ஞாயிறு, 29 மே, 2016

கோவிலுக்குள் நுழைய முயன்ற திருப்தி தேசாய் மீது தாக்குதல்


நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு காரில் செல்லும் வழியில், பிரபல சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வழிபட தடை:
மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - - சிவசேனா கூட்டணி அரசு நடக்கிறது. இங்கு, அகமது நகர் அருகே உள்ள, சனி சிங்னாப்பூர் கோவிலிலும், நாசிக் அருகே உள்ள திரியம்பகேஸ்வரர் கோவிலிலும், கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி, திருப்தி தேசாய் தலைமையிலான, 'பூமாதா ரன்ராகினி பிரிகேடு' என்ற பெண்கள் அமைப்பு, போராடி வந்தது. இதன் பலனாக, இரு கோவில்களிலும், கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது.


அதை தொடர்ந்து, மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் சென்று, திருப்தி தேசாய் பிராத்தனை நடத்தினார்.இதன் தொடர்ச்சியாக, நாசிக்கில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்குள், நேற்று முன்தினம், திருப்தி தேசாய் தலைமையில் பெண்கள் சென்று வழிபட்டனர். எனினும், கருவறைக்குள் அனுமதிக்கவில்லை. அங்கு, பூசாரிகளை தவிர, மற்றவர்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பின், அவர்களை கோவிலில் இருந்து அழைத்துச் சென்ற போலீசார், சற்று துாரம் சென்று இறக்கி விட்டனர்.

கடும் எதிர்ப்பு: இந்நிலையில், மீண்டும் கோவிலுக்கு செல்வதற்காக, காரில் அந்த பகுதிக்கு, திருப்தி தேசாய் வந்துள்ளார். கோவிலுக்கு வந்திருந்தோர், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருப்தி தேசாய் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். அவரை, இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற மர்ம நபர்கள் சிலர், கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில், திருப்தி தேசாயுடன் வந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக