புதன், 18 மே, 2016

இஷ்ரத் ஜஹான் வழக்கை சட்டப்படியே ஊத்தி மூடிவிட மோடி.கடும் முயற்சி !


டேவிட் ஹெட்லிகுஜராத்திலுள்ள மிர்ஸாபூர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கரையான் தின்ன விடப்பட்டிருக்கும் இஷ்ரத் ஜஹான் போலி மோதல்கொலை வழக்கை ஒரேயடியாக ஊத்தி மூடும் சதித்தனத்தில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. இதற்காக, மும்பய்த் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி, மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, அத்துறையின் முன்னாள் கீழ்நிலைச் செயலர் மணி, இப்போலி மோதல்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மைய அரசின் உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் ஆகியோரைத் துருப்புச் சீட்டுக்களாக இறக்கிவிட்டிருக்கிறது, அவரது அரசு.< இந்து மதவெறி மோடி அரசால் பொய்சாட்சியாக நிறுத்தப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி. (கோப்புப் படம்)
அமெரிக்கச் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக உள்ள டேவிட் ஹெட்லி மும்பய்த் தாக்குதல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குமூலத்தில், “இஷ்ரத் ஜஹான் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்காக வேலை செய்தவர்” எனக் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

இன்னொருபுறத்தில் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, “இந்த வழக்கில் குஜராத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பிரமாணப் பத்திரத்தில், இஷ்ரத் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டிருந்தது. அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதனை அரசியல் காரணங்களுக்காக மாற்றி, இரண்டாவது பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அந்த இரண்டாவது பிரமாணப் பத்திரம் தனது ஒப்புதல் இல்லாமலேயே தாக்கல் செய்யப்பட்டது” என்று பத்திரிகைகளின் ஊடாகத் திரியைக் கொளுத்திப் போட்டார்.
உள்துறை அமைச்சகத்தில் கீழ்நிலை செயலராக இருந்த ஆர்.வி.எஸ்.மணி என்ற அதிகாரி, “இரண்டாவது பிரமாண பத்திரத்தில் கையெழுத்திடுமாறு தன்னைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் சதீஷ் வர்மா நிர்பந்தித்ததோடு, எரியும் சிகரெட் முனையால் தன்னைச் சுட்டுச் சித்திரவதை செய்தார்” என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
இஷ்ரத் ஜஹான் போலி மோதல்
குஜராத் போலீசும் மைய அரசின் உளவுத்துறையும் கூட்டுச் சேர்ந்து நடத்திய போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் (உள்படம்) இஷ்ரத் ஜஹான். (கோப்புப் படங்கள்)
இஷ்ரத் கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார், “இவ்வழக்கில் நரேந்திர மோடியைக் கோர்த்துவிடுவதற்குத் தனக்குப் பல்வேறு ஆசைகள் காட்டப்பட்டதாக”க் கூறினார்.
ஹெட்லியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம், ஜி.கே.பிள்ளை, மணி, ராஜேந்தர் குமார் ஆகியோரின் தாமதமாக விழித்துக்கொண்ட மனசாட்சிகள் – இவற்றைக் கையில் எடுத்துக்கொண்ட இந்து மதவெறிக் கும்பலும், அதற்கு ஆதரவான ஊடகங்களும், அறிவுத் துறையினரும், “இஷ்ரத் போலி மோதலில் கொல்லப்படவில்லை என்றும்; அவர் கொல்லப்பட்டது நியாயமான, தேசத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்றும்; “மோடியையும் அமித் ஷாவையும் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கை காங்கிரசு கட்சி கையாண்டது என்றும்” வன்மத்தோடு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும், “உண்மைகளை மறைத்து இரண்டாவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததன் மூலம் ப.சிதம்பரம் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி இந்து மதவெறிக் கும்பலால் உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.
* * *
முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை
இந்து மதவெறி கும்பலின் புதிய விசுவாசக் கூட்டம்: முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை
டந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இஷ்ரத் ஜஹான் கொலை தொடர்பாக மூன்று விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அகமதாபாத் பெருநகரக் கூடுதல் குற்றவியல் நடுவர் எஸ்.பி.தாமங் நடத்திய விசாரணை, குஜராத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, குஜராத் உயர்நீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்டு நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணை என்ற இந்த மூன்று விசாரணைகளும் இஷ்ரத் ஜஹானும் மற்ற மூவரும் கடத்தப்பட்டு, சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதை எவ்விதச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளன.
உள்துறையின் முன்னாள் கீழ்நிலை செயலர் ஆர்.வி.எஸ். மணி
இந்து மதவெறி கும்பலின் புதிய விசுவாசக் கூட்டம்: உள்துறையின் முன்னாள் கீழ்நிலை செயலர் ஆர்.வி.எஸ். மணி
கூடுதல் குற்றவியல் நடுவர் தாமங், “பதவி உயர்வுக்காகவே இக்கொலைகள் நடத்தப்பட்டிருப்பதோடு, இஷ்ரத் ஜஹானை லஷ்கர் தீவிரவாதி என முத்திரை குத்துவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையிலும், சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குற்றப் பத்திரிகையிலும் இஷ்ரத் ஜஹானைத் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புபடுத்துவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடந்தது போலிமோதல் படுகொலை, இஷ்ரத் ஜஹான் ஏழை முசுலீம் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவி இளம் பெண் என்ற உண்மைகளையெல்லாம் ஒரு கிரிமினல் குற்றவாளியின் வெற்று வாக்குமூலத்தைக் கொண்டு குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, இந்து மதவெறிக் கும்பல். மேலும், இஷ்ரத்தை லஷ்கர் அமைப்போடு தொடர்புபடுத்தும் ஹெட்லியின் வாக்குமூலம், அவன் வாயிலிருந்து தானாக வரவில்லை. இந்திய உளவுத்துறையால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்ட வாக்குமூலம் அது. இன்னும் பச்சையாகச் சொன்னால், போலீசாரால் தயார்படுத்தப்பட்டு நிறுத்தப்படும் பொய்சாட்சி போன்றதுதான் ஹெட்லியின் வாக்குமூலம். கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆசை காட்டி, அவர்களைப் பொய்சாட்சிகளாக போலீசு தயாரிப்பதைப் போல, ஹெட்லிக்கு மரண தண்டனை விதிப்பதிலிருந்து விலக்கு அளிப்பதாகத் தூண்டில் போட்டு, அவனை அப்ரூவராக மாற்றியிருக்கிறது, இந்திய அரசு.
ishrat-hindutva-servants-3
இந்து மதவெறி கும்பலின் புதிய விசுவாசக் கூட்டம்: மைய அரசு உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார்
டேவிட் ஹெட்லி, இஷ்ரத்தை லஷ்கர் அமைப்போடு தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிப்பது புதிய விசயமும் கிடையாது. கடந்த காங்கிரசு ஆட்சியின்பொழுதே, தேசியப் புலனாய்வு முகமை இவ்வாறான வாக்குமூலத்தை டேவிட் ஹெட்லியிடமிருந்து கறந்து, பத்திரிகைகளில் கசியவிட்டது. எனினும், அவ்வமைப்பு நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையில் இந்த வாக்குமூலம் பற்றித் தெரிவிக்கவில்லை. “இஷ்ரத் குறித்த ஹெட்லியின் வாக்குமூலம் அவன் கேள்விப்பட்ட ஒன்றுதானே தவிர, அவ்வாக்குமூலத்திற்கு எவ்வித சாட்சியமும் இல்லை” என நீதிமன்றத்தில் தெரிவித்தது, தேசியப் புலனாய்வு முகமை.
ஹெட்-லி-யின் வாக்-கு-மூ-லம் என்-பது ஏற்கெனவே செத்துப் போன பாம்பு. இந்து மதவெறிக் கும்பலும், மோடி அரசும் அதற்கு மீண்டும் உயிர் கொ-டுத்-துப் பயமுறுத்தப் பார்க்கின்றன என்பதுதான் உண்மை.
இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமிமா
இஷ்ரத் ஜஹானின் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடி வரும் அவரது தாயார் ஷமிமா
மும்பய்த் தாக்குதல் தொடர்பாக “வீடியோ கான்ஃபரசிங்” முறையில் அமெரிக்கச் சிறைச்சாலையில் உள்ள டேவிட் ஹெட்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இஷ்ரத் ஜஹானைப் பற்றிக் கேட்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஆனாலும், இஷ்ரத் ஜஹானை லஷ்கர் நடவடிக்கைகளோடு சம்மந்தப்படுத்தும் விதத்தில் கேள்விகளை வலிந்து கேட்டுப் பதில் வாங்கியிருக்கிறார், அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகாம்.
லஷ்கர்-இ-தொய்பா மும்பய்த் தாக்குதலை தனது கப்பற்படை பிரிவைப் பயன்படுத்தி நடத்தியதாகத் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட டேவிட் ஹெட்லியிடம், அது குறித்த கேள்விகளை எழுப்பாமல், லஷ்கர் அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைமை பற்றிக் கேள்வி கேட்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, லஷ்கர் அமைப்பின் தோல்வியடைந்த நடவடிக்கைகள் குறித்தும், அதில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும் கேட்கப்படுகிறது. இது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதில் அளித்த ஹெட்லியிடம், “அந்த இடம் குஜராத் என்பதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என ஹெட்லிக்கு எடுத்துக் கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து ஆம் என்ற பதில் பெறப்படுகிறது.
வழக்குரைஞர் பிருந்தா குரோவர்
இஷ்ரத் ஜஹானின் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடி வரும் அவரது வழக்குரைஞர் பிருந்தா குரோவர்
லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த முசாமில் பட் என்ற படைத் தளபதி வழியாக ஒரு பெண் போராளி சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டதாகக் கூறும் ஹெட்லியிடம், “நூர்ஜஹான், இஷ்ரத் ஜஹான், மும்தாஜ்” என மூன்று பெண்களின் பெயர்களைக் கூறி, இவர்களுள் சுட்டுக் கொல்லப்பட்டவர் யார் என அரசு வழக்குரைஞர் கேட்க, இரண்டாவதாக உள்ள பெண்ணின் பெயர் என ஹெட்லி பதில் அளிக்கிறார்.
தொலைக்காட்சிகளில் வரும் வினாடி வினா நிகழ்ச்சி போல விசாரணையை நடத்திதான் ஹெட்லியிடமிருந்து தான் விரும்பிய வாக்குமூலத்தைப் பெற்றிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல். இப்படி வாக்குமூலம் பெறுவது சட்டவிரோதமானது, நீதிமன்றம் இதை அனுமதித்திருக்கக் கூடாது என்கிறார், இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் அவரது தாயின் சார்பில் ஆஜராகிவரும் வழக்குரைஞர் பிருந்தா குரோவர்.
மும்பய் போலீசு கட்டளைப்படிதான் ஹெட்லியிடமிருந்து வாக்குமூலம் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார், அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகாம். மும்பய் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த இளம் வயதுக் குற்றவாளியான அப்துல் கசாப் மீது அனுதாபம் பிறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, “கசாப் மட்டன் பிரியாணி கேட்டதாகவும், அவன் விரும்பியபடி தாங்கள் வாங்கிக் கொடுத்ததாகவும்” ஒரு கட்டுக்கதையைப் பரப்பி, அதனை ஊடகங்களில் விவாதப் பொருளாக்கியவர்தான் உஜ்வல் நிகாம். அவரது வழக்குரைஞர் மூளை ஆர்.எஸ்.எஸ். போலவே சிந்திக்கக்கூடியது. அதனால்தான் மோடி அரசால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இப்படிபட்ட நபர் போலீசின் எடுபிடியாக நடந்துகொள்வது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.
மண்டபத்தில் எழுதி வாங்கப்பட்டதற்கு ஒப்பான இந்த வாக்குமூலம் பிப்ரவரியில் ஊடகங்கள் மூலம் கசியவிடப்பட்டு, இஷ்ரத் போலி மோதல்கொலை வழக்கு மீண்டும் விவாதப் பொருளாக்கப்படுகிறது. இந்த வாக்குமூலத்தை வைத்து நரேந்திர மோடி-வன்சாரா குற்றக்கும்பலுக்கு ஆதரவாக இந்து மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ். முயன்று கொண்டிருந்த வேளையில், ஹெட்லியிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை அதன் முகத்தில் கரியைப் பூசுவதாக அமைந்தது.
அக்குறுக்கு விசாரணையை நடத்திய எதிர்த்தரப்பு வழக்குரைஞர் அப்துல் வாகப் கானிடம், “இஷ்ரத் ஜஹான் பற்றித் தான் கேள்விப்பட்டதெல்லாம் செவிவழிச் செய்திகள்தான். அவரைப் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டனே தவிர, அவரைப் பற்றிய பூர்வாங்கத் தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது. லஷ்கர் அமைப்பின் தலைவர் லக்வி அளித்த தகவலின்படிதான் இஷ்ரத் ஜஹான் பற்றி எனக்குத் தெரிய வந்தது என்று தேசியப் புலனாய்வு முகமையிடம் நான் கூறவில்லை. லஷ்கர் அமைப்பில் உள்ள பெண்கள் அமைப்பு முசுலீம் சமூகத்தினருக்கு உதவிகள் செய்யும் நோக்கில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதேயொழிய, அவ்வமைப்பு தற்கொலைப் படையாகச் செயல்படுவதில்லை” எனத் தெரிவித்திருக்கிறான் ஹெட்லி.
இஷ்ரத் ஜஹானை லஷ்கர் தீவிரவாதியாகச் சித்தரித்துப் பெறப்பட்ட முதல் வாக்குமூலம், ஒரு கிசுகிசு அல்லது வதந்திக்கு அப்பாற்பட்டு எந்தத் தகுதியும் கொண்டதல்ல என்பதை ஹெட்லி அளித்துள்ள இரண்டாவது வாக்குமூலம் நிறுவுகிறது.
* * *
ஷ்ரத் ஜஹான் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென கோரி இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும்; அப்போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரானேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளையும் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இம்மோதல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தத் தேவையில்லை என 06-08-2009 அன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மைய அரசு, அதில் இஷ்ரத் ஜஹானை லஷ்கர் தீவிரவாதி எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக, லாகூரிலிருந்து வெளிவரும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையான கஸ்வா டைம்ஸ், “இஷ்ரத் ஜஹான் என்ற லஷ்கர் போராளியின் முகத்திரை அகற்றப்பட்டு, அவர் மற்றவர்களுடன் தரையில் கிடத்தப்பட்டிருந்தார்” என்ற செய்தியை வெளியிட்டிருந்ததையும், அதனை தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்தியப் பத்திரிகைகளும் 15-07-2004 அன்று மறுபதிப்பு செய்திருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தது.
ishrat-protests
இஷ்ரத் ஜஹான் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் கழிந்த பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதைக் கண்டித்து பெங்களூருவில் மாணவர் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
இப்பிரமாணப் பத்திரத்திலேயே லஷ்கர் அமைப்பை நடத்தி வரும் ஜமாத் உத் தாவா, இஷ்ரத்தை லஷ்கர் தீவிரவாதியாகக் கூறியதற்கு 2007-ஆம் ஆண்டில் மன்னிப்புக் கேட்டிருந்ததை மைய அரசு குறிப்பிட்டிருந்தாலும், அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் இஷ்ரத்தை லஷ்கர் தீவிரவாதியாகச் சித்தரித்தது.
இம்முதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, அகமதாபாத் பெருநகர கூடுதல் குற்றவியல் நடுவர் எஸ்.பி. தாமங் 07-09-2009 அன்று குஜராத் அரசிடம் சமர்ப்பித்த தனது விசாரணை அறிக்கையில், “இஷ்ரத் உள்ளிட்ட நால்வரும் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதையும், இஷ்ரத்தைத் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புபடுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்பதையும்” உறுதி செய்திருந்தார். இதனால்தான் மைய அரசு அடுத்த சில நாட்களிலேயே இரண்டாவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதில், “மைய அரசின் உளவுப் பிரிவு தரும் தகவல்களைச் சான்றுகளாக எடுத்துக் கொள்ள முடியாது. அவற்றின் உதவிகொண்டு மாநில அரசு செயல்படலாம். எனினும், மாநில அரசின் வரம்பு மீறல்களுக்கு மைய அரசு ஒப்புதல் தராது.
“முதல் பிரமாணப் பத்திரத்தில் இஷ்ரத் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது பத்திரிகை தகவல்தானே தவிர, உளவுத்துறையின் தகவல் அல்ல” என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
கஸ்வா டைம்ஸ் பத்திரிகை தகவல் அளிப்படையில்தான் – அந்தத் தகவலும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது – இஷ்ரத் லஷ்கர் தீவிரவாதி எனக் குறிப்பிடப்பட்டார் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதைத் தாண்டி, இரண்டாவது பிரமாண பத்திரம் முதல் பிரமாண பத்திரத்திலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. ப.சிதம்பரம் இரண்டாவது பிரமாண பத்திரத்தின் வழியாக இந்த உண்மையை ஒத்துக் கொண்டதற்காகவும், போலிமோதல் கொலையை நடத்திய குஜராத் அரசைக் கைவிட்டுவிட்டதற்காகவும்தான் இந்து மதவெறிக் கும்பல் அவர் மீது பாய்ந்திருக்கிறது. உண்மையைப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ப.சிதம்பரத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கும் இந்து மதவெறிக் கும்பல், அதுவே சாமானியர்களாக இருந்தால், கல்புர்கி போல, பன்சாரே போல சுட்டுக் கொல்லவும் தயங்கியிருக்காது.
சிறப்புப் புலனாய்வுக் குழு இஷ்ரத் உள்ளிட்ட நால்வரும் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்தபொழுது, அதனை மறுத்துப் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஜி.கே.பிள்ளை, தான் ஓய்வுபெற்றுவிட்ட நிலையிலும்கூட வன்மத்தோடு, “இஷ்ரத்தை நடத்தைக் கெட்ட பெண்ணாகச் சித்தரிக்க முயன்று” தனது கயமைத்தனத்தைக் காட்டிக் கொண்டார். ப.சிதம்பரம் இரண்டாவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தபொழுது வாயை மூடிக் கொண்டிருந்த இந்த யோக்கிய சிகாமணி இப்பொழுது வேறு மாதிரி குரைப்பதற்குக் காரணம் இருக்கிறது. ஜி.கே.பிள்ளை இப்பொழுது மோடிக்கு மிகவும் நெருக்கமான அதானி குழும நிறுவனமான அதானி போர்ட்ஸின் இயக்குநர்களுள் ஒருவர். அதனால்தான் குரைப்பதும், வாலாட்டுவதும் மிகவும் பலமாக இருக்கிறது.
மத்திய உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமாருக்கு இஷ்ரத் போலி மோதல்கொலையில் எவ்விதப் பங்குமில்லை எனக் கடந்த பிப்ரவரியில்தான் மோடி அரசு அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியது. அதற்காகவே இப்பொழுது முந்தைய காங்கிரசு அரசு மீது பழிபோட்டு மோடிக்குத் தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார், அவர்.
* * *
ரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவி வகித்த பன்னிரெண்டு ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டுகளில் மட்டும் 21 ‘மோதல்’ கொலைகள் அம்மாநிலத்தில் நடந்தன. இம்மோதல் கொலைகளுள் சோராபுதீன் ஷேக், பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான், ஜமால் மாலிக் ஆகிய நான்கும் போலிமோதல் கொலைகள்தான் என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டது. இஷ்ரத் ஜஹான் கொலை தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த எட்டு உயர் போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற மூன்று கொலைகளையும் சேர்த்தால், 14 உயர் போலீசு அதிகாரிகள் மீது கொலை மற்றும் சதி வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த நான்கு கொலைகளுக்கு அப்பால், பிற ‘மோதல்’ கொலைகள் குறித்து உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஹரேன் பாண்டியா கொலை வழக்கிலும், அக்சர்தாம் கோவில் தாக்குதல் வழக்கிலும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் அப்பாவிகள் என நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.
இவை அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சி ஒரு கேடுகெட்ட கிரிமினல் ஆட்சி என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்திவிட்டன. ஆனால், அந்த கிரிமினலோ மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்குகள் ஒவ்வொன்றையும் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறார்.
சோராபுதீன் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அமித் ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்தார், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம். இதற்குப் பரிசாக, அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கேரள கவர்னர் பதவி தரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கைத் தொடுத்த சோராபுதீனின் தம்பி ருபாபுதீன் வழக்கைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாக அறிவித்துவிட்டார்.
இஷ்ரத் ஜஹான் போலி மோதல்கொலை வழக்கில் ஜூலை 2013-இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவ்வழக்கில் பேருக்குக்கூட நீதிமன்ற விசாரணை நடைபெறவில்லை. இதனிடையே அவ்வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீசு அதிகாரி டி.ஜி.வன்சாரா கௌரவமாக ஓய்வு பெற்றுப் போய்விட்டார். பி.பி. பாண்டே, என்.கே.அமின், ஜி.எல். சிங்கால் ஆகிய போலீசு அதிகாரிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, பதவி உயர்வும் பெற்றுவிட்டனர்.
இவ்வழக்கில் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபால் சிங், விருப்ப ஓய்வு பெற்ற பின், பா.ஜ.க.வில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார். மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரியான கர்னல் சிங் பொருளாதாரக் குற்றப்பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தன் மகள் களங்கமற்றவள் என்பதை நிரூபிப்பதற்கும், அவளை இரக்கமற்ற முறையில் கொன்ற கொலைகாரர்களைத் தண்டிப்பதற்கும் சட்டப்படி போராடிக் கொண்டிருக்கிறார், இஷ்ரத்தின் தாய். மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சட்டப்படியே அவ்வழக்கை ஊத்தி மூடிவிட முயலுகிறார், மோடி. இதில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பது மட்டுமல்ல, சட்டம், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட இந்த நீதிபரிபாலண கட்டமைப்பு இந்து மதவெறி கிரிமினல்களுக்கும் அரசு பயங்கரவாதிகளுக்கும் சாதகமாகச் செயல்படும் அளவிற்குத் துருப்பிடித்து நிற்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
– செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக