புதன், 25 மே, 2016

வீழ்த்தப்பட்ட வி.ஐ.பி-க்கள் - நடந்தது என்ன? திருமாவுக்கு விஜயகாந்த் ஓட்டுக்கள் விழவே இல்லை?

விகடன்.காம் : மாற்று அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்று வசனம் பேசிய அன்புமணி, ‘தமிழன் வாக்கு தமிழனுக்கே’ என்று முழங்கிய சீமான்... என நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்விய வி.ஐ.பி-க்களின் பட்டியல் சற்று நீளமானதுதான். விளம்பரம் பலிக்கவில்லை!‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற போஸ்டர்கள், நாளிதழ்களில் விளம்பரங்கள் என வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி.முதல்நாள் முதல் கையெழுத்து.. ஏழாம் நாள் சிப்காட் கையெழுத்து என்று ஹைடெக் மேடையில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தம்மை முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிடும் என்று நம்பிய அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரனிடம் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். 
வெற்றி நமக்குத்தான் என்ற நினைப்பில் பிரசாரத்துக்கு அதிகம் வரவில்லை.
அதைத் தனக்கு சாதகமாக இன்பசேகரன் மாற்றிக்கொண்டார். ‘பா.ம.க-வின் அன்புமணியும், அ.தி.மு.க-வின் கே.பி.முனுசாமியும் வெளியூர்க்காரர்கள். இன்பசேகரனின் மண்ணின் மைந்தன் சென்டிமென்ட் மக்களிடம் எடுபட்டுவிட்டது. மேலும், பெங்களூரில் தங்கி வேலைசெய்யும் பென்னாகரம் வாக்காளர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்து ஓட்டுபோட வைத்தார் இன்பசேகரன். போஸ்டரும், ஹைடெக்கும் அன்புமணியின் வெற்றிக்குக் கைகொடுக்கவில்லை.

கைகொடுக்காத கேப்டன் கட்சி!

தமிழகத்தின் ஒட்டுமொத்த தலித் சமூகமும் எதிர்பார்த்த தொகுதி காட்டுமன்னார்கோவில். அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறனிடம் 87 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். தலித் சமூக வாக்குகளை கனகச்சிதமாக அறுவடை செய்த விடுதலைச் சிறுத்தைகளால் தலித் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெற முடியவில்லை. அனைத்துப் பகுதிகளிலும் கிளைகள் கொண்ட கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., தலித் அல்லாத சமூக வாக்குகளை திருமாவுக்கு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பகுதிகளில் தே.மு.தி.க-வினர் தலைகாட்டவே இல்லை. காங்கிரஸ் வேட்பாளரான மணிரத்தினத்தின் சொந்தக் கிராமமான நாட்டார்மங்கலத்தில், திருமாவளவன் வெறும் 333 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார். குமராட்சி ஒன்றியத்தின் தே.மு.தி.க செயலாளர் சீனுசங்கரின் பூத், வடக்கு மாங்குடி. அங்கு உள்ள 900 வாக்குகளில் வெறும் 12 வாக்குகளே திருமாவுக்கு கிடைத்தன. விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் மாரியப்பனின் பூத், குமராட்சி. அங்கு 111, 112-வது பூத்களில் சுமார் 2,000 வாக்குகள். அங்கு வெறும் 14 வாக்குகளே திருமாவுக்குக் கிடைத்தன. லால்பேட்டை இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக திருமாவளவனை காலைவாரி விட்டுவிட்டனர். தபால் வாக்குகளில் 112 வாக்குகளைத் தேர்தல் அதிகாரி காரணம் சொல்லாமல் எடுத்து வைத்துவிட்டார்.

5-ம் இடத்தில் தமிழன்!

‘தமிழன் வாக்கு தமிழனுக்கே’ என்று கடலூர் தொகுதியில் களமிறங்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இரண்டு திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்று சீமான் பரப்புரை செய்தார். ஆனால் எப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு இது முதல் தேர்தல். தேர்தல் பணிகளை எப்படி செய்வது என்பதே தெரியவில்லை. பூத்துகளுக்கு ஆள் கிடையாது. நாம் தமிழரின் தம்பிமார்களுடன் பிரசாரத்தில் கலக்கினாலும் அமைப்பு பலம் 234 தொகுதிகளிலும் இல்லை. வாங்கியவரை இது லாபம்தான். அடுத்தத் தேர்தலில் பார்க்கலாம்.


அசைக்க முடியாத கோட்டை!

பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்த நந்தம் விசுவநாதன், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகிய இருவருமே ஆத்தூரின் மருமகன்கள். இருவரின் மனைவிமார்களும் பிறந்த ஊர் அது. இந்தத் தொகுதியை தனது கோட்டையாக ஐ.பெரியசாமி மாற்றி வைத்துள்ளார். அந்தத் தொகுதியில் அவருடைய உறவினர்களும் சாதியினரும் அதிகம். இந்தத் தொகுதியில் மூன்றுமுறை வெற்றி பெற்ற ஐ.பெரியசாமி, ஓர் அளவுக்கு அடிப்படை வசதிகளை அங்கு செய்துள்ளார். ஆனால் விசுவநாதனுக்கு நத்தம்தான் செல்வாக்கான தொகுதி. தொகுதி மாறியபோதே நத்தம் விசுவநாதனின் தோல்வி உறுதியாகிவிட்டது. அதை உணர்ந்து கொண்ட அவர், நத்தத்தில் இருந்து அ.தி.மு.க-வினர், உற்றார் உறவினர்கள் என எல்லோரையும் கூட்டிச் சென்றார். ஆத்தூரில் ஒரு வீடுபிடித்து தங்கித் தேர்தல் வேலைகளைச் செய்தனர். ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க-வினரை கண்டுகொள்ளாமல் அனைத்துப் பொறுப்புகளும் நத்தம் அ.தி.மு.க-வினரிடம் கொடுக்கப்பட்டன. அதனால், உள்ளூர்க்காரர்கள் கடுப்பாகி ஒதுங்கிக்கொண்டனர். அதோடு நத்தம் விசுவநாதன் மீதானா ஊழல் குற்றச்சாட்டுகள்  உட்கட்சி பகை, பெரியசாமி செல்வாக்கு போன்றவை தோல்விக்கு வழிவகுத்தது. பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்தும்கூட, ஐ.பி-யின் கோட்டையை அசைக்கக்கூட முடியவில்லை.

அரவணைப்பு இல்லை!


ஆயிரம்விளக்கு தொகுதியில் அமைச்சர் வளர்மதியை தோற்கடித்துள்ளார், தி.மு.க வேட்பாளர் கு.க.செல்வம். ஆரம்பத்திலேயே தொகுதிக்குள் வளர்மதி மீதான அ.தி.மு.க தொண்டர்களின் அதிருப்தியை தனக்கு சாதகமாக மாற்றினார். அமைச்சராக இருந்த வளர்மதி, தொகுதியில் கட்சியினருக்கு எதுவுமே செய்யவில்லை என்ற அதிருப்தி தொகுதி முழுவதும் இருந்தது. வாக்காளர்களைக் கவனிக்க தலைமை சொன்ன ‘டானிக் டெக்னிக்’கை பயன்படுத்தவில்லை என்கிறார்கள். ஜெயித்தபிறகு கவனிக்கிறோம் என்று டோக்கன் கொடுத்தார்களாம். இதெல்லாம் அதிருப்தியாக மாறியது. இதை எல்லாம் எதிர்பார்த்த வளர்மதி இந்த முறை வேறு ஒரு தொகுதியை கேட்டாராம். மேலிடம் சம்மதிக்காததால், வேறு வழியின்றி தோற்பது உறுதி என்பதை உணர்ந்தே களத்தில் நின்றார். 8,829 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் வளர்மதி.

உயர் வகுப்பின் எதிர்ப்பு!


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரான கோகுல இந்திரா, 2011 சட்டமன்றத் தேர்தலில் சென்னை அண்ணா நகரில் வெற்றிபெற்று அமைச்சராகவும் ஆனார். இந்தத் தொகுதி, வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் ஆ.கே. நகரில் பணியாற்றினார். அண்ணா நகரை கண்டுகொள்ளவில்லை. அந்தக் கோபத்தை தேர்தலில் காட்டிவிட்டார்கள்.  மக்களின் அதிருப்தியை உணர்ந்திருந்த கோகுல இந்திரா  சிவகங்கையில்  வாய்ப்பு கேட்டார். கிடைக்கவில்லை. அ.தி.மு.க-வின் உள்ளுர் நிர்வாகிகளும் இவருக்கு தேர்தல் பணிகளில் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியும் கோகுல இந்திரா மீது தொகுதிவாசிகளுக்கு இருந்தது. ஆனாலும், 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


குறுநில மன்னர்கள்!

பவர்ஃபுல் அமைச்சராக வலம்வந்த வைத்திலிங்கம் தன் சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் தோற்கடிக்கப்பட்டது ஒரு பெரிய கதை. மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.காந்தி (வைத்திலிங்கத்தின் பி.ஏ), மாவட்ட சேர்மன் அமுதா ரவிச்சந்திரன், ஒரத்தநாடு ஒன்றிய சேர்மன் ஆழியவாய்க்கால் கோவிந்தராஜ் உள்ளிட்ட 10 பேர் குறுநில மன்னர்களாக வலம் வந்தனர். சொந்தக் கட்சிக்காரராக இருந்தாலுமே பணம் கொடுத்தால்தான் வேலை என்ற சூழல் நிலவியது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.3 லட்சம், டிரைவர், கண்டக்்டர் வேலைக்கு ரூ.5 லட்சம் என சொந்தக் கட்சியினரிடமே  வசுல் வேட்டை நடந்தது. இந்தக் காரணங்கள்தான் வைத்திலிங்கத்துக்கு ஆப்பு வைத்துவிட்டது என்கிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மாவட்டத்தில் வலம் வந்த வைத்திலிங்கம், தொகுதி மக்களின் குறைகளை ஒருபோதும் கேட்டதில்லை. இதெல்லாம் தி.மு.க வேட்பாளருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.ராமச்சந்திரனிடம் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார்.

இஸ்லாமிய எதிர்ப்பு!

இஸ்லாமிய மக்கள் நிறைந்த ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அ.தி.மு.க வேட்பாளரான மணிகண்டனிடம் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்குக்கூட எதுவும் செய்யவில்லை. இவர் பணம் செலவழிக்காததால், தி.மு.க-வினரும் வெறும் கையால் முழம் அளந்து போட்டனர். ஜவாஹிருல்லா பெரிதும் நம்பியிருந்த இஸ்லாமிய வாக்குகளும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. இஸ்லாமிய அமைப்புகள் சில ஜவாஹிருல்லாவுக்கு எதிராகக் களம் இறங்கின. தே.மு.தி.க-வின் சிங்கை ஜின்னாவும் இஸ்லாமியர் என்பதால், இஸ்லாமிய வாக்குகள் முழுமையாக ஜவாஹிருல்லாவுக்குக் கிடைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவரே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். மேலும் எம்.பி-யாகவும் ஓர் இஸ்லாமியரே உள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஓர் இஸ்லாமியர் வெற்றி பெறக் கூடாது என மாற்றுச் சமுதாயத்தினர் இடையே பிரசாரமும் நடந்தது.

கிருஷ்ணசாமி தோல்வி!


ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து கடந்த முறை வெற்றி பெற்றவர் கிருஷ்ணசாமி. நீதிமன்றம் வரை சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வாங்கிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த ஆதரவு, இப்போது கைகொடுக்கும் என்று நம்பினார். ஆனால், கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் ஓட்டுபோடுவதைத் தவிர்த்துவிட்டனர். அது, இவருக்குப் பலத்த அடியைக் கொடுத்தது. அதுபோல் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி, அத்திமரப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற வாக்காளர்களை ஆளும் கட்சியினர் நன்கு கவனித்துவிட்டனர். அதையும் மீறி கிருஷ்ணசாமி வெற்றிபெறுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், 493 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சுந்தரராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

செல்ஃப் எடுக்கவில்லை!

கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் தென்காசியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, ச.ம.க தலைவர் சரத்குமார், இந்த முறை திருச்செந்தூரில் போட்டியிட்டார். தன் மனைவி ராதிகாவுடன் தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். சாலையோரக் கடைகளில் டீ குடிப்பது, சிலம்பம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, பைக் ஓட்டுவது என மக்களுடன் மக்களாகக் கலந்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில்தான், அவரது காரில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ‘அம்மாவால் அனுப்பப்பட்ட வேட்பாளர்’ என இவருக்கு ஓட்டு கேட்க அ.தி.மு.க-வினர் தயாராக இல்லை.

திருச்செந்தூர் நகரப் பகுதியில் மட்டுமே முந்துகிற அளவுக்கு இரட்டை இலை விரிந்து நின்றது. பலம் வாய்ந்த தி.மு.க-வின் அனிதா ராதாகிருஷ்ணனை வெள்ளித்திரை நாயகன் சரத்குமாரால் வீழ்த்த முடியவில்லை. 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

ஓட்டு கேட்க வரமாட்டேன்!

வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதி  என்பதால், ஜெயங்கொண்டம் தொகுதியில் தெம்பாக களமிறங்கிய வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு தோல்வி அடைந்தார். 2011-ல் இங்கு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற குரு மீது மக்களுக்கு ஏகப்பட்ட அதிருப்தி. தொகுதி மக்களைச் சந்திக்காதவர்; தொகுதிப் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேசாதவர் என இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள். “நான் வன்னியர் சங்கத் தலைவர். பல ஊர்களுக்குப் போக வேண்டியிருக்கும். சரிவர ஓட்டு கேட்க வரமுடியாது. நீங்கள்தான் வாக்கு சேகரித்து என்னை வெற்றிபெற செய்யவேண்டும். நான் வெற்றிபெற்றால் நீங்கள் நலமாக இருப்பீர்கள்” தொண்டர்கள் கூட்டத்தில் என்று வெளிப்படையாகவே பேசினார் குரு. இவரை அ.தி.மு.க வேட்பாளர் ராமஜெயலிங்கம் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

- ஜூ.வி. டீம்
படங்கள்: கே.ராஜசேகரன், பா.ஜெயவேல், உ.பாண்டி, ஆர்.எம்.முத்துராஜ், ஏ.சிதம்பரம், எம்.கார்த்தி

 
நம்பிக்கை பொய்த்தது!

தே.மு.தி.க-வுக்கு வட மாவட்டங்கள்தான் வாக்குவங்கியாக இருந்தன. பா.ம.க-வுக்கு கடந்த தேர்தல்களில் சரிவை ஏற்படுத்தியதற்கு தே.மு.தி.க-வுக்கு முக்கியப் பங்கு உண்டு. விருத்தாசலம், ரிஷிவந்தியம் என பா.ம.க-வின் கோட்டைகளில் எல்லாம் வெற்றி கண்ட விஜயகாந்த் அதே நம்பிக்கையோடு உளுந்தூர் பேட்டையில் களம் இறங்கினார். ஆனால், இந்த முறை விஜயகாந்த், வேட்பாளராக அறிவிக்கப் பட்டபோதே அவரது கட்சிக்காரர்களே தமது தலைவர் வெற்றி பெறுவது கடினம் என்று பேசத் தொடங்கிவிட்டனர். எனவே கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக சுதீஷை தொகுதிக்கு அனுப்பிவைத்தார் விஜயகாந்த். அவரும் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். ஆனால், விஜயகாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், வழக்கறிஞர் பாலுவை பா.ம.க தரப்பில் அறிவித்தார்கள். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்த விஜயகாந்த், அதே பாணியில்தான் உளுந்தூர்பேட்டையிலும் பிரசாரம் செய்தார். கடந்த இரண்டு தேர்தல்களைப்போல அவரது பிரசாரம் மக்களைக் கவரவில்லை. விஜயகாந்த் 34,447 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். வட மாவட்டங்களில் தே.மு.தி.க போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் தொகைகளும் பறிபோய் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக