இரண்டு பேரிடமும் பதற்றம் தெரிகிறது.  அ.தி.மு.க போல, தி.மு.க ஒரு நபர் தலைமை கொண்டது இல்லை. ஏகப்பட்ட பிரசார ஸ்டார்கள், பீரங்கிகள், ஏகப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உண்டு. ஆனால், களத்தில் தென்படுவது எல்லாம் கருணாநிதி, ஸ்டாலின் முகங்கள் மட்டுமே. துடிப்புடன் களவேலை செய்யவேண்டிய கட்சியின் கடைநிலைப் பொறுப்பாளர்கள் ஒதுங்கியிருப்பது எதனால்? தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் இப்படிச் சொன்னார்...


‘‘எப்படியும் தி.மு.க ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கை, கட்சி சாராத பொதுமக்களிடம்கூட இருக்கிறது. தி.மு.க-காரர்களுக்குத்தான் அந்த நம்பிக்கை வர மறுக்கிறது. காரணம், ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வந்துவிடும் என்ற நம்பிக்கை, தொண்டர்களின் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. கடைசி நாள் வரைக்கும் அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்கள். இதனால் தொண்டர்கள், ‘தே.மு.தி.க வந்தால்தான் நம்மால் வெற்றிபெற முடியும்’ என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். திடீரென அவர்கள் இல்லை என்றதும், தொண்டர்களுக்கு ஏமாற்றம். இதுதான் சோர்வுக்குக் காரணம். கட்சி நிர்வாகிகள் பலருக்கே இந்த அவநம்பிக்கை இருக்கிறது. அவர்கள் செலவுசெய்யத் தயங்குகிறார்கள். தி.மு.க-வினர் மத்தியில் சுணக்கம் நிலவ இதுதான் முதல் காரணம்’’ என்றார்.

தி.மு.க  முதல்தடவையாக அடுத்த கட்சியின் தயவை அதிகம் எதிர்பார்த்தது இந்தத் தேர்தலில்தான். இதுவரை, `தி.மு.க., தங்களைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுமா?' என்றுதான் மற்ற கட்சிகள் பதற்றத்தில் இருப்பார்கள். இந்த முறை விஜயகாந்த் வருவாரா எனக் காத்திருந்து காத்திருந்து தேய்ந்துபோனார்கள்.

ஆளும் கட்சி மீதான எதிர்ப்பை, வாக்குகளாக அறுவடைசெய்வதில் தி.மு.க-வின் பிரசார உத்தி இப்போது வரை பெரிய அளவில் எடுபடவில்லை. அதன் தொலைக்காட்சி விளம்பரங்களும், பிரசாரத்தில் ஸ்டாலின் முன்வைக்கும் விவரங்களும் கவன ஈர்ப்பைத் தந்தாலும், ஆதரவுத்தளத்தைப் பெரிய அளவில் உருவாக்கவில்லை. அதற்குக் காரணம், ஆளும் கட்சியின் மீது பகீரென்று ஒரு குற்றச்சாட்டைக்கூட தி.மு.க தலைமை அம்பலப்படுத்தவில்லை.

‘அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ள, செல்வாக்குமிக்கப் பெரியக் கட்சி’ என்ற பழைய பெருமையில்தான் வண்டியை ஓட்டவேண்டியுள்ளது.

‘அ.தி.மு.க வேண்டாம்’ என முடிவு எடுப்பவர்கள், தங்கள் ஓட்டு வெற்றிபெறும் கட்சிக்குச் செல்ல வேண்டும் என நினைத்தால், தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள். ஆனால்,  அவர்கள் தி.மு.க-வுக்கு விரும்பி வாக்களிக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. இப்படித்தான் தி.மு.க-வுக்கு வாக்குகள் போகவேண்டியுள்ளது. அடுத்தவரின் எதிர்மறையில் இருந்து வாக்குகளை வாங்குகிறது தி.மு.க.

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்ற தி.மு.க-வின் விளம்பரம் அதன் வரலாற்றில் முற்றிலும் புதிய பாணி. நவீன இளைஞர்களைக் குறிவைத்து தரலோக்கலாக இறங்கி அடித்தார்கள். அந்த விளம்பரங்களின் முதன்மை இலக்கு ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இருக்கும், முதல் தலைமுறை வாக்காளர்கள்தான். ஆனால் என்னதான் மீம்ஸ், ஹாஷ்டேக், கலாய் வீடியோ... என விளம்பரங்கள் செய்தாலும் அதற்கு எதிர்வினையாக தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மறக்கப்படாமல் வந்துவிழுகின்றன. இதனால்தான்  இளைஞர்களின் மனங்களை தி.மு.க வெல்வது சிரமமாக இருக்கிறது. அவர்கள், ஒரு 93 வயது முதியவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ‘ஸ்டாலின் பெயர் முன்மொழியப்பட்டு இருந்தால்கூட அவருக்கு வாக்களிப்போம். கருணாநிதிக்கு எப்படி?’ என்பது இளைஞர்கள் பலரது குரலாக இருக்கிறது.

முன்னர் `கருணாநிதி குடும்ப ஆதிக்கம்’ என்றார்கள். இப்போது அது ஸ்டாலின் வசம் வந்துவிட்டது. மகன் அழகிரியை விரட்டிவிட்டார் கருணாநிதி. மருமகன் சபரீசனை ஸ்டாலின் கொண்டுவந்திருக் கிறார். இடைப்பட்ட நாட்களில் கட்சிப் பணிகள் எதிலும் எந்த வகையிலும் பங்கெடுக்காத தயாநிதி மாறன், திடீரென கருணாநிதி பிரசாரத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். கருணாநிதி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் இனி எந்தக் காலத்திலாவது தி.மு.க-வின் தலைமையில் அமர முடியுமா என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் அதற்கான சாத்தியம் தென்படவில்லை. இது உயிரைக் கொடுத்து, வியர்வை சிந்தி கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கும் சோர்வைத் தருகிறது.
கடந்த ஆண்டு, தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல் நடந்தது. மாவட்ட வாரியாக ஸ்டாலின் நீண்ட நேர்காணல் நடத்தினார். ஆயிரக்கணக்கான புதிய இளைஞர்கள் நம்பிக்கையோடு அறிவாலயத்துக்குப் படையெடுத்தார்கள். ஆனால், முரசொலி அறிவிப்பில் வந்தது எல்லாம் அதே பழைய நிர்வாகிகளின் பெயர்களும் வாரிசுகளின் பெயர்களும்தான். உள்கட்சித் தேர்தலுக்கு மட்டும் அல்ல. இப்போதைய சட்டமன்றத் தேர்தலுக்கும் இது பொருந்தும். திருவாடனையில் சுப.தங்கவேலனின் மகன், வீரபாண்டியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன், மன்னார்குடியில் டி.ஆர்.பாலுவின் மகன், ஆ.கே.நகரில் சற்குணபாண்டியனின் மருமகள், பழனியில் ஐ.பெரியசாமியின் மகன், திருவெறும்பூரில் அன்பில் பொய்யாமொழியின் மகன், மதுரை மத்தியில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன், சிதம்பரத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் அக்கா மகன், உடுமலைப்பேட்டையில் மு.கண்ணப்பனின் மகன்... என எங்கெங்கும் வாரிசுகளுக்கே வாய்ப்பு. இவர்களை மீறி ஒருவர் சிறு வாய்ப்பையும் பெற முடியாது என்றால், புதியவர்கள் எந்த நம்பிக்கையில் தி.மு.க-வில் இயங்க முடியும்?

கடந்தமுறை கருணாநிதி ஆட்சிக் காலத்தின் இறுதி ஆண்டில், ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போரில் கருணாநிதி ஆடிய பெரும் நாடகத்தை யாரும், எப்போதும் மறக்கப்போவது இல்லை. ‘என்னால் முடியவில்லை’ என வெளிப்படையாக அறிவித்திருந்தால் முடிந்தது வேலை. ஆனால், உண்ணாவிரதம், அது இதுவென இவர் நடத்திய நாடகத்தை, அப்போது அரசியல் எழுச்சிபெற்றுவந்த பல்லாயிரம் இளைஞர்கள் இப்போது வரை மறக்கவோ, மன்னிக்கவோ தயாராக இல்லை. இன்றைய புதிய வாக்காளர்கள் அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருந்தவர்கள். எல்லாவற்றுக்கும் பதில்சொல்லும் கருணாநிதி அதுபற்றி வாயே திறப்பது இல்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது தி.மு.க-வின் நிரந்தரக் கறை. என்ன விளக்கங்கள் சொன்னாலும், ‘சட்டப்படிதான் ஒப்புதல் அளித்தேன்’ என ஆ.ராசா சொன்னாலும், அது தி.மு.க-வைச் சுழற்றி அடிக்க இந்தத் தேர்தலிலும் காத்திருக்கிறது. இதை காங்கிரஸ் கூட்டும் உறுதிப்படுத்துவதாக மாறிவிட்டது.

இப்போது எந்த டி.வி-யைத் திறந்தாலும் தி.மு.க-வின் தாறுமாறான தேர்தல் விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இணையதளங்களில் எங்கும் உதயசூரியன் மின்னுகிறது. இதைப் பார்த்து தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் கருதுவார்கள் என தி.மு.க நினைக்கிறது. ஆனால் மக்களுக்கோ, கடந்த தி.மு.க ஆட்சியில் எந்த டி.வி-யைத் திறந்தாலும் க்ளவுட் நயன் மூவீஸ், ரெட்ஜெயன்ட் மூவீஸ், மோகனா மூவீஸ்... என அவர்களின் குடும்ப நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்திருந்ததுதான் நினைவுக்குவருகிறது. அத்துடன் சேர்த்து `பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா’ நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களை மயக்கம்வரும் அளவுக்குத் துவைத்தெடுத்த பழைய நிகழ்வுகள் எதையும் அவர்கள் மறக்கவில்லை.

எல்லாவற்றையும் கடந்து இந்த முறை மூன்று முக்கியமான விஷயங்கள் தி.மு.க.வுக்குச் சாதகமாகக்  களத்தில் தென்படுகின்றன.

ஒன்று... அரசு ஊழியர்களின் ஓட்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் மிகப் பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். முத்துக்குமாரசாமியின் தற்கொலை தொடங்கி ஏராளமான விபரீதங்கள். மேலிட அழுத்தம், பல்வேறு இலவசத் திட்டங்களைக் கையாள வேண்டிய பணிச்சுமை, முடங்கிய அரசு நிர்வாகம், கட்சிக்காரர்களின் குறுக்கீடு... எனத் தத்தளிக்கும் அரசு ஊழியர்கள் தி.மு.க பக்கம் சாய, எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன. அவர்களது மறைமுகப் பிரசாரம் தி.மு.க-வுக்குக் கைகொடுக்கிறது.
இரண்டாவது... பெண்கள் ஓட்டு. எப்போதுமே பெண்கள் ஓட்டுகள் ஜெயலலிதாவுக்குத்தான் போகும். இந்த முறை டாஸ்மாக் மதுக் கடைகள் ஏற்படுத்தியிருக்கும் பேராபத்தின் நேரடிப் பாதிப்பைச் சுமக்கும் பெண்கள் எப்படியாவது அவற்றை மூட வேண்டும் என நினைக்கிறார்கள். ஜெயலலிதா ‘படிப்படியாக மூடுவோம்’ என்பதை மக்கள் ரசிக்கவும் இல்லை; நம்பவும் இல்லை. ‘டாஸ்மாக்கை மூடுவோம்’ என்ற தி.மு.க-வின் உறுதிமொழியைத்தான் நம்புகின்றனர். இந்தவகையில், கணிசமான பெண்களின் ஓட்டு, முதல்முறையாக தி.மு.க-வுக்குச் சென்றுசேரும் தேர்தலாக இது இருக்கும். இது தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பைக் கணிசமாகத் தீர்மானிக்கும்.

மூன்றாவது... சிறு குறு தொழில் முனைவோர். திருப்பூர், விருதுநகர், கோவை, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் சிறுதொழில் செய்வோர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் தொழில் முடங்கிக் கிடப்பதாகச் சொல்கின்றனர். அரசிடம் விண்ணப்பித்து ஓர் அனுமதி, ஒரு சான்றிதழ், ஒரு லைசன்ஸ் வாங்க முடியவில்லை. அடுத்த கட்டத்துக்கு தொழிலைக் கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் தங்கள் பணியாளர்களை அழைத்து, ‘தி.மு.க-வுக்கே ஓட்டு போடுங்கள்’ எனச் சொல்கிறார்கள்.

இந்த மூன்றும் முக்கிய நம்பிக்கையாக தி.மு.க-வுக்கு இருக்கிறது. ‘அ.தி.மு.க-வுக்கு மாற்று தி.மு.க என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.

அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமானால் தி.மு.க-வுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்' என்று தி.மு.க தலைமை நினைக்கிறது. அவர்கள் நினைப்பது மாதிரியே, வாக்குகளை ஈர்க்கும் தன்மை மற்ற கூட்டணிகளுக்கும் இல்லை.

அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை முழுமையாக, சிந்தாமல், சிதறாமல் அறுவடைசெய்வோம் என்ற நம்பிக்கையில் இறுதிச்சுற்றை நெருங்கிக்கொண்டி ருக்கிறது தி.மு.க.

அது உறுதிச்சுற்றாக இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள மே 19-க்குக் காத்திருப்போம்!   விகடன் டீம், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக