வியாழன், 12 மே, 2016

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி .... கலைஞர் அறிவிப்பு

சிறு, குறு விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
 திருவாரூரில் இருந்து புதன்கிழமை மாலை வேன் மூலம் புறப்பட்ட கருணாநிதி, திருவாரூர் தொகுதிக்குள்பட்ட விளமல், தேவர்கண்ட நல்லூர், குளிக்கரை, அம்மையப்பன், முகந்தனூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்து பேசியதாவது:

 தேர்தல் அறிக்கையில், சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் எனக் கூறியுள்ளோம். அவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வோம். இதை, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளைக் காப்பாற்றாத அதிமுக அரசை தோற்கடிக்க தயாராக வேண்டும்.
 கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்ட என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். மண்ணின் மைந்தனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறேன். உங்கள் உயிரான வாக்குகளை உதய சூரியனுக்கு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
 எனது முயற்சியில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில், ரூ. 1,000 கோடியில் மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூரில் செயல்பட்டு வருகிறது.
 அம்மையப்பனில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்படும். இந்தப் பகுதியில் மூடப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு திறக்கப்படும். தமிழர் தன்மானம் ஓங்கி உயர வேண்டும் என்ற சிந்தனையை ஏற்ற இயக்கம் திமுக. அந்த இயக்கம் வெற்றிபெற்றால் அதிமுக அரசின் 5 ஆண்டுகால இருள் விலகி ஒளி பரவும் என்றார் அவர்.தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக