செவ்வாய், 3 மே, 2016

ஸ்மிருதியின் கல்விச் சான்றிதழை கண்டுப்பிடிக்க இயலவில்லை: தில்லி பல்கலைக்கழகம்... இருந்தால்தானே...

தினமணி.com :புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்விச் சான்றிதழ்களை கண்டுப்பிடிக்க இயலவில்லை என தில்லி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வடக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இராணி போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல்செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஸ்மிருதி இராணி கல்வித் தகுதி குறித்து தவறானத் தகவல்களை அளித்துள்ளார் எனக் கூறி எழுத்தாளர் ஆமீர் கான் என்பவர் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும், இராணியின் கல்வித் தகுதி குறித்த சான்றிதழ்களை தில்லி பல்கலைக்கழகமும், தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து இராணியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை கல்வித்துறையின் உதவி பதிவாளர் ஓ.பி.தன்வார் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் 1996 ஆம் ஆண்டில் ஸ்மிருதி இராணி தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான கல்விச் சான்றிதழ்களை கண்டுப்பிடிக்க இயலவில்லை என கூறியுள்ளார்.
எனினும், அவர் ஸ்மிருதி இராணி தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான வேறு சில ஆவணங்களை தாக்கல் செய்தார். அதன்படி இராணி கடந்த 1993-94 ஆம் ஆண்டில் பி.காம் படிப்பில் சேருவதற்காக அளித்த சேர்க்கை விண்ணப்பத்தையும், 2013-14 ஆம் ஆண்டில் பி.ஏ.(அரசியல் அறிவியல்) படிப்பில் சேர்ந்ததற்கான சேர்க்கை விண்ணப்பத்தையும் அளித்தார். மேலும், இந்த சேர்க்கையின்போது ஸ்மிருதி இராணி தாக்கல் செய்திருந்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்த ஆவணங்களையும் கண்டுப்பிடிக்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, வடக்கு தில்லியின் உதவி தேர்தல் அலுவலர் வந்திதா ஸ்ரீவத்ஸா தாக்கல் செய்திருந்த மனுவில், ஸ்மிருதி இராணி வேட்புமனுவுடன் எவ்வித கல்வி சான்றிதழ்களையும் இணைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக