வெள்ளி, 20 மே, 2016

பொது நுழைவுத் தேர்வு.. மாநிலமொழிகளுக்கு,மாநில உரிமைகளுக்கு, ஏழைகளுக்கு மரண அடி... உச்சநீதிமன்றம்

நீதிபதி அனில் ஆர்.தவே
neet-politics-5ரு வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே தீர்ப்பைக் கூறும் விந்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம். தரம், தகுதி என்ற மோசடியான வாதங்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டும், தனியார் கல்வி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை குறித்து முதலைக் கண்ணீர் வடித்தும் “விசாரணைக்கு முன்பே தீர்ப்பு” என்ற இந்த முறைகேடைத் தமது கட்டளையில் புகுத்தியுள்ளனர்,உச்சநீதி மன்ற நீதிபதிகள்.
பொது நுழைவுத் தேர்வு குறித்த மறுசீராய்வு மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே, அத்தேர்வை உடனடியாக இந்த ஆண்டு தொடங்கியே நடத்துமாறு முறைகேடாக உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அனில் ஆர்.தவே 

பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test) நடத்தும் அறிவிக்கையை கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு கூட்டணி அரசு வெளியிட்டது. இதற்கு எதிராகத் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகளும், வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழக்கு தொடுத்தன.

அப்பொழுது இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்; இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இத்தேர்வை நடத்துவதற்கான அதிகாரம் கிடையாது” எனப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்து, மைய அரசின் அறிவிக்கைக்குத் தடைவிதித்தது. நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும், விக்கிரமஜித் சென்னும் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும்; நீதிபதி அனில் ஆர்.தவே இத்தேர்வை ஆதரித்தும் தீர்ப்புக் கூறியிருந்தனர்.
தேர்வைத் தடை செய்த பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிராக காங்கிரசு கூட்டணி அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை காங்கிரசு கூட்டணி அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின் வந்த பா.ஜ.க. கூட்டணி அரசும் அம்மனுவைத் திரும்பப் பெறவில்லை. தகுதித் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர்.தவே தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விடம் இச்சீராய்வு மனு பரிசீலனைக்கு வைக்கப்பட, அவ்வமர்வு இம்மனுவை விசாரணைக்கு அனுமதித்த கையோடு, தகுதித் தேர்வுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து, தகுதித் தேர்வை நடத்தும் அனுமதியையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வழங்கி உத்தரவிட்டது.

உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
நாடெங்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது மாநில அரசுகள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையைப் பறிப்பதாகும் எனக் குறிப்பிட்டு, தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்குத் தடை விதித்த உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
இந்த ஆண்டு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தும் வாய்ப்பில்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் நொண்டிச் சமாதானம் கூறிக் கொண்டிருந்த வேளையில், சங்கல்பம் என்ற தன்னார்வ அமைப்பு, “நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் மைய அரசு அத்தேர்வை நடத்தாமல் மெத்தனம் காட்டுவதாக”க் கொளுத்திப் போட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவையும், நுழைவுத் தேர்வு உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு, உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமும் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரித்த உச்சநீதி மன்றம், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே இரண்டு கட்டங்களாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
எந்த வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அந்த விசாரணையின் முடிவில்தான் தீர்ப்பு வழங்குவது நீதியான, சட்டரீதியான நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கையோடு, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தவறு, நுழைவுத் தேர்வு தொடர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டு, வழக்கை பிறகு விசாரிக்கிறோம் எனக் கூறியிருப்பது வலிந்து திணிக்கப்பட்டுள்ள முறைகேடு, கயமைத்தனம்.
“தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு அவசரகதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு” என விமர்சித்துள்ள அரசியல் சாசன அமர்வு, விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே தகுதித் தேர்வை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டது. காரணமே கூறாமல் ஜெயாவிற்குப் பிணை வழங்கியதைப் போல, காரணமே கூறாமல் தகுதித் தேர்வுக்கு அனுமதி வழங்கி கட்டப் பஞ்சாயத்தைச் செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். ஆதிக்க சாதி, மேல்தட்டு நலன் சார்ந்த வழக்குகளில் உச்சநீதி மன்றம் சட்டரீதியான நடைமுறைகளைக் கடாசிவிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதற்கு இந்த வழக்கு இன்னுமொரு உதாரணம்.

* * *
நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும் விக்கிரமஜித் சென்னும் பொது நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், “சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமையைத் தகுதித் தேர்வு ரத்து செய்துவிடும்” என வாதிட்டபொழுது, “தகுதித் தேர்வு மருத்துவக் கல்விக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் காணப்படும் ஊழலை ஒழிக்கும்” என நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேசியத் தகுதி–நுழைவுத் தேர்வை நடத்த அனுமதித்த உச்சநீதி மன்ற உத்தரவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புதுச்சேரியில் நடத்திய ஆர்ப்பாட்டம்
“பொது நுழைவுத் தேர்வு கவர்ச்சிகரமானது என்றாலும், அது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே காணப்படும் பிளவை, தகுதி என்ற பெயரில் மேலும் ஆழப்படுத்தும்” என அல்தாமஸ் கபீர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டபொழுது, “சாதி, மதம், இனம், பாலினம், சமூக ஏற்றத்தாழ்வுகள் என எந்தவொரு சலுகைக்கும் இடம் கொடுக்காமல், தகுதியான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார், அனில் ஆர்.தவே.
தகுதித் தேர்வு குறித்த முந்தைய வழக்கில் நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்த கருத்துக்களை, அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, தகுதித் தேர்வு நடத்துவதற்கு அனுமதி அளித்துவிட்டு, இச்சீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தின் வேறொரு அமர்வு விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் எனக் கூறியிருக்கிறது. இது, “மாப்பிள்ள அவருதான், ஆனா, சட்ட என்னுது” என்ற நகைச்சுவையைத்தான் நினைவுபடுத்துகிறது.
“மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இனி ஏகப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இனி தகுதியும் திறமையும் மட்டும்தான் அளவுகோலாக இருக்கும்” என்ற நியாய வாதங்களை முன்வைத்து இத்தீர்ப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டப்படுகிறது.
இட ஒதுக்கீடு காரணமாகத்தான் தகுதி, திறமை வாய்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதை ஆதரித்த பார்ப்பன-ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கும்பல், இப்பொழுது கட்டணக் கொள்ளை என்ற தீமையை ஒழிக்கப் பொது நுழைவுத் தேர்வு என்ற இன்னொரு தீமையைச் சமூகத்தின் மேல் திணிக்கிறது. வியாபம் ஊழல் சந்தி சிரித்த பிறகும், பொது நுழைவுத் தேர்வு மருத்துவக் கல்வியில் காணப்படும் ஊழலை, கொள்ளையை ஒழித்துவிடும் எனப் பேசுவபவர்கள் ஒன்று, கற்பனையில் மிதக்கும் கேணையர்களாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், மோசடிப் பேர்வழிகளாகத்தான் இருக்க முடியும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிப்பதற்குக் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஊழலும் கொள்ளையும் தலைவிரித்தாடுவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில்தான் காரணம் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, இப்பிரச்சினையை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு. சில ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் தேசாய் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது ஊழல் பேர்வழிகளின் கூடாரம் என்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. இந்நிலையில் தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் உச்சநீதி மன்றம் ஒப்படைத்திருப்பது திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுத்திருப்பதற்கு ஒப்பானது.
* * *
மிழகம் உள்ளிட்டு மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் மைய அரசுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடங்கள் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நடத்திவரும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு இன்றி நிரப்பப்படும் நடைமுறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களையும் மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும்.
இதனாலும், பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்படுவதாலும் தமிழக மாணவர்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது இனி குதிரைக் கொம்புதான். தமிழகத்திலுள்ள ரயில்வே உள்ளிட்ட மைய அரசு அலுவலங்களில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் திணிக்கப்படுவதைப் போன்ற நிலை தமிழக மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படும். ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்களில் இந்தி தெரியாத பயணிகள் திண்டாடுவதைப் போல், இந்தி தெரியாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் திண்டாடும் நிலைமையும் உருவாகக்கூடும்.
இது மட்டுமின்றி, தமிழ் அல்லது தாய்மொழி வழியில் மாநிலப் பாடத் திட்டங்களைப் பயிலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இருந்துவந்த கொஞ்சநெஞ்ச வாய்ப்பும் முற்றிலுமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தனியார் கல்வி மோகத்தில் ஏற்கெனவே சிக்கிக் கொண்டுள்ள பெற்றோர்கள், மாணவர்களிடம் தாய்மொழி வழிக் கல்வி, மாநிலப் பாடத் திட்டம் ஆகியவையெல்லாம் இனி கதைக்கு உதவாது என்ற நஞ்சை உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு இன்னும் ஆழமாகப் பாய்ச்சுகிறது.
தமிழக அரசின் விதிகளின்படி இளங்கலை பொது மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முற்பட்ட, பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும்; மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களையும் பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்க வேண்டும். பொது நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வரும்பொழுது இந்த விதி செல்லாக்காசாகிவிடும்.
உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொதுநுழைவுத் தேர்வை எழுதுவதற்கு இக்குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 65 சதவீதம் என்றும்; மற்றவர்களுக்கு 75 சதவீதம் என்றும் அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பெண்கள்கூட பொது நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க மட்டும்தான். மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தர வரிசை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான குறுக்குவழியில் நுழைவுத் தேர்வை முழுமையான தகுதித் தேர்வாக மாற்றிவிட்டது, உச்சநீதி மன்றம்.
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டபொழுது, மாணவர்களைத் தரவரிசைப்படுத்துவதற்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு, பிளஸ் டூவில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. 2007-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, பிளஸ் டூவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தால் தற்பொழுது நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வில் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.
இந்த நடைமுறையை முற்றாகக் கைகழுவிவிட்டதன் மூலம், பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ படிப்பை இரண்டாம்பட்சமாக மாற்றி, பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்குத் தனியார் பயிற்சிப் பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் வகுப்புகளை முதல் இடத்திற்குக் கொண்டுவந்துவிட்டது, உச்சநீதி மன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கொள்ளையைத் தடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு பொது நுழைவுத் தேர்வைத் திணிக்கும் உச்சநீதி மன்றம், அதன் வழியே தனியார் பயிற்சிப் பள்ளிகளின் கொள்ளையைத் தேசியமயமாக்கியிருக்கிறது.
சமச்சீர் கல்வியால்தான் தமிழகப் பள்ளிக் கல்வியின் தரமே பாழ்பட்டுவிட்டதாக வீண்பழிபோட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாறுவதன் மூலம் அல்லது மருத்துவக் கல்வி தகுதித் தேர்வுக்கு ஏற்ப நாங்கள் எக்ஸ்ட்ரா பாடங்களை நடத்துகிறோம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளையை அதிகப்படுத்தத் துணிவார்கள். மருத்துவக் கல்வி மயக்கத்தில் கிடக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பெற்றோர் இந்த வலையில் சிக்க வைக்கப்படுவார்கள். உச்சநீதி மன்றம் அனுமதித்துள்ள தகுதித் தேர்வு இப்படி புதுப்புது வழிகளில் தனியார் பள்ளி முதலாளிகளும், தனியார் பயிற்சிப் பள்ளிகளும் கொள்ளையடிப்பதற்கான வாசல்களைத் திறந்துவிடுமே தவிர, கட்டணக் கொள்ளையை ஒழிப்பதற்குப் பயன்படப் போவதில்லை.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவக் கல்வியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மேலும், முசுலீம்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இச்சமூக உரிமையெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இட ஒதுக்கீடை உடனடியாகக் கைவிட ஆளுங்கும்பல் தயாராக இல்லையென்றாலும், பத்தாயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஆங்கில வழிப் பள்ளிகளிலும், தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் படித்தால்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடைப் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் சலுகையாக மாற்றிவிடும்.
தனியார்மயம்-தாராளமயத்திற்குப் பிறகு மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, அவற்றை முனிசிபாலிட்டி ஆபீசைப் போல மாற்றும் சதித் திட்டத்தைப் படிப்படியாக அரங்கேற்றி வருகிறது, மைய அரசு. மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறித்து, நாடெங்கும் ஒரேமாதிரியான பொது சரக்கு சேவை வரியைக் கொண்டுவருவது, மாநில அரசுகளின் மோட்டார் வாகனச் சட்டம், சாலை வரிச் சட்டங்களைப் பறித்து ஓட்டுநர் உரிமம் வழங்குதை மையப்படுத்துவது என்ற வரிசையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை உரிமையும் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.
உயர் கல்வித் திட்டத்திலும், மாணவர் சேர்க்கையிலும் மூக்கை நுழைப்பதன் பின்னே, இட ஒதுக்கீடு, மாநில அரசுகளின் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கமும் மறைந்திருக்கிறது. எம்.பி.,பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் இதுகாறும் நடைமுறையில் இருந்து வந்த அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகள், சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு ஒழித்துக் கட்டப்பட்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மாநில அரசுகளின் உரிமை பறிப்பு, மாநில பாடத் திட்டங்கள் ஒழிப்பு, இட ஒதுக்கீடு ஒழிப்பு இவற்றின் வழியாக “ஏக இந்தியா” என்ற தனது பார்ப்பன-பாசிச நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முனைகிறது, காங்கிரசு, பா.ஜ.க. பின்னுள்ள ஆளுங்கும்பல். தரம், தகுதி, கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என்ற மயக்கு வார்த்தைகளைக் காட்டி அறிமுகப்படுத்தப்படும் தேசிய தகுதி-நுழைவுத் தேர்வின் பின்னே மறைந்துள்ள தீய நோக்கங்கள் இவைதான்.
– திப்பு  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக