செவ்வாய், 3 மே, 2016

மிஸ்டர் கழுகு: அம்மாவின் பிரசார கூட்டங்களில் திரிபாதி காட்டிய விசுவாசம் அடங்கப்பா...

மிஸ்டர் கழுகு: அதிகாரிகள் பந்தாட்டம் ஏன்? தேர்தல் பரபரப்பு கழுகாரின் முகத்திலேயே தெரிந்தது. மோர் கொடுத்து வரவேற்றோம்.
‘‘ஆளும் கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லி அதிகாரிகளைப் பந்தாடுகிறதே தேர்தல் ஆணையம். இந்த நடவடிக்கை தொடருமா?’’ என ஆரம்பித்தோம்.
‘‘இதுவரை 7 மாவட்டங்களின் எஸ்.பி-க்கள், 9 மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றப்பட்டுவிட்டனர். குறிப்பாக, மூன்று உயர் அதிகாரிகளின் மாற்றங்கள்தான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக போலீஸின் உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யான திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர்தான் அந்த மூவர். இவர்கள் மூவரையும் அந்த இடத்தில் இருந்து மாற்றி வேறு இடத்துக்கு போட்டு இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இதுவரை அவர்களுக்கு புதுப் பணிகள் தரப்படவில்லை. கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளார்கள்.’’
‘‘திரிபாதியை மாற்றியதற்கு என்ன காரணம்?’’


‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் கமிஷன் அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜை மாற்றியது. ‘யாரை புதிதாகப் போடலாம்?’ என்று சல்லடைப்போட்டு தேடி புதிய கமிஷனராக திரிபாதியை நியமித்தது. இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. தற்போது சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த திரிபாதியை திடீரென மாற்றியிருக்கிறது அதே தேர்தல் கமிஷன். இடைப்பட்ட காலத்தில் திரிபாதியிடம் திடீர் மாற்றங்கள். அதனால்தான், தேர்தல் கமிஷனின் குட் புக்ஸ்-ஸில் இருந்து விலகிப்போனாராம்.’’

‘‘என்ன மாற்றங்கள் அவரிடம்?’’

‘‘முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசார டூர் செல்லும் இடங்களில் திரிபாதி காட்டிய அதீத ஆர்வங்கள்தான் இதற்குக் காரணம். திருச்சிக்கு ஜெயலலிதா போனால், அக்கம்பக்கத்து மாவட்டங்களில் உள்ள போலீஸாரில் ஆரம்பித்து எஸ்.பி வரை பந்தோபஸ்துக்காக அழைப்பது வழக்கம். ஆனால், திரிபாதி இந்த முறை தமிழகத்தில் தொலைதூர மாவட்டங்களில் இருந்து போலீஸாரை வரச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார். சுமார் 6 ஆயிரம்  பேர் வரை திரட்டப்பட்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களில் ஏற்கெனவே தேர்தல் வேலை நடக்கிறது. அந்த வேலையை விட்டுவிட்டு, முதல்வர் பந்தோபஸ்துக்காக அங்குமிங்கும் அலைக்கழித்ததை போலீஸ் வட்டாரமே கோபத்துடன் கவனித்தது. நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்களைக் கொட்டடியில் அடைத்து வெளியே விடாமல் தடுத்ததும் போலீஸ்தான். இதன் விளைவாக, வெயில் கொடுமையால் 5 பேர் இறந்தனர். இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்த போலீஸாரை பின்னணியில் இருந்து இயக்கியது திரிபாதி என்கிறார்கள். அதே சமயம், காவல் துறையில் உள்ள இன்னொரு தரப்பினர், ‘பொதுவாக திரிபாதி இதுமாதிரி வெளிப்படையாகச் செய்யமாட்டார். ஆனால், முதல்வரின் பாதுகாப்பு விஷயத்தில் அவர் நடந்துகொண்ட விதம் வித்தியாசமாகத் தெரிந்தது. புகார்கள் எழும்... அதனால் தன்னை தேர்தல் கமிஷன் மாற்றும் என்று எதிர்பார்த்ததைப்போல அவரது செயல்பாடு இருந்தது. தேர்தலில் ஜெயிக்கும் கட்சி ஒருவேளை அ.தி.மு.க-வாக இருந்தால், திரிபாதி மீது அனுதாபம் வரலாம். மீண்டும் அதே பதவியில் தொடர்ந்து நியமிக்கப்படலாம்’ என்றும் சொல்கிறார்கள்.’’

 ‘‘கமிஷனர் ராஜேந்திரன் மீது என்ன பிரச்னை?”

‘‘சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தார். அப்போது போடப்பட்ட ஓர் உத்தரவு சர்ச்சைக்குரியது. திடீரென மாநிலத்தில் 144 தடை உத்தரவை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
‘அ.தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய மறைமுகமாக உதவும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதற்குக் காரணம் ராஜேந்திரன்தான்’ என்று அப்போது  எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டினர். அதேபோல், தற்போது சென்னையில் தேர்தல் குற்றங்களைத் தடுக்க இங்குள்ள போலீஸார் அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படாமல் மந்தமாக இருப்பதாகத் தேர்தல் கமிஷனுக்குப் புகார் போனது. அதையடுத்துதான் ராஜேந்திரனுக்கு கல்தா. ‘காரியவாதியான ராஜேந்திரன் பிரச்னைக்குரிய நேரத்தில் பதுங்குவார்’ என்றும் சொல்கிறார்கள்.”

‘‘உளவுப்பிரிவு ஐ.ஜி-யான சத்தியமூர்த்தியை  ஏன் மாற்றினார்கள்?’’

‘‘ஒரே வரியில் சொன்னால், போன்களை கண்காணிக்கும் விஷயம்தான் என்கிறார்கள். அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஆளும் கட்சியில் இருக்கும் சர்ச்சைக்குரிய பிரமுகர்களின் போன் பேச்சுகள் டேப் செய்யப்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டு உண்டு. அதற்கு சத்தியமூர்த்தியைத்தான் காரணமாகக் காட்டுகிறார்கள். இது டெல்லி வரைக்கும் போயுள்ளது என்கிறார்கள்.  ஆனால், உளவுத்துறையின் புதிய தலைவர் கரண் சின்ஹாவை மாலைக்கு மேல் போனில் பிடிப்பது கஷ்டம் என்கிறார்கள்!”

‘‘புது கமிஷனர் அசுதோஷ் சுக்லா, பெங்களூரில்  தீவிரவாதி இமாம் அலியை சுட்டுக்கொன்ற ஆபரேஷனில் இருந்தவர்தானே?”

‘‘ஆமாம். பொதுவாக, சென்னையில் கடந்த காலங்களில் ஏதாவது ஒரு பதவியில் இருந்தால்தான், கமிஷனர் பதவியில் நியமிப்பார்கள். அந்த வகையில், சட்டம் - ஒழுங்குப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யான திரிபாதிக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு ஏற்கெனவே சென்னையில் பல்வேறு பதவிகளில் இருந்தவர். அந்த வகையில், அவரைத்தான் கமிஷனர் பதவிக்கு நியமித்திருக்க வேண்டும். ஆனால், சென்னையில் இதுவரை பணியாற்றாத சுக்லாவை எப்படி நியமித்தார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது. இவர் எஸ்.பி-யாக இருந்தபோது இரண்டு முறை பெரிய விவகாரங்களில் சிக்கியவர். நெல்லையில் சாதிப் பிரச்னை...  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நடவடிக்கைக்கு உள்ளானவராம். அடுத்து, வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலைப்புலிகள் தப்பித்தபோது, அந்த மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர். அந்தக் காலகட்டத்திலும் நடவடிக்கைக்கு உள்ளனாவர். அதன்பிறகு, மத்திய அரசு பணிக்குப் போய்விட்டார். அங்கிருந்து மாநிலப் பணிக்கு கடந்த வருடம் வந்தார். மதுவிலக்குப் பிரிவு போலீஸின் கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தவர் தற்போது சென்னை போலீஸ் கமிஷனராக ஆகிவிட்டார்.’’

‘‘இதுபோன்ற திடீர் மாறுதல், அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்களே?”

‘‘தேர்தலை கூப்பிடு தூரத்தில் வைத்துக்கொண்டு, ‘வொர்க் சார்ட்’ போட்டு தேர்தல் வேலை செய்துவரும் அதிகாரிகளைத் திடீர் திடீரென தேர்தல் கமிஷன் மாற்றுவது நிர்வாகச் சிக்கலையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்க முக்கிய உறுப்பினர்கள் விவாதித்தார்கள். ‘தவறு செய்கிறவர்களுக்கு கல்தா தருவது சரி. ஆனால், மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே பதவியில் 55 அதிகாரிகள் இருப்பதை எப்படி கோட்டைவிட்டது தேர்தல் கமிஷன்?

தி.மு.க-வினர் கண்டுபிடித்து நீதிமன்றம் படியேறும்வரை மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பே 55 பேரை மாற்றியிருக்கலாம் அல்லவா? தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் நம்முடைய மாநில கேடரைச் சார்ந்தவர். வெளிமாநில அதிகாரியைப் போட சிபாரிசு செய்ய வேண்டியதுதானே. அந்தப் பதவிக்குக்கூட மூன்று மாதங்களுக்கு முன்பே, வெளி மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்கலாமே?’ என்றுகூட விவாதித்தார்களாம். சில மாவட்டங்களின் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் மாற்றியது. மூன்று வருடங்கள் அங்கேயே இருப்பவர்களாம் அவர்கள். இவர்களை மூன்று மாதங்களுக்கு முன்பே மாற்றியிருக்கலாம். அதைச் செய்யத் தவறிவிட்டு, புதியவர்களைத் தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. தேர்தல் நிலவரம், மாவட்டச் சூழ்நிலைகளைக் கரைத்துக் குடித்த அவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எந்த விஷயமும் தெரியவில்லையாம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளாக இருப்பவர்களின் தலையில் பாரம் அதிகமாகிறதாம். இந்தக் கோணத்திலும் தேர்தல் கமிஷனுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து பிரஷர் தரப்படுகிறதாம்.’’

‘‘அ.தி.மு.க தரப்பில் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனரிடம் புகார் மனுக் கொடுத்துள்ளார்களே?’’ 

‘‘தி.மு.க., காங்கிரஸ் தரப்பினர் தரும் புகார்களை தீர விசாரிக்காமல், உயர் அதிகாரிகளைத் தமிழகத்தில் அடுத்தடுத்து மாற்றி​வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே பதவியில் நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.’’

‘‘இப்போது தமிழக சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி-யாக அசோக்குமார் இருக்கிறார். இந்த நிலையில் தேர்தல் பிரிவு டி.ஜி.பி-யாக மகேந்திரனை தேர்தல் கமிஷன் நியமித்து உள்ளதே? இதனால் உயரதிகாரிகள் மத்தியில் குழப்பம் வராதா?’’
‘‘2011 தேர்தல் நேரத்தில் இதே மாதிரி ஒரு சூழ்நிலை வந்தது. அப்போது, தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்தவர் லத்திகா சரண். தேர்தல் பிரிவு டி.ஜி.பி-யாக இருந்தவர் போலோநாத். லத்திகாவை விடுமுறையில் தேர்தல் கமிஷன் போகச் சொன்னது. அதேபோல், தற்போதைய சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி-யான அசோக்குமாரையும் விடுமுறையில் போக வைக்கவேண்டும் என எதிர்க் கட்சியினர் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அசோக்குமாருக்கு எதிராகப் பல விஷயங்களை அடுக்கியிருக்கிறார். ஓய்வுபெற்று பதவி நீடிப்பில் இருக்கும் அசோக்குமார் எப்படி போலீஸ் ஃபோர்ஸுக்கு தலைவராகத் தேர்தல் நேரத்தில் இருக்க முடியும்? அவர் அ.தி.மு.க-வுக்குச் சாதகமானவர். எனவே, அசோக்குமாரை மாற்றிவிட்டு, தற்போது டி.ஜி.பி-யாக உள்ளவர்களில் யாரையாவது நியமிக்கவேண்டும் என்பது வைகோவின் கோரிக்கை.’’

‘‘ம்!”

‘‘வைகோ விட்ட அறிக்கையில் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. அசோக்குமாரை அ.தி.மு.க சார்பானவர் என்று மட்டும் சொல்லாமல் தி.மு.க சார்பானவர், இரண்டுக்கும் சார்பாக அவர் நடக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், போலீஸ் வட்டாரத்தினர் சிலர், ‘இரண்டு தரப்பிடமும் அசோக்குமார் நல்லுறவு வைத்துள்ளார்’ என்று சொல்கிறார்கள். இதைத்தான் வைகோ சொல்கிறாராம்” என்ற கழுகார், அடுத்து ஜெயலலிதா கூட்டம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஜெயலலிதா கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மே முதல் தேதி அன்று, வெயிலின் அளவு 105 டிகிரியைத் தாண்டி தகித்துக்கொண்டிருந்தது. சேலம், விருத்தாசலம் ஆகிய ஊர்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்து, அடுத்தடுத்து சிலர் பலியானது நினைவிருக்கலாம். அதனால், ஜெயலலிதாவின் கோவை பிரசாரக் கூட்டத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். மாலை 6 மணிக்கு தொடங்கும் பிரசாரத்துக்கு பொதுக்கூட்ட வளாகத்தில் 4 மணி அளவில்தான் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர். பங்கேற்ற அத்தனை பேருக்கும் குளுக்கோஸ், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட்டுகள், தொப்பி அடங்கிய தனி கிட் என பலத்த பாதுகாப்புகளுடன் நடந்தது.

கூட்டத்தில் நீலகிரி, திருப்பூர், கோவை மற்றும் கேரளா பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார் ஜெயலலிதா. மாலை 6 மணிக்கு ஜெ. தன் பேச்சை தொடங்கினாலும், நீலகிரி, திருப்பூர், கேரளா என வெகுதொலைவில் இருந்து திறந்தவெளி லாரிகளிலும், பஸ்களிலும் மக்கள் அழைத்து வரப்பட்டதால் மதியமே பெரும்பான்மையானோர், பொதுக்கூட்டம் நடக்கும் கொடீசியா வளாகத்துக்கு வந்துவிட்டனர்.

ஓரிரு கி.மீ. தூரத்துக்கு முன்னால் இறக்கிவிடப்பட, சுட்டெரிக்கும் வெயிலில் நிழலைத் தேடி அலைந்தனர் மக்கள். முதியவர்கள், குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருந்தது.”

‘‘இன்னுமா நிலைமை மாறவில்லை?”

‘‘மேடை, பொதுக்கூட்ட வடிவமைப்பு என எல்லாம் வழக்கமான அதே செட்டப்தான். பச்சை நிற மேடை, மேடையில் 12 ஏசிகள், ஜெயலலிதா மேடை ஏறி, இறங்க ஹைட்ராலிக் லிஃப்ட் வசதி, மேடையின் முன்னால் வெண்ணிறக் கற்களால் அம்மா என எழுதப்பட்ட வாசகம் என அதே செட்டப்தான் என்றாலும், மேடைக்கு கீழே இன்னொரு மேடையில் வேட்பாளர்கள் மிஸ்ஸிங். வேட்பாளர்கள் எல்லோரும் வேட்புமனுத்  தாக்கல் செய்து விட்டதால், அவர்களை அறிமுகப்படுத்தினால் வேட்பாளர் செலவுக் கணக்கில் பொதுக்கூட்டச் செலவு சேரும் என்பதால், வேட்பாளர்களை அறிமுகம் செய்யவில்லை. வழக்கமாக வேட்பாளர்கள் அமரும் இடத்தில் வேட்பாளர்களுக்குப் பதிலாக கூஜா வடிவிலான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.”

‘‘நல்ல சிம்பாலிக்தான்!”

‘‘பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துவரும் பொறுப்பு அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.500 எனக் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. வழக்கமாக ரூ.200-தான் வழங்கப்படும். ஆனால், கொளுத்தும் வெயிலால் ரேட்டும் ஏறியது. அமைச்சர் வேலுமணி தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே பணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்குக் கூட்டம் முடிந்த பின்னர் பணம் விநியோகம் நடந்தது.

வழக்கம்போல் பொதுக்கூட்டம் நடக்குமிடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், போலீஸாரிடம் பழைய சின்சியாரிட்டியைப் பார்க்க முடியவில்லை. தொப்பி, குளுக்கோஸ், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை விநியோகிக்கும் பணியைக் குறிப்பிட்ட போலீஸார் செய்தனர். மறுபுறம் ஒரு பகுதி போலீஸார், நமக்கு என்ன என்று நிழலைத் தேடி ஒதுங்கி நின்றுகொண்டனர்.”

‘‘சொல்லும்!”

‘‘ஜெயலலிதா கூட்டங்கள் என்றால் வழக்கமாக பத்திரிகையாளர்கள் படாய்படுத்தப்படுவார்கள். இந்த முறை உச்சம். பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமான பாதை இல்லாமல், பொதுக்கூட்டத்துக்கு வந்த பொதுமக்களோடு, பொதுமக்களாகவே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பொதுக்கூட்ட மேடையைச் சுற்றி வந்து பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அடையவே ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. எல்லாப் பத்திரிகைகளும் அனுமதிக்கப்பட வில்லை. சன் டி.வி., தினகரன், கேப்டன் டி.வி உள்ளிட்ட மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜெயா டி.வி., புதிய தலைமுறை, தந்தி டி.வி தவிர, மற்ற தொலைக்காட்சிகள் நேரலை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

கோவை கூட்டத்திலும் அதே பேச்சுத்தான். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்!”

‘‘அது என்ன?”

‘‘கோவை தேர்தல் பிரசாரத்தின்போது கேரள மாநிலத்தில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குத் தொப்பி சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு ஜெயலலிதா வேண்டுகோள் வைத்தார். ‘கேரள மாநிலத்திலும் தமிழகம் போன்ற திட்டங்களை நிறைவேற்றும் வகையில் 7 இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். பணிகள் எல்லாம் அங்கு சிறப்பாகச் செயல்படுத்த அ.தி.மு.க சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தொப்பி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும். கேரளத்தில் அ.தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்கும் நோக்கில் கழக வேட்பாளர்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குக் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். கட்சியினர் சுதந்திரமாகத் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார் ஜெயலலிதா. இதில் ஒரு காமெடி என்னவென்றால்... ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு மக்கள் தேசிய கட்சி, கொங்கு மண்டலத்தில் 72 இடங்களில் நிற்கிறது. அவர்களுக்குத் தொப்பி சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. அம்மா கோவையில் இருந்து தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்ததுதான் காமெடி” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை படம்: வீ.சிவக்குமார்  விகடன்.com
படம்: தி.விஜய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக