திங்கள், 9 மே, 2016

ஆம் ஆத்மி : பிரதமரின் கல்வி சான்றிதழ்கள் போலியானவை,,, அமித் ஷாவும் அருண் ஜெட்லியும் பொய்யாக

விகடன்.com :புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ., எம்.ஏ. கல்விச் சான்றிதழ்களை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று வெளியிட்ட நிலையில், அந்த சான்று போலியானது என்று குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி, அதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. ஏற்கனவே மோடி தலைமையிலான மத்திய அரசில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானியின் கல்வி தகுதி குறித்தும் சர்ச்சை கிளம்பி ஓய்ந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து சர்ச்சை கிளப்பிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், " பிரதமர் மோடி எந்தவித பட்டப்படிப்பும் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. நாட்டு மக்கள் இது குறித்த உண்மையை அறிய விரும்புகின்றனர். இப்படியிருக்கையில், அவரது கல்வித்தகுதி குறித்த ஆவணபூர்வ தகவல்களை வெளியிட வேண்டும்" என மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) வலியுறுத்தியிருந்தார். இது புதிய சர்ச்சையை கிளப்பியது.



இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர்,  டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திரமோடி இளங்கலை பயின்றதற்காக பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்ததற்காக பெற்ற சான்றிதழையும் காண்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜெட்லி "நாட்டில் பொது விவாதங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டுதான் பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைத்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பிரதமரின் கல்வித் தகுதியை விளக்குவதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன். தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் போலிச் சான்றிதழ் வழக்கில் சிக்கியுள்ளதை மறந்துவிட்டு பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்" என்றார்.

ஆனால் அமித்ஷா வெளியிட்ட இந்த கல்வி சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. "பிரதமர் மோடியின் பெயர் பி.ஏ. சான்றிதழில் 'நரேந்திரகுமார் தாமோதரதாஸ் மோடி' என்று உள்ளது. அதே சமயம் அவரது எம்.ஏ. சான்றிதழில் 'நரேந்திர தாமோதரதாஸ் மோடி' என்று உள்ளது. மோடி தனது பெயரை மாற்றியதற்கான அபிடவிட்டை வைத்துள்ளாரா? அப்படி இருக்கிறதென்றால், அந்த அபிடவிட் எங்கே?

பிரதமரின் பி.ஏ. மார்க்‌ஷீட்டில் 1977 என்று உள்ளது. ஆனால் அவரது பி.ஏ. சான்றிதழில் 1978 என காணப்படுகிறது. எனவே அமித்ஷாவும்  ஜெட்லியும் வெளியிட்ட பிரதமரின் கல்வி சான்றிதழ் போலியானது" என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஷுடோஸ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக