செவ்வாய், 3 மே, 2016

சாராய அரசியல் சாம்ராஜ்ஜியம்! சோ.ராமசாமியும் கூட ஜெயலலிதாவின் பினாமிதான்...வலுவான ஆதாரங்கள்.

 கிங் மிடாஸ் கதையைப் படித்தவர்களுக்குத் தெரியும். அவன் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். இது, குயின் மிடாஸின் கதை.
 ரத்தம் கசிந்த சசிபெருமாளின் சடலத்தில் இருந்து, மதுவிலக்கு என்ற கோஷம் உக்கிரம் பெற்றது. ‘மக்கள் அதிகாரம்’ நடத்திய போராட்டங்களால், அது தமிழகத்தில் தீயாய்ப் பற்றியது. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை வாக்குறுதியாக வைத்துள்ளன. ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தில், “தமிழகத்தில் படிப்படியாகத்தான் மதுவிலக்குக் கொண்டு வரப்படும்” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்களின் நலனுக்காக அல்ல... ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ‘மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்’ என்ற நிறுவனத்துக்கு ஆதரவாகத்தான். ஏனென்றால், டாஸ்மாக் நிறுவனம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது.
 அதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் திரட்டி வைத்துள்ளார்.

அதன் விவரங்கள்... ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டிருந்த, 2002 காலகட்டத்தில், மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தவர்கள் ராவணனும் இளவரசியின் மருமகன் டாக்டர் சிவக்குமாரும். இந்தக் காலகட்டத்தில், டாஸ்மாக் நிறுவனம், மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்துள்ளது. அதன்பிறகு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியிலும் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அந்தக் காலகட்டத்தில், குறிப்பாக 2009-10, 2010-11 காலகட்டத்தில், ஜெகத்ரட்சகனின் எலைட் நிறுவனம் அதிக அளவு மதுவை டாஸ்மாக்குக்கு சப்ளை செய்து, ஆயிரத்து 450 கோடியை வணிகவரியாக மட்டும் செலுத்தி உள்ளது. அதேபோல், தி.மு.க-வின் ஆசி பெற்ற மற்றொரு நிறுவனமான எஸ்.என்.ஜே., ஆயிரத்து 203 கோடியை வணிகவரியாக செலுத்தி உள்ளது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மிடாஸ் நிறுவனத்தின் வணிகவரி வெறும், 728 கோடி மட்டுமே. அதாவது, தி.மு.க-வின் ஆசி பெற்ற ஜெகத்ரட்சகனின் எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜே. டிஸ்டில்லரீஸ் நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் கொள்முதல் செய்ததைவிட மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து குறைவாகவே வாங்கியுள்ளது.

2011-ல் அ.தி.மு.க தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக், ஜெயலலிதாவின் மிடாஸ் கோல்டன் நிறுவனத்தில் இருந்து அதிக அளவில் மதுபானங்களைக் கொள்முதல் செய்கிறது. இந்த நான்கு நிதியாண்டுகளில் மிடாஸ் கோல்டன் நிறுவனத்தின் வருமானம், நான்கு மடங்காக அதிகரித்து உள்ளது. அதாவது, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் பணத்தை, அரசு கஜானாவில் இருந்து எடுத்து, தனக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு கொடுத்து உள்ளார்கள். அதனால், 300 கோடி ரூபாய் வரி செலுத்தும் நிறுவனமாக இருந்த மிடாஸ் கோல்டன் நிறுவனம், இன்றைக்கு 1,412 கோடி ரூபாய் வரி மட்டும் செலுத்துகிறது.

அதன் மொத்தக் கொள்முதல் 2 ஆயிரத்து 280 கோடியாக உயர்ந்துள்ளது. 2011-12, 2012-13, 2013-14 என மூன்று நிதியாண்டுகளில் மட்டும் மிடாஸ் நிறுவனத்தின் மொத்தக் கொள்முதல், 5 ஆயிரத்து 404 கோடி. ஆனால், இந்தக் காலகட்டத்தில், எஸ்.என்.ஜே. நிறுவனத்தின் கொள்முதல், 3 ஆயிரத்து 900 கோடி. அதாவது 2 ஆயிரம் கோடி குறைகிறது. ஆக, தி.மு.க வந்தால், எலைட்டும், எஸ்.என்.ஜே-வும் மதுபானம் விற்று கோடிகளைக் குவிக்கும். அ.தி.மு.க ஆட்சி அமைந்தால், மிடாஸ் நிறுவனம் சாராயம் விற்று கோடிகளைக் கல்லா கட்டும்.

 தி.மு.க-வுக்கு எலைட்டும் எஸ்.என்.ஜே-வும், ஜெயலலிதாவுக்கு மிடாஸ் கோல்டனும் பொன்முட்டை யிடும் வாத்து. மிடாஸ் யாருடையது?

மிடாஸ் நிறுவனத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை. அது சசிகலாவுக்குச் சொந்தமானது. ஜெயலலிதாவோடு சசிகலா ஒரே வீட்டில் இருப்பதால், அவர் தனியாகத் தொழில் செய்யக் கூடாதா என்று ஒரு கேள்வி அடிக்கடி எழுப்பப்படும். மிடாஸ் நிறுவனம் மட்டுமல்ல... ஹாட்வீல்ஸ் என்ஜினீயரிங், ஜாஸ் சினிமாஸ், ஜெயா ஃபைனான்ஸ், ஸ்ரீஹரி சந்தனா எஸ்டேட்ஸ், ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் என்று இன்னும் ஒரு டஜன் நிறுவனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் சசிகலாவும் அவருடைய உறவினர்களும்தான் இயக்குநர்களாக உள்ளனர்.

ஆனாலும், இவை எல்லாம் ஜெயலலிதாவின் நிறுவனங்கள்தான். 2

011 டிசம்பர் 19-ம் தேதி, போயஸ் இல்லத்தில் இருந்து சசிகலா துரத்தப்பட்டார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இந்த நிறுவனங்கள் எல்லாம் சசிகலாவிடம் இருந்து பறிக்கப்பட்டு, சோ ராமசாமியின் பெயருக்கு மாற்றப்பட்டன. அதுவும் ஒரே நாளில் 9 நிறுவனங்களில் இருந்து சசிகலா கழற்றிவிடப்பட்டார்.

மீண்டும் போயஸ் கார்டனுக்குள் சசிகலா வந்ததும், அடுத்த ஆறே மாதங்களில் சோ ராமசாமி கழற்றிவிடப்பட்டு, சசிகலாவின் உறவினர்கள் பொறுப்புக்கு வந்தனர். அதாவது, ஜெயலலிதாவுக்கு யார் நெருக்கமானவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் பொறுப்புகளுக்கு கொண்டுவரப்படுகின்றனர். ஆக, அந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர் ஜெயலலிதாதானே! - ஜோ.ஸ்டாலின் படம்: தே.சிலம்பரசன்  vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக