புதன், 25 மே, 2016

மருத்துவ நுழைவு தேர்வு.. மோசடி? சமசீர்கல்விக்கு எதிராக கல்வி தொழிலதிபர்கள் + மத்திய மாநில உயர்தர வர்க்கம்...

தனியார் பள்ளிகளுக்கு ஈடாக போட்டிப் போட்டு, அவர்களுக்கு 'டஃப்'  கொடுக்கும் அளவிற்கு அரசுப் பள்ளிகள் முன்னேறி வருவதுதான்,  கல்வி தொழிலதிபர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. அரசுப் பள்ளி மாணவர்களால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தாலும்,  அவர்கள் செய்தித்தாளில் ஒரு பக்க அளவில் விளம்பரம் கொடுப்பதுமில்லை, கொடுக்கவும் முடிவதில்லை. அதனால்தான் அரசு பள்ளிக்கு இழப்பு ஏற்படுகிறது.  தமிழகத்தில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காரணமாக கட்டாய நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து தப்பித்து விட்டனர். ஆனால் அடுத்த ஆண்டு நிலைமை எந்த மாதிரி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. இந்த சூழலில்   சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என பதைபதைத்துக்கொண்டிருக்கின்றனர். 
இது தவிர ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் சிபிஎஸ்சி போன்ற மத்திய கல்வி வாரிய திட்டத்தின் கீழ் பயில்பவர்களே என வெளியாகும் தகவல், ' தவறு செய்துவிட்டோமோ... நம் குழந்தையையும் சிபிஎஸ்சி போன்ற மத்திய கல்வி வாரிய திட்டத்திலேயே சேர்த்திருக்ககாலாமோ...' என குழம்பி தவிக்கின்றனர்.

'இத்தகைய சூழலில் சமச்சீர் கல்வி திட்டம் சரிதானா... அதில் படிக்கும் மாணவர்களால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியுமா?' என்பதுபோன்ற விவாதங்கள் தீவிரமாக  எழத்தொடங்கி உள்ளதால், கல்வியாளர்களும், கல்வி ஆர்வலர்களும் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம்.
மிழக அரசு செயல்படுத்தியிருக்கும் பொதுப் பாடத்திட்டம் வரவேற்கத்தக்கது. முன்பு இருந்ததை விட அதிகமான பாடத்தைதான் சமச்சீர் கல்வியில் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பாடத்திட்டம்,  மாணவர்களை ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்கிறது. சமச்சீர் பாடமுறையில் பயிலும் மாணவர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அது மாணவர்களின் மீதோ அல்லது சமச்சீர் பாடத்திட்டத்தின் மீதோ இருக்கும் குறைபாடு அல்ல. மத்திய அரசின் தேர்வு முறையில்தான் திருத்தம் வேண்டும் ” என்கிறார் கல்வி ஆர்வலர் ரத்தின சபாபதி.

அவரே மேலும் ‘’ மாநில அரசின் பாடத்திட்டதின் கீழ் படித்து வரும் மாணவர்களால் எப்படி  ஒரு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத முடியும். சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் தேர்வு கேள்விகள் இருக்கும் போது , அதன் அடிப்படையில் இருக்கும் மாணவர்களால் மட்டும்தானே அந்த தேர்வை எதிர்கொள்ள முடியும். மேலும், சமச்சீர் கல்வியை படிக்கும் மாணவர்களின் பின்புலத்தை கவனித்தால், அவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை கல்வியாளராக இருப்பார்கள். ஆனால், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை கல்வியாளர்களாக இருப்பர்கள். எனவே அவர்கள் தேர்வை கையாளுவது எளிதாக இருக்கும். அதனால்தான் மத்திய அரசின் தேர்வுகளில் இந்த மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கிறது.

மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை கருத்தில் கொள்ளாமல்,  மத்திய அரசின் தேர்வு முறை இருக்கிறது. சமச்சீர் சிறந்ததா... சி.பி.எஸ்.சி சிறந்ததா என யோசிப்பது தவறானது. எனவே  மாநில அரசின் சமச்சீர் பாடமுறையில் படித்த மாணவர்களையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு மத்திய  தேர்வு முறையில்தான் திருத்தம் செய்ய வேண்டும்"  என்கிறார் .

சி.பி.எஸ்.சி-யை குறிவைத்து அதிகரித்து வரும் தனியார் பள்ளிகளை பற்றி பேசும் கல்வி ஆர்வலர் ஆ.முத்துகிருஷ்ணன், “பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் சமமாக  மற்றும் சம வாய்ப்பைதான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எல்லாத் துறையையும் தனியாருக்கும் கொடுத்தது போல், கல்வியையும் தனியாருக்கு கொடுத்து விட்டோம். தனியாரின் மேல் மக்களுக்கு மோகம் இருப்பது, இதிலும் தொடருகிறது. நம் குழந்தைக்கு புதிதாக எதோ கிடைக்கிறது என பெற்றோர்கள் தனியார் பள்ளி நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

அரசு பள்ளி, பார்க்க நல்ல தோற்றம் இருக்காது. தனியார் பள்ளி பார்க்க பளபளவென இருக்கும். தனியார் பள்ளி ஏற்படுத்தும் கவர்ச்சிதான் இதற்கு காரணம்.

இன்று அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளின் ஈடாக வளரத் தொடங்கி உள்ளன. இன்று அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வந்துவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டர்கள். பாடமுறையும் ஒரே மாதிரியாக அரசு அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கு பயம் வர ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் அரசு பள்ளியிலிருந்து தனித்து தெரிய முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசு பள்ளியிலும்தான் எல்லாம் இருக்கே.. அப்புறம் ஏன் தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதால்,  'நாங்கள் சமச்சீர் இல்லை, சி.பி.எஸ்.சி' என ஒரு ஆயுத்தை எடுத்துள்ளார்கள். சி.பி.எஸ்.சி யில் இருந்து எந்த அளவிலும் நம்ம சமச்சீர் கல்வி குறைந்தது கிடையாது. ஆனால் சி.பி.எஸ்.சி-தான் பெஸ்ட் என்று விளம்பரப்படுத்த , மக்களும் அதை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

நாங்கள் வித்தியாசம் என காட்ட,  தனியார் பள்ளிகள் வலை வீசி வசீகரப்படுத்தியதன் விளைவு, சமச்சீர் கல்வியின் மீதான நாட்டம்,  மக்களுக்கு இன்னும் அகலவில்லை. அவர்களின் கொள்ளை லாபத்துக்காக, கடந்த 20 ஆண்டுகளாக,  'அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர முடியாது' என்ற பிம்பத்தை தனியார் பள்ளிகள்,  மக்கள் மனதில் திணித்து நிலைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று வெளியாகும் பொதுத் தேர்வு முடிவுகளை பார்க்கும் போது , தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று அரசு பள்ளிகளின் முடிவுகளும் இருக்கின்றன.

தனியார் பள்ளிகள்,  மாணவர்களை வதைத்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் அப்படி கிடையாதே. சி.பி.எஸ்.சி பாடமுறையில் படிக்கும் மாணவர்கள்தான் ஐஐடி மற்றும் மத்திய அரசின் உயர்கல்வி தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது உண்மை இல்லை. அதற்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் இன்று வரை இல்லை. தனியார் பள்ளிகள்,  சி.பி.எஸ்.சி பாட முறையை பிரபலப்படுத்தியதன் விளைவினால்தான் அந்த பிம்பம் உலாவுகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தனியார் பள்ளிகளுக்கு ஈடாக போட்டிப் போட்டு, அவர்களுக்கு 'டஃப்'  கொடுக்கும் அளவிற்கு அரசுப் பள்ளிகள் முன்னேறி வருவதுதான்,  கல்வி தொழிலதிபர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. அரசுப் பள்ளி மாணவர்களால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தாலும்,  அவர்கள் செய்தித்தாளில் ஒரு பக்க அளவில் விளம்பரம் கொடுப்பதுமில்லை, கொடுக்கவும் முடிவதில்லை. அதனால்தான் அரசு பள்ளிக்கு இழப்பு ஏற்படுகிறது.
மேலும் தனியார் பள்ளிகளில்,  சி.பி.எஸ்.சி பாடம் நடத்த முறையான அனுமதி வாங்காமலேயே நடத்துகிறார்கள். ரொம்ப குழப்பம் நிறைந்தது இந்த சி.பி.எஸ்.சி பாடத்திடடம். அது முறையாகவும் இல்லை. சமச்சீர் திட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். சி.பி.எஸ்.சி மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். வெற்றியாளர்கள் பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்கள்தான். இதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்‘’ என்கிறார்

- கே.அபிநயா   விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக