ஞாயிறு, 15 மே, 2016

ஐன்ஸ்ட்டீனும் நியூட்டனும் அசந்துபோகிற கண்டுபிடிப்பாளர்கள் R.K Nagar ...

ஐன்ஸ்ட்டீனும் நியூட்டனும் அசந்துபோகிற அளவுக்கு கண்டுபிடிப்பாளர்களாக இருக் கிறார்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.கவினர். ஆர்.கே.நகர் அம்மாதொகுதியில் கேபிள் டி.வி இலவசம் என்று செல்போன் நம்பர் ஒன்றும் தரப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு போன் செய்தால் ஓட்டுக்கான பணம் உறுதி யாகிறது. காஞ்சிபுரத்தில் வீடு வீடாக கல்யாண பத்திரிகை கொடுக்கப்பட்டது. யாருக்கு கல்யாணம் என பிரித்துப் பார்த்தால், 500 ரூபாய் தாளில் காந்தி சிரிக்கிறார். அதிர்ந்த நீதிபதி! சென்னை அடையாறு பகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் ஒரு வீட்டின் கதவைத் தட்டி, இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்க என்றபடி 20 லிட்டர் பெட்ரோல் கூப்பனைக் கொடுத்திருக்கிறார்கள். வாங்கியவர் அதிர்ச்சியாகிவிட்டார். அவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு போன் செய்து கடுமையான குரலில் நிலவரத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கெல்லாம் அ.தி.மு.கவினர் அலட்டிக் கொள்ளவில்லை.

டீக்கடை டோக்கன் உள்பட எல்லாவற்றையும் ரூபாய் நோட்டுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கரண்ட் கட் ஆனால் மக்கள் மகிழ்ச்சியடை கிறார்கள். காரணம், ஓட்டுக்குப் பணம் கொடுக்க அ.தி.மு.க.வினர் வருகிறார்கள் என்பதற்குத்தான் கரண்ட் கட் சிக்னல். போலீஸ், மின்வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணியுடன் கனகச்சிதமாக பட்டுவாடா செய்திருக்கிறது
அ.தி.மு.க. பொதுவாக ஒரு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 250 ரூபாய். டஃப் பைட் தொகுதி என்றால் 500 ரூபாய். மந்திரி தொகுதி என்றால் 1000, 1500, 2000. சில இடங்களில் குடும்ப பேக்கேஜாக 5000 ரூபாய். தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் ஊராட்சி வாரியாக கொடுக்கப்பட்ட பணம் பற்றிய பட்டியல் வெளியாகி மிரள வைக்கிறது. பறக்கும்படையை மிரட்டிய மந்திரி! 12-ஆம் தேதி மதியவாக்கில், திண்டுக்கல் தொகுதியில் உள்ள மாலைப்பட்டியில் கேபிள்கார ரான அ.தி.மு.க. ஆதரவாளர் சரவணன் மூலம் பணத்தை விநியோகிக்க முயன்றனர். அதை பறக்கும்படையினர் உரிய நேரத்தில் வந்து தடுத்து, சவுண்டு விட்ட சரவணனை திண்டுக்கல் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இரண்டு பிரபலங்கள் மோதிக்கொள்ளும் ஆத்தூர் தொகுதியில், அழகர்நாயக்கன்பட்டியில் பட்டுவாடா தொடர்ந்தபோது, தி.மு.க.வினர் விரட்ட... பணத்தை விசிறியடித்துவிட்டு ஓடினர். ஆனாலும் அவர்களைப் பிடித்துவைத்து, பறக்கும் படைக்கும் போலீசுக்கும் தகவல் தந்தனர், தி.மு.க. வினர். ஒரு மணி நேரம் ஆகியும் எந்தப் படையும் வரவில்லை. இதற்கிடையில் தன் கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த ஆத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கோபி, தி.மு.க. பொறியாளர் அணி யின் வேல்முருகன் தலைமையில் கத்தி, கம்புடன் வந்தவர்கள்தான் அ.தி.மு.க.வினரைப் பிடித்து கட்டிவைத்துவிட்டதாகப் புகார்கூறி, போலீசுடன் அ.நா.பட்டிக்குச் சென்றார்.

ஊர்க்காரர்களோ நடந்ததைச் சொல்லி, குமார், பழனிச்சாமி ஆகிய நத்தம் பகுதியைச் சேர்ந்த இருவரையும் பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர். அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற பறக்கும்படை அதிகாரி மேகலாதேவியிடம், ""எப்படி எங்கஆளு மேல கேஸ் போடலாம்'' என எகிறியிருக்கிறார். கோபமான பெண் அதிகாரியோ, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார். தகவல் அறிந்த நத்தம் விசுவநாதனும், பெண் அதிகாரியிடம் இது குறித்து மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். இது குறித்து அதிகாரி மேகலாதேவியிடம் கேட்டதற்கு, ""முறைப்படி நடவடிக்கை எடுத்ததற் காக, கோபி வாய்க்கு வந்தபடி பேசினார்.

இதுபற்றி தொகுதி தேர்தல் அதிகாரி சீதாவிடம் புகார் தந் துள்ளேன். மாவட்ட ஆட்சியர், தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் தெரிவித்துவிட்டேன்'' என்றார் அவர். வாக்குப்பதிவு நாளில் ஆத்தூரில் வன்முறை வெடிக்கலாம் என்ற பதட்டம் நிலவுகிறது. சிறுவர்கள் மூலம் விநியோகம்! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பாஸ்கர், வாட்ஸ்-அப் புகழ் முன்னாள் அமைச்சர் ரமணா தலைமையில் ஒன்றிய செயலாளர்களிடம் பணம் கொடுக்கப்பட்டு கிளைச் செயலாளர்கள் மூலம் ஊரில் உள்ள சிறுவர் களை வைத்து பணம் பட்டுவாடா செய்யப்படு கிறது.

இதேபோல திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவடி தொகுதியில் கவரப்பாளை யம் பகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தேர்தல் அதிகாரி பணத்தை கைப்பற்றினார். பூத் ஸ்லிப், ஜெ. படம் ஆகியவற்றுக்குள் அ.தி.மு.க. வேட்பாளர் மாஃபா பாண்டியராஜனின் ஆட்கள் பணம் வைத்து விநியோகம் செய்ய, இதற்குப் போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர். பறக்கும் படை அதிகாரிகளிடம் பிடிபட்ட இந்தப் பணம் பற்றிய வீடியோ இப்போது வாட்ஸ்அப்பில் பிரபலம். இலை -சூரியன் போட்டி விநியோகம் வேலூர் மாவட்டம், அணைக் கட்டு தொகுதியில் தி.மு.க. நந்தகுமார், அ.தி.மு.க. கலையரசன், பா.ம.க. இளவழகனுக்கு இடையே நிலவிய போட்டி இப்போது தி.மு.க., அ.தி.மு.க. எனக் கூர்மையடைந்துள்ளது.

பா.ம.க. நிர்வாகிகளோ, ""கட்சிக்குத் துரோகம் செய்துட்டுப் போன கலையரசன் வரவேகூடாது. அதுக்குத் தகுந்த மாதிரி வேலை பார்ப்போம்'' என முடிவெடுக்க... கலையரசன் அதிர்ந்து போய்விட்டார். இதனால் தொகுதியின் பல இடங்களில் ஓட்டுக்கு 500, 1000 என தந்துள்ளார். திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேலுவுக்கு ரொம்ப கஷ்டம் என அ.தி.மு.க. வேட்பாளர் ராஜனின் சாதிக்காரர்கள் கிளப்பிவிட்டனர். ஆனால் தனக்குத்தான் எதிர்ப்பு அதிகமாகவுள்ளது என்பதை அறிந்த ராஜன், பிற சாதியினருக்கு 500 ரூபாயும், தனது முதலியார் சாதிக்காரர்களுக்கு 1000 ரூபாயும் 10-ந் தேதி முதலே தந்துள்ளார்.

தி.மு.க. வேலு தரப்பு தலைக்கு ஆயிரம் என தந்தது. இப்படி இரண்டு கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு பணம் தருவதை கண்டு வெதும்பினர் பா.ம.க. மற்றும் ம.ந.கூ.வில் உள்ள கட்சியினர். பா.ம.க. நிர்வாகிகள் பறக்கும் படைக்கு தகவல் சொல்ல, அவர்கள் வருவதற்குள் பணத்தை பட்டுவாடா செய்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டனர். மக்களோ பணத்தை தடுத்தவர் களைப் பல இடங்களில் திட்டித் தீர்த்தனர். வேட்பாளர் வீட்டில் சிக்கிய தொகை! வாணியம்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நிலோபர்கபில் தலைக்கு ஆயிரம் என்ற கணக்கில் பணத்தை கணக்கு பண்ணி தன் மகன் மேற்பார்வையில் கட்சி பூத் கமிட்டிகளிடம் செட்டில் செய்திருந்தார்.

பறக்கும்படை அதிகாரி ஹமீத்நவாஸ் மற்றும் சிவக்குமார் தலைமையிலான டீம் வேட்பாளர் நிலோபர்கபில் வீட்டுக்கே 11-ந் தேதி இரவு சென்று சோதனை நடத்தியது. அதிகாரிகள் வருகிறார்கள் என தெரிந்ததும் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு நிலோபர் ஆதரவாளர் ஒருவர் 60 லட்சத்துடன் அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டார். மூட்டை கட்ட முடியாத பண கட்டுக்களை வீட்டில் உள்ள சோபாவின் அடியில் தள்ளி விட்டபின் கதவை திறந்துள்ளனர். அதிகாரிகள் இன்ச் பை இன்ச்சாக சோதனை செய்ததில் சோபாவுக்கு கீழே இருந்த 14,08,820 ரூபாய் பண கட்டுக்களை கைப்பற்றினர்.

இது என் மகன் நடத்தற மருத்துவமனை ஊழியர்களுக்கான சம்பளம்'' என வேட்பாளர் நிலோபர்கபில் கணக்கு சொல்ல, ""அப்பறம் எதுக்கு அதை சோபாவுக்கு கீழே மறைச்சி வச்சிருந்திங்க'' என அதிகாரிகள் கேள்வி எழுப்ப, அதற்குப் பதில் இல்லை. வேலூரிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகளை வரவைத்து அந்த பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தது பறக்கும்படை. கச்சிதமான விநியோகம்! மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் கடந்த 11ஆம் தேதி இரவில் ஒரே மூச்சாக பணப்பட்டுவாடாவை நடத் தியது, ஆளும் கட்சி. மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட சம்மட்டிபுரத்தில் 10-ம் தேதி மதியமே 30 பேர் கொண்ட கும்பலை அழைத்துவந்தது அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பு. மாநகராட்சி மண்டலத் தலைவரான ராஜபாண்டியின் வீட்டில் வைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறைகளில் தலா 300 ரூபாயைப் போட்டுக்கொண்டு வந்தனர்.

அப்போது மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் வீரராகவரா விடம் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்ற அமைச்சர் ராஜு, தி.மு.க.வினர்தான் மேற்கு தொகுதியில் அராஜகத் தில் ஈடுபடவிருக்கிறார்கள் என புகார் தந்தார். அதையடுத்து தேர்தல் பணியில் இருந்த தி.மு.க. வினர் தொகுதியைவிட்டு வெளியேற்றப்பட.. அன்று இரவு திட்டமிட்டபடி கச்சிதமாக அ.தி.மு.க. சார் பில் பணப்பட்டுவாடா நடந்துமுடிந்தது. இதை யொட்டி முன்னதாக இரவு 9 மணிக்கே, மேற்கில் உள்ள எல்லா போலீஸ் இன்ஸ்பெக்டர்களையும் வீட்டுக்குப் போகுமாறு அமைச்சர் ராஜுவே சொல்லியிருக்கிறார். "ஓட்டுக்கு அமைச்சர் பணம் தந்தபோதும், ‘ஆயிரம், இரண்டாயிரம்னு சொல்லிப்புட்டு 200, 300 குடுத்தா எப்புடி? காசு வாங்குனாலும் ஓட்டு போட மாட்டோம்!' என தொகுதி மக்கள் அவர்களின் ’கொள்கையில் கறாராக நின்றார்கள்!

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மேயர் இராசன் செல்லப்பா, அடுத்த நாளான 11-ம் தேதி இரவில் 70% சப்ளை செய்தார். தல்லாகுளம் பகுதியில் அரசு குடியிருப்புகள் அதிகம் என்பதால் திணறிப்போனார். அடுத்த உத்தியாக, "இங்கே காங்கிரஸ்தானே நிற்கிறது, நீங்க அட்ஜஸ்ட் பண்ணுங்க' என தி.மு.க தரப்பை கவனிக்க ஆரம் பித்து, பணப்பட்டுவாடாவை கச்சிதமாக்கியுள்ளார். திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளின் உதவியுடன் பட்டுவாடாவை நடத்திவிட்டார். இந்தப் பிரச்சினை குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி வீரராகவராவிடம் கேட்டதற்கு, ""பணப்பட்டு வாடா செய்தவர்கள் மீது வழக்கு போட்டு சிலரைக் கையோடு கைதும் செய் திருக்கிறோம்.. எங்காவது நடந்தால் சொல்லுங்கள்'' என்றார் ரொம்பவும் சாதாரணமாக.

காங்கிரசுக்கு உதவும் அ.தி.மு.க.! கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. மா.செ. விஜயபாஸ்கர் ஓட்டுக்கு 1000 கொடுக் கிறார். தலித் மக்கள் பகுதிகளில் 1,500 அள்ளிவிடு கிறார். காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் சுப்ரமணி யன் ஓட்டுக்கு 1000 கொடுக்கிறார். இவர் எப்படி கொடுக்கிறார் என தொகுதியே அதிர்ச்சியில் பார்க்கிறது. தன் பரம எதிரி முன்னாள் மா.செ. விஜயபாஸ்கர் தோற்கவேண்டும் எனும் வெறி யுடன், அ.தி.மு.க. மாஜி மந்திரி செந்தில்பாலாஜி ஆட்களே காங். ஆட்களுக்கு உதவி செய்கிறார்கள்.

தனது அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு 2,000 கொடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.சி.பழனிச்சாமியோ ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். கே.சி.பி மீண்டும் பணம் கொடுத்தால் மறுபடி தானும் 5,000 வரை கொடுக்கத் தயாராக இருக்கிறார் செந்தில்பாலாஜி. எலெக்ஷன் ரெய்டில் தி.மு.க. கே.சி.பி.க்கு சொந்தமான இடங்கள் தப்பவில்லை.

சிக்கிய மா.செ. வேட்பாளர்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிவசுப்பிரமணியம். 12ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதிபாளையத்தில் உள்ள தனியார் வாகன ஓட்டுநர் வீட்டில் தேடுதல் நடத்தப்பட.. ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சிக்கி யது. வருமான வரித் துறை, பறக்கும்படையினர் சேர்ந்து நடத்திய அதிரடியில், ""வேட்பாளர்தான் கொடுமுடி ஒன்றியத்தில் 14ஆம் தேதி, தலா 5 ஆயிரம்வீதம் விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தார்'' என்பதை புட்டுப்புட்டு வைத்துவிட்டார், வீட் டின் உரிமையாளரான வேட்பாளரின் சம்பந்தி பாலசுப்பிரமணியம். எவ்வளவு பிடிபட்டது என்பதை அதிகாரிகள் தெரிவிக்காததால், ஊர் மக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினார்கள். ஆளுந்தரப்பில் பணமழை ஓயவில்லை. -சக்தி, ஜீவாதங்கவேல், முகில், ஜெ.டி.ஆர், ராஜா, வடிவேல், தேவேந்திரன்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக