ஞாயிறு, 1 மே, 2016

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பங்காளி தகராறு? ஒதுங்க இடம் கேட்டாய்ங்க...மாட்டேன்னா? விடுவோமா?

vikatan.com ஜெ. க்ளைமாக்ஸ் சீக்ரெட்! அது... இது... எது?“நாடு முழுக்க நகர்ந்து வரும் கரன்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்றால் அவற்றைச் சில இடங்களிலாவது தேர்தல் ஆணையம் பிடித்துவருவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்ன இருந்தாலும் அவர்கள் அரசு அதிகாரிகள்தானே... எப்படி இது சாத்தியம்?” என்ற கேள்வியை கழுகாருக்கு அனுப்பி, ‘‘இதற்கான பதிலுடன் வரவும்” என்ற கட்டளையையும் போட்டு இருந்தோம். கழுகார் வரும்போதே, அவரது சிறகுகளுக்குள் இதற்கான ஆவணங்கள் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. ‘‘இப்போது ரெய்டு நடத்துவது தேர்தல் கமிஷனின் பறக்கும் படை மட்டுமல்ல, வருமானவரித் துறையினரும் இவர்களோடு இணைந்து இருக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசாங்கத்தின் கை ஓங்கி இருக்கிறது என்றுதான் அர்த்தம்” என்று கண் அடித்தபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.


‘‘மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமியான கரூர் அன்புநாதன் சிக்கி இருக்கிறார். சசிகலாவின் நெருங்கிய உறவினரான சென்னை விஜயகுமார் மாட்டி உள்ளார். பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் சிக்கி உள்ளார். இவர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய சகா. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் நண்பர். அன்புநாதன், விஜயகுமார், மகேந்திரன் ஆகிய மூவருமே அதிகார மையத்துக்கு மிகவும் வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள் என்பதால் யாருக்கான பணம், எதற்கான பணம் என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது. கோடிக்கணக்கான பணம் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது!”

‘‘இவர்கள் யார் என்று தெரிந்தும் இவர்களிடம் இருந்து பணத்தைக் கைப்பற்றும் அளவுக்குத் தேர்தல் கமிஷனுக்கு தைரியம் வந்துவிட்டதா என்று பலரும் கேட்கிறார்களே?”

“ஆளும்கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் போட்டுக்கொடுப்பது கொஞ்சம்தான்! மேலும், இந்த விவகாரத்தில் பல சிக்கலான அரசியல் குவி மையங்கள் இருக்கின்றன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு, இங்குள்ள ஆளும் கட்சிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றி வருகிறது. அதன் ஒரு கட்டம்தான், தேர்தல் நேரத்தில் ரெய்டு நடத்திக் கைப்பற்றும் பணக்குவியல்கள். இதுவரை இந்தியாவிலேயே முதல்முறையாகத் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் வருமானவரித் துறை அதிகாரிகளும்  இணைந்து தமிழகத்தில் சோதனை செய்கின்றனர். தேர்தல் அதிகாரிகளுக்கு எங்கிருந்தாவது தகவல் வரும். அவர்கள் தங்களது படையைத் திக்கித் திணறித் திரட்டுவார்கள். இவர்கள் போய்ச் சேருவதற்கு முன்னால் அந்த ஆட்கள் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இதுவரை இதுதான் நடந்தது. முதல் தடவையாகக் கையும் களவுமாக ஆன் தி ஸ்பாட் பணத்தைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏப்ரல் 28 வரையில் ரெய்டு மூலம் கைப்பற்றப்பட்ட பணம் சுமார் 65 கோடி. வாகனங்கள், தங்கம், இலவச பரிசுப் பொருட்கள்... இதெல்லாம் தனி.”

“இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படிக் கைப்பற்றினார்கள்?”

‘‘இவ்வளவையும் பின்னணியில் இருந்து செய்வது அமித்ஷா என்று சொல்கிறார்கள். கடைசியில் எப்படியாவது அ.தி.மு.க-வுடன் கூட்டணி செட் ஆகிவிடும் என்று நினைத்தார் அமித்ஷா. ஆனால், கடைசி வரை அதற்கு இடம் தரவில்லை. விஜயகாந்தும் ஏமாற்றிவிட்டார். இந்த நிலையில்தான், தமிழகத் தேர்தலில் பணம் நடமாடுவதைத் தடுக்க அமித்ஷா திட்டமிட்டார். ‘பணத்தைவைத்து ஜெயிக்க நினைக்கிறார்களா? அந்தப் பணத்தை எப்படித் தருகிறார்கள் என்று பார்ப்போம்’ என்று நினைத்தார் அமித்ஷா. அதற்காகத்தான் வர்மா ஆபரேஷனைத் தொடங்கினார்!”

‘‘யார் அந்த வர்மா?”

‘‘கடந்த ஐந்து வருடங்களாகத், தமிழகத்தில் மத்திய உளவுத் துறையின் தலைவராக இருந்தவர் ரவிச்சந்திரன். தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. தமிழக அமைச்சர்களின் பினாமிகள், அரசு மேலிடத்துக்கு வேண்டப்பட்ட பிசினஸ் புள்ளிகள், பெரிய, பெரிய கான்ட்ராக்டர்கள்... என்று ‘பிக் - ஷாட்’களின் பட்டியலை ஆதாரங்களுடன் அவ்வப்போது மோப்பம் பிடித்து ரகசியத் தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். கடந்த ஒரு வருடகாலத்தில் தமிழகத்தில் எங்கெங்கே பணம் பதுக்கிவைக்கப்பட்டது? எப்போது அவை வெளியே வரும்? எந்த ரூட்டில் அது பயணப்படும் என்கிற விவரங்கள் மத்திய உளவுத்துறைக்குத் தெரியும். ஆனால், திடீரென ரவிச்சந்திரன் டெபுடேஷனில் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். ‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அனுப்பிவிட்டார்கள்’ என்று சொல்பவர்களும் உண்டு. அவர் இருந்த இடத்தில் வர்மா என்கிற அதிகாரி வந்துள்ளார். கேரளக்காரர். டெல்லியில் 6 வருடங்கள் பணியில் இருந்தவர். இவரை, தமிழகத்துக்கு அனுப்பத் தேர்வுசெய்ததே பிரதமர் அலுவலகம்தான் என்கிறார்கள். எதற்கு அனுப்பப்பட்டார் என்பதைச் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.”

“பணம் வரும் பாதைகளைக் கண்டுபிடித்து, பிடிப்பதுதானே?”
“தேர்தலில் கூட்டணி அமைக்க பல வகைகளில்  பி.ஜே.பி-யினர் அ.தி.மு.க-வை அணுகினர். ஆனால், ஜெயலலிதா அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழக அரசின் மீது விமர்சன மழை பொழிந்தனர்.  பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு  விசாரணையைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வருகிறார். ‘மே 10-ம் தேதிக்குள் தீர்ப்பு வரும். அது, ஜெயலலிதாவுக்கு எதிராக அமையும்’ என்று தெரிவித்துள்ளார் சுவாமி. இதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை களம் இறக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரமாகப் பார்த்து அ.தி.மு.க. விசுவாசிகளான கோடீஸ்வரர்கள் பலர் மீது ரெய்டை ஏவி விட்டிருக்கிறார்கள்.”

‘‘வருமான வரித்துறை இந்த ரெய்டுக்குள் வர முடியுமா?”

‘‘வருமான வரித்துறைக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், பணத்துக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறது அல்லவா? கணக்கில் காட்டப்படாத பணம் கட்டுக்கட்டாக எங்கெல்லாம் இருக்கிறது என்று நோண்டி நொங்கு எடுக்கப்படுகிறது. எந்த ஒரு காயமும் இல்லாமல் உள்குத்துக் குத்துவதில் கைதேர்ந்தவர்கள் பி.ஜே.பி-யினர். அதிலும், அமித் ஷா... ரொம்பவே புத்திசாலி. எது எதற்கோ அறிக்கைவிடும் ஜெயலலிதா தன் கட்சிக்காரர்கள் வீட்டில் இருந்து எடுக்கப்படும் பணத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த அளவுக்கு துல்லியமான தகவல்கள் மத்திய உளவுத்துறை மூலமாக வருமான வரித்துறைக்குத் தரப்படுகின்றன.”

‘‘மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரொம்பவும் வேண்டியவர் ஆச்சே?”

‘‘அதனால்தான் சில நடவடிக்கைகளை பிரதமரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ரகசியமாகவே வைத்திருந்தார் களாம். இவர்களின் ஆலோசகர் அமித் ஷா. இப்போது புரிகிறதா? நெட் வொர்க். இந்திய அளவில் சிறப்பாகப் பணியாற்றும் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் 124 பேர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதித்துறைச் செயலகம். இவர்களின் தலைமையின் கீழ் சுமார் 300 அதிகாரிகள் களத்தில் உள்ளனர். இவர்களுக்குப் பணம் பதுக்கல் பேர்வழிகளின் ரகசியத் தகவல்களை மத்திய உளவுத்துறை உடனுக்குடன் கொடுக்கிறது. மத்திய உளவுத்துறையின் தமிழகத் தலைவர் வர்மா ஐ.பி.எஸ்., தற்போது படு பிஸியாக இருக்கிறார்.”

“அடுத்து என்ன நடக்கும்?”

“தமிழகத்தில் முக்கியத் துறைகளைக் கவனித்த அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள், முதல்வரின் தோழி சசிகலாவின் உறவினர்கள், அவர்களின் பினாமிகள் எனப் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் எங்கெங்கே பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்? என்கிற அனைத்து விவரங்களும் உளவுத்துறையின் கையில் உள்ளன. இந்த வகையில், கரூரில் அன்புநாதன் என்பவரின் குடோனில் ஐந்து கோடியைப் பறிமுதல் செய்தனர். இவரின் பின்னணியில் தமிழக அமைச்சர்கள் இருந்ததை அம்பலப்படுத்தினர். அடுத்து, எழும்பூரில் விஜயகுமார் என்பவரின் அபார்ட்மென்டில் இருந்து ஐந்து கோடி பிடிபட்டது. இந்த விஜயகுமார், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு நெருங்கிய உறவினர்.”

“பொள்ளாச்சியில் நடந்தது என்ன?”
“பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவரின் இடத்தில்  வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் டாக்டர்.மகேந்திரன். இவர் பொள்ளாச்சி அ.தி.மு.க வேட்பாளர் ஜெயராமனின் உறவினர் என்று கூறப்படுகிறது. இவருக்குச் சொந்தமான குதிரைப் பண்ணை, பொள்ளாச்சி நடுப்புணி ரோட்டில் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட உயர்ரகக் குதிரைகளை மகேந்திரன் வளர்த்து வருகிறார். இதற்கிடையே மகேந்திரனின் குதிரைப்பண்ணையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருமானவரித் துறை துணை ஆணையர் ராணி காஞ்சனா தலைமையிலான அதிகாரிகளும், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் குதிரைப் பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 27-ம் தேதி மாலை 6.30 மணி வரை நடந்தது.”

“பணம் ஏதும் பறிமுதல் செய்யவில்லை என்கிறார்களே அதிகாரிகள்?”

“அதை தி.மு.க-வினர் நம்பத்தயாராக இல்லை. சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். பொள்ளாச்சி ஜெயராமனின் பணம்தான் அந்த டாக்டர் வீட்டில் இருந்தது என்று சொல்லி, தி.மு.க-வினர் தாறுமாறாகப் பிரசாரம் செய்தனர். ஒரு குறிப்பிட்ட பிரசார வேனில் வைத்து நடந்ததை அப்படியே வீடியோ எடுத்த ஜெயராமன் தரப்பினர் மாவட்டக் கலெக்டரிடம் கொடுத்து அவதூறு பேசிய தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளனர். இப்படியாக ஆங்காங்கே மோதல்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. மொத்தத்தில் ‘ஆபரேஷன் வர்மா’ விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: கண்ணா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக