செவ்வாய், 17 மே, 2016

ஜெர்மனியின் நாஜிகளைவிடவும் மோசமானவர்களாக இந்துத்துவர்கள் இருக்கிறார்கள்

ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு சார்பாக 'ஜனநாயகத்தின் அச்சுறுத்தல்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தில், டில்லி ஜாமியா மிலியா கல்லூரியின் ஆசிரியர் மனிஷா சேத்தி, ஆந்திராவைச் சேர்ந்த புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் கல்யாண் ராவ், சென்னை எம்.ஐ.டி.எஸ்.ஐச் சேர்ந்த பேராசிரியர் லஷ்மணன் மற்றும் ஜெஎன்யு மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஷேலா ரஷீதா ஆகியோர் உரையாற்றினர். ஷேலா ரஷீதாவின் உரை அனைவரையும் ஈர்த்தது. அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு:கல்வி காவிமயம் குறித்து நாம் முன்பு பேசியபோது, 'எங்கே நடக்கிறது?' என்று கேட்டார்கள். இப்போது நம் கண்முன்னே அது நடந்து வருவதைப் பார்க்கிறோம். பாஜக ஆட்சியின் பாசிசம், முஸ்லிம்களை வேட்டையாடுவதில் மட்டுமல்ல; அனைத்து மட்டத்திலும் அது நடக்கிறது.

இதற்கு முந்தைய அரசுகள் யோக்கியமானவை என்று சொல்வதல்ல நமது நோக்கம். இப்போது, மிகவும் குறிப்பானமுறையில் பாசிச செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த அரசை ஏன், நாம் பாசிஸ்ட் என்கிறோம்? தனது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்பது இருக்கவே கூடாது என்று நினைக்கிறது. அதனால், பாசிசம் என்கிறோம். அகண்ட பாரதம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை

அவர்கள் மிகவும் வசதியான முறையில் அமர்ந்திருக்கிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதற்கு உதவுகின்றன. நாம், சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அவர்கள் பன்மைத்துவம் ஒழிக்கப்பட விரும்புகிறார்கள். அவர்கள் தேசியவாதத்தின் உள்ளீடு என்ன? அது பன்மைத்துவத்தை மதிக்கிறதா என்றால் இல்லை. பாகிஸ்தான் எதிர்ப்பின் ஊடாக முஸ்லிம் எதிர்ப்பை கட்டமைக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிம் குடியிருப்பும் குட்டி பாகிஸ்தானாக அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. ஒருவேளை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கவில்லை என்றால் தேசியவாத உணர்ச்சிக்கு மிகவும் திண்டாடியிருப்பார்கள்.

ஆனால், நமது தேசியவாதம் ஏகாதிபத்திய எதிர்ப்பை வரித்துக்கொண்டது. ஆனால், அவர்களின் தேசியவாதம் உலகமயத்தை ஆதரிப்பது. அனைத்து துறைகளையும் உலக வர்த்தகக் கழகத்தின்கீழ் கொண்டுவர நினைக்கிறார்கள். மக்களின் வாழ்க்கையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதை மறைக்கத்தான் தேசியவாதக் கூச்சல் எழுப்புகிறார்கள். பிரியா பிள்ளை என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், மனித உரிமை மீறல் தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால், விஜய் மல்லையா இந்தியாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார். பிரியா பிள்ளையை, டைம்ஸ் நவ்-ல் ஆதரித்த கவிதா கிருஷ்ணனை, ‘வெட்கங்கெட்ட பெண்மணி’ என்று அர்னப் அழைத்தார். ஆனால், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவையோ, அவரை ஆதரிப்பவர்களையோ அதே உக்கிரத்துடன் அர்னப் கண்டிக்கிறாரா? எனவே, இவர்களின் தேசியவாதம் ஒரு மோசடி.

மேலும், அது ஒருவகையான பகட்டு மற்றும் வெற்றுணர்ச்சி. ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. அதன் பரப்பை போன்று வழவழப்புடன் இருக்கும். லேசாகக் குத்திவிட்டால் உடைந்துவிடும். ‘சுவச் பாரத்’ நாடகம் அதில் ஒன்று. அதற்கு நம்மிடமிருந்து ஏராளம் வரி வசூலிக்கப்படுகிறது. எங்காவது ஓரிடத்தில் புதிதாக ஒரு குப்பைத் தொட்டி வைத்திருக்கிறார்களா? துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் கையுறைகளாவது வழங்கியிருக்கிறார்களா? இல்லை. எங்கள் ஜெஎன்யு வளாகத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு ரப்பர் காலணிகள் வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை போராட்டங்கள் நடத்தினோம். சுவச் பாரத் திட்டம், உயர்சாதி மனநிலையின் நடிப்பு. அதை வலியுறுத்துகிறமுறையில் பார்ப்பனீயமாகவும், கேலிக்கூத்தாகவும் இருக்கிறது. சுவச் பாரத் தொடங்கப்பட்ட இடம் வால்மீகி (தலித் மக்கள்) காலனி. சுத்தமாக இருக்க அவர்களுக்குச் சொல்லவேண்டிய தேவை என்ன?

அடுத்த நீர்க்குமிழி, பெண்குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது. பெண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் சொல்லப்பட்ட எளிமையான தீர்வு அது. ஆனால், அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் கெட்ட வார்த்தைகள் வந்து விழுகிறது. கவிதா கிருஷ்ணன், சில கேள்விகளை முன்வைத்த உடனே அவரை வன்புணர்ச்சி செய்யவேண்டும் என்று குரல் எழும்பியது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்றறியும் சோதனையை அனுமதிக்கும் முடிவை மேனகா காந்தி எடுத்துள்ளார். கருக்கலைப்புக்கு பெற்றோரைத் தண்டிக்கும்வகையில் சட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. முன்பு, மருத்துவரின் தவறாகக் கருதப்பட்டு வந்தது. இப்போது, பொறுப்பை தட்டிக்கழிக்கச் செய்து பழி சமூகத்துக்குக் கடத்தப்படுகிறது. தாத்ரி கொலை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்த சமூகக் குற்றத்துக்கும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்ற அபாயகட்டத்தை நெருங்குகிறோம். கவர்ச்சியான சொல்லாடல்கள்வழியே பெரும் தீங்குகள் மூடி மறைக்கப்படுகின்றன.
அடுத்ததாக, ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதுபற்றி உணர்ச்சி ஊட்டப்படுகிறது. ராணுவ வீரரின் சாவு உயர்ந்த தியாகமாகப் போற்றப்படுகிறது. இப்படித்தான் பெண்களும் போற்றப்பட்டார்கள். பெண்களை ‘பாரத் மா’ என்றழைத்து, அவளை தியாகத்தின் சின்னமாக விதந்தோதினார்கள். பின்னர், பெண்ணின் உரிமைகள் அனைத்தையும் பறித்தார்கள். 'நீ ஒரு தேவி. உனக்கு எதற்குச் சுதந்திரம்? தேவிக்கு ஆலயம் போன்று நீ வீட்டில் மட்டுமே இருக்க வேண்டியவள். முஸ்லிம் பையனை விரும்பக் கூடாது' என்று அவள் முடக்கப்படுகிறாள். இதே நிலைமை ராணுவத்தினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ராணுவத்தினரின்மீது அன்புள்ளவர்கள் என்றால் ராணுவத்தினரின் சங்கத்துக்கு அனுமதி வழங்கட்டும். பாக்டீரியாகூட உயிர் வாழ முடியாத ஓரிடத்திலே எதற்காக அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்? எதிரியின் ஆயுதங்களால் அல்ல; தற்கொலையை மரணித்த ராணுவ வீரர்களே அதிகம். ராணுவத்துக்குள் சாதிய அடுக்குகள் இல்லையா? முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தோர்?
இப்போது, முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்? இதை, எப்படி நாம் எடுத்துச்செல்லப் போகிறோம்? ஜெர்மனியின் நாஜிகளைவிடவும் மோசமானவர்களாக இந்துத்துவர்கள் இருக்கிறார்கள். வீடுவீடாக செல்லவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. வீதிகளில் நிற்க வேண்டியவர்கள் நாம். ஆனால், அவர்கள் நம்மை முந்தி இருக்கிறார்கள். அவர்களை வீதிகளில் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது. தேசத்தின் விரோதிகள் அவர்கள் என்று, எடுத்துச் சொல்லவேண்டிய கடமை வந்துள்ளது. சிலர் இதைச் சொல்லவேண்டாம் என்று கருதுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஐரம் சர்மிளா அல்லது ரோகித்தின் தாய் பாரத் மாதாக்கள் என்றால், பாரத் மாதா கீ ஜே என்று சொல்லலாம். ஸ்மிருதி இரானிதான் பாரத் மாதா என்றால், நம்மால் சொல்லமுடியுமா?
இந்தியா முழுமையான தேசமல்ல. தேசமாக வளர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சாதியை ஒழிக்காமல் சாத்தியமில்லை என்றார் அம்பேத்கர். தலித் மக்களையும், பெண்களையும் அடிமைப்படுத்தி உருவாக்கும் தேசியவாதத்துக்கு நாம் விசுவாசிகளாக இருக்கமுடியாது. அந்தப் பொருளில் நாம் தேசத்துரோகிகள்தான். இதைச் சொன்னதற்காக என்மீது வழக்கு பதியப்படலாம். கவலையில்லை. ஆம், நாம் தேசியவாதத்தை புரட்சிகரக் கண்ணோட்டத்துடன் மறுவரையறை செய்யவேண்டிய தேவை உள்ளது. இந்த நாட்டை பாதுகாப்பது என்பது, இந்நாட்டின் மக்களைப் பாதுகாப்பதுதான்.
ஜெஎன்யு பற்றியும் பேசச் சொன்னார்கள். அப்சல் குருவின் தூக்கை நாங்கள் விமர்சித்தோம். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் பலரும்தான் அதைச் செய்தார்கள். ராம ஜென்மபூமியை ஆதரித்து ஏபிவிபி, ஜெஎன்யு-வில் கூட்டம் போட்டார்கள். நாங்கள் அதை எதிர்த்து வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கூட்டம் நடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. போலீசை அழைக்கவில்லை. ஏனெனில், முட்டாள்களாக அவர்கள் இருக்கும் சுதந்திரத்தை மதிக்கிறோம். இதுதான் அவர்களுக்கும், நமக்குமிடையே இருக்கும் வித்தியாசம்.
இந்தப் பிரச்னைகளைப்பற்றி பேசும்போது, காஷ்மீர் பற்றி கேள்வி கேட்கிறார்கள். நான் காஷ்மீரைச் சேர்ந்தவள். ஆனால், ஒரு இடதுசாரியாகவே எனது கருத்துகளைப் பகிர்கிறேன். எனது அடையாளத்துடன் எனது கருத்துகளை இணைத்து என்னை சுருங்கிப் புரிந்துகொள்ள இடமளிக்கவில்லை. இந்தியாவின் கோரமுகம் குறித்த புரிதல் எனக்குண்டு. ஜெஎன்யு-வுக்கு வந்தபிறகு நான் தெரிந்துகொண்ட உண்மை, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு காஷ்மீர் உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன்-காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை. எனவே, என்னிடம் காஷ்மீர்குறித்து கருத்துக் கேட்பது என்னை குற்றவாளியாக்கும் தந்திரம். ஒரு சுதந்திரமான விவாதத்தை அனுமதியுங்கள். காஷ்மீர்குறித்த எனது நிலைப்பாட்டை நான் தெரிவிக்கிறேன். நான் ஒரு இடதுசாரி, மதச்சார்பற்றவள் மற்றும் அம்பேத்கரிஸ்ட்.
தொகுப்பு: ராஜ்   minnambalam.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக