செவ்வாய், 10 மே, 2016

ஹோம் ஸ்கூலிங்கில் என்ன இருக்கிறது? பள்ளிக் கல்வியில் இல்லாதது...சாரங் மலை பள்ளி:

விகடன் .com :இந்த கட்டுரையை எப்படி துவங்குவது... ? இயற்கையின் முழுமையை எப்படி வார்த்தைகளில் வடிப்பது...? காற்றின் தீண்டலை, மழைக்கு பின் படரும் செம்மண் வாசனையை... என்ன அடர்த்தியான சொற்கள் கொண்டு வர்ணித்தாலும், அது நிச்சயம் முற்றுப்பெறாது. அவற்றை அமைதியாக உள்வாங்க வேண்டும். அப்படி ஒரு நாள் முழுவதும் நான் உள்வாங்கிய விஷயத்தை உங்களுடன் கொஞ்சம் பகிர்கிறேன். பள்ளிக்கே சென்றதில்லை. ஆனால் அவர் நான்கு மொழிகள் சரளாமாக பேசுவார், புகைப்படம் எடுப்பார், பல நிறுவனங்களுக்கு இணையதள பக்கங்களை வடிவமைத்து தருகிறார்.  அது மட்டுமல்லாமல், இந்த கல்விமுறை, பாடத்திட்டம் மீது நம்பிக்கை இல்லாமல், தன் குழந்தைகளையும் அவர் பள்ளிக்கு அனுப்புவதில்லை. கெளதம் எனக்கு இவ்வாறாகதான் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.
இந்த காரணங்களே அவரை சந்திக்க தூண்டுவதற்கு போதுமானதாக காராணங்களாக இருந்தன. ஆனால், எதிர்பாராத கோடை மழையின் போது, ஒரு மலை அடிவாரத்தில்,  பாலகாட்டில் உள்ள கொங்காட்டில் அவரை சந்தித்த பிறகுதான் தெரிந்தது, இவை மட்டும் அல்ல அவரும் அவர் குடும்பமும் என்று.

ஆம். கெளதம் சாரங்கும் அவர் குடும்பமும்  கலை, சூழலியல், இயற்கை விவசாயம், மாற்றுக் கல்வி, பொருளாதாரம் என்று பல தளங்களில், கடந்த முப்பது வருடமாக  மிக கடுமையாக, மன்னிக்கவும், நிச்சயம் கடுமையான என்ற சொல்லை அவர்கள் விரும்பமாட்டார்கள். மிக காதலோடு வேலை பார்க்கிறது.

இந்த கல்வி முறையால் எந்த பயனும் இல்லை :
கோபாலகிருஷ்ணன் - விஜயலட்சுமி தம்பதி கேரளாவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயி தன் பிள்ளைகளும் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்பமாட்டான் என்பதற்கு, இவர்கள் பெற்றோரும் விதிவிலக்கல்ல. இருவரும் ஆசிரியர் பணியில், 1979 ம் ஆண்டு சேருகிறார்கள். வயநாட்டில் ஒரு பள்ளியில் வேலை. பழங்குடிகள் அதிகம் உள்ள பகுதியில் அந்த பள்ளி இயங்குகிறது. இவர்கள் பள்ளியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே, அந்த பள்ளியில் எந்த ஆசிரியரும் வேலை பார்ப்பதில்லை. ஏன்... பல ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்பதை பார்க்கிறார்கள். பிற ஆசிரியர்களும், இவர்களிடம்... “இந்த பசங்களுக்கு பாடம் கற்பிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை... வந்தோமா சம்பளத்தை வாங்கினோமான்னு இருங்க... உங்களை நீங்களே கஷ்டப்படுத்திகாதீங்க...” என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால், விவசாய பின்னணியில் உழைத்து வாழ்ந்த அவர்களுக்கு,  உழைக்காமல் சம்பளம் வாங்குவதில் உடன்பாடில்லை. சில முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், அது எந்த பயனையும் தரவில்லை. பயன் தராவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு உள்ளூரில் பல எதிரிகளை உண்டாக்குகிறது.

கோபாலகிருஷ்ணன், “அப்போது அந்தப் பகுதி முழுவதும் மர மாஃபியாக்கள் கையில் இருந்தது. அந்த எளிய பழங்குடி மக்களுக்கும் அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. நாங்கள் மாணவர்களுக்கு கல்வி புகட்ட முயற்சிகள் எடுப்பதை அந்த  மாஃபியா கும்பல் விரும்பவில்லை. எங்களுக்கு எதிராக பல வதந்திகளை பரப்பியது...” என்கிறார்.

அவர் மேலும், “அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்தோம். கல்வி புகட்டுவதில் மட்டும் சிக்கல் இல்லை. அடிப்படையாக இந்த பாடத்திட்டதிலேயே பிரச்னைகள் இருக்கிறது என்று. ஆம், இந்த கல்வி மட்டும் ஒழுக்கத்தை, நியாயத்தை கற்பித்திருந்தால், நன்கு படித்த எங்கள் சக ஆசிரியர்கள் எங்களிடம்,  'நீங்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குங்கள்'  என்று சொல்லி இருக்கமாட்டார்கள் அல்லவா...? ஆக அடிப்படையாக கல்வியிலேயே ஏதோ சிக்கல் இருக்கிறது. இது அறத்தை போதிக்கவில்லை என்பதை உணர்ந்தோம்".
இப்போது விஜயலட்சுமியும் உரையாடலில் இணைந்து கொள்கிறார்.  “உண்மையான கல்வி என்பது சுதந்திரத்தை போதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் இந்த கல்வி,  நிறுவனங்களுக்கான அடிமைகளைதான் உற்பத்தி செய்கிறது என்பதை உணர்ந்தோம். அதை கண் கூடாக பார்க்கவும் செய்தோம். அடிமை இந்தியாவில் அடிமைகளுக்கு எஜமானர்களால், முன்மொழியப்பட்ட ஒரு கல்வி வேறு எப்படி இருக்கும்...? இதை மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பி இருந்து கொண்டே போராடி பார்த்தோம்... ஆனால், எங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை. குறைந்தபட்சம், இந்த கேடு கெட்ட கல்வியை எங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது என்று முடிவு செய்தோம். எங்களையும் இந்த கல்வி முறையிலிருந்து விடுவித்துக் கொண்டோம். வேலையை ராஜினாமா செய்தோம் ”

சாரங் மலை பள்ளி:


தொடர்ந்து பேசிய கோபாலகிருஷ்ணன், “இந்த கல்வி முறை நுகர்வை கற்பிக்கிறது. நுகர்வில் மட்டும் சந்தோஷம் அடையுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது. ஏனெனில், இது நிறுவனத்தின் கைக்கூலியால் (East India Company)  வடிவமைக்கப்பட்ட கல்வி முறை. இதை மாற்றாமல் உண்மையில் விடுதலை இல்லை என்பதை உணர்ந்து, அட்டப்பாடியில் 'சாரங்' என்ற மாற்றுப் பள்ளியை துவங்கினோம். இந்த முயற்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, எங்கள் மகன் கெளதம் வளர துவங்கிவிட்டான். அவனும் அங்குதான் படித்தான். எங்களது பாடத்திட்டங்கள், போதிக்கும் முறை அனைத்தும் முற்றாக வேறாக இருந்தது. உள்ளூர் பிரச்னைகள், சூழலியல் சார்ந்த விஷயங்கள், விவசாயம், ஒவியம், நாடகம் என கற்பித்தோம்.
முதலில் உள்ளூர் மக்களுக்கு எங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் மனசித்திரத்தில் கல்வி என்பது வேறாக இருந்தது. எங்களின் பாடத்திட்டம், கற்பிக்கும் முறையை துவக்கத்தில் அவர்கள் சந்தேகப்பட்டாலும், பின்னர் குழந்தைகளிடம் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் எங்களை நம்ப துவங்கினர்.  உண்மையில் அது பள்ளியாகவே இல்லை, ஒரு குடும்பம் போல்தான் செயல்பட்டோம். அது மட்டுமல்லாமல், அந்த மலையில் தண்ணீர் சேமிப்புக்காக சில தடுப்பணைகளயும் கட்டினோம். ஆனால், பொருளாதார சிக்கலால் மூன்றாண்டுகளுக்கு மேல் எங்களால் அந்த பள்ளியை நடத்த இயலவில்லை. இது மட்டும் அல்லாமல், அந்த மலையில் இருந்த பழங்குடி பிள்ளைகள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டார்கள். எங்களால் அதை தடுக்கவும் முடியவில்லை." என்றார்.

கெளதம் என்னும் காட்டுமரம்:
அவர்கள் பள்ளி செயல்படாமல் போனாலும், அவர்கள் முன்பு எடுத்த முடிவில் மிக தெளிவாக இருக்கிறார்கள். ஆம் கெளதமை எந்த பள்ளிக்கும் அவர்கள் அனுப்பவில்லை. கெளதமை சுதந்திரமாக சிந்திக்க விடுகிறார்கள். அவனுக்கு பிடித்ததை படிக்க அனுமதிக்கிறார்கள். கெளதம் தற்காப்பு கலை பயில்கிறார், ஓவியம், புகைப்பட கலை, வாகனம் ஓட்டுதல், இணைய வடிவமைப்பு, கட்டட கலை என தனக்கு பிடித்ததை பயில்கிறார். அதை தாண்டி மாற்று கல்வி தளத்தில் மிக ஆர்வமாக  வேலை பார்க்கிறார். மாற்று பள்ளியாக இருந்த அவர்களின் கனவு, இப்போது கிராமிய பல்கலைக் கழகமாக வளர்ந்து இருக்கிறது. இதை தாண்டி, கெளதமும் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

கெளதளதமுடனான உரையாடலில் இருந்து....
நீங்கள் முன்வைக்கும் கல்விமுறையை குருகுல கல்வி முறை என்று சொல்லலாமா...? 
இல்லை. அப்படி சொல்லாதீர்கள். குருகுல கல்வி முறையில் உயர்ந்த பிரிவினர், பணக்காரர்கள் மட்டும் படித்தார்கள். ஆனால், நாங்கள் அனைவருக்குமான கல்வியை முன்வைக்கிறோம். நாங்கள் கல்விக்கோ, பள்ளிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், இந்த கல்வி, பள்ளி முறை உங்களை சுதந்திரமாக சிந்திக்க விடாது என்கிறோம். இந்த கல்வி முறையை கொண்டு நம் சந்திக்கும் உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வை காண முடியாது. அதனால், நம் பாடத்திட்டத்தையும், கல்வி முறையும் உள்ளூர் மயமாக்க வேண்டும் என்கிறோம்.

இதை கொஞ்சம் விளக்க முடியுமா...?   
நம் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று கொஞ்சம் பாருங்கள். தென் அமெரிக்க காடுகள், நெப்போலியன் படை எடுப்பு பற்றியெல்லாம் மிக விரிவாக இருக்கிறது. ஆனால், நம் மேற்கு தொடர்ச்சி மலை பற்றி, அதில் உள்ள அரிய தாவரங்கள், உயிரினங்கள் பற்றி எதுவும் இல்லை. நம் முன்னோர்கள் தண்ணீரை சேமிக்க பயன்படுத்திய முறைகள் பற்றி எதுவும் இல்லை. இது எப்படி நல்ல கல்வியாக இருக்க முடியும். ஒரு வேளை இதை எல்லாம் கற்பித்து இருந்தால், இப்போது மோசமான தண்ணீர் பிரச்னையை சந்தித்து இருக்கமாட்டோம். அது மட்டுமல்ல, கற்பிக்கும் முறையும் மிக மோசமானதாக இருக்கிறது.

இது மட்டும்தான் பிரச்னையா...?
இப்போதுள்ள கல்வி முறையில், பாடத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது உங்களின் இயல்பான சிந்தனைகளை சிறை வைப்பது. அதாவது உங்கள் இயல்பில்,  உங்களை சிந்திக்க விடாமல் தடுப்பது. உங்களது முதலாளிகளுக்கு தேவையானவாறு உங்களை வடிவமைத்து, உங்கள் சுயத்தை அழிப்பது. இதையெல்லாம் தாண்டி, இந்த பாடத்திட்டத்தில் எந்த அறமும் இல்லை. அது ஒழுக்கத்தை சிறிதளவும் கற்று தரவில்லை.

நீங்கள் சொல்வது எதார்த்ததிற்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது... நாம் பண்டமாற்று சமூகத்தில் வாழவில்லை... இந்த அமைப்பில் வாழ பணம் தேவை. உங்கள் விஷயத்திலேயே உங்கள் கனவு பள்ளியை கட்டி முடிக்க பணம் இல்லாமல்தான் தடுமாறுகிறீர்கள். பணமே பிரதானமான ஒரு சமூகத்திற்கு ஏற்றவாறு தான் கல்வி இருக்கும். அதை எப்படி புறக்கணிக்க முடியும்...?

ஒத்துக் கொள்கிறேன். இந்த அமைப்பில் வாழ பணம் தேவைதான். அதனால்தான் அமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறேன். அதற்காக மாற்று கல்வியை முன்வைக்கிறேன். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால், நாங்கள் முன் வைப்பது உள்ளூருக்கு தேவையான கல்வி, நுகர்வை முன்மொழியாத கல்வி.  உங்களை உங்கள் இயல்பில் சிந்திக்க வைக்க, உங்களுக்கு பிடித்தமானவற்றை கற்க உதவும் கல்வி, பணம் அதிகம் தேவைப்படாத கல்வி.
ஆனால், நடைமுறையில் உள்ள கல்வி முறை உங்கள் பணத்தேவையை அதிகமாக்குகிறது. இந்த அமைப்பில் ஒரு குழந்தையை எல்.கே.ஜியில் சேர்க்க மூன்று லட்சம் ரூபாய் செலவழிக்கிறார்கள். பிறகு அந்த குழந்தைக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதை நீங்கள் சரி என்கிறீர்களா...? மூன்று வயது குழந்தையின் முதுகில் இவ்வளவு சுமையை ஏற்றும் இந்த முறையை மாற்ற வேண்டாமா...?


இந்த மாற்றங்கள் வரும் வரை ‘ஹோம் ஸ்கூலிங்கே’ (Home Schooling) சிறந்தது என்கிறீர்கள். ஆனால், இது குழந்தை சமூகத்தில் கலப்பதை தடுக்கிறது அல்லவா...?
இப்போது மட்டும் குழந்தை சமூகத்தில் கலக்கிறது என்கிறீர்களா...? குழந்தை காலையில் எழுந்து கிளம்பி,  பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் செல்கிறது. புதிதாக எந்த அனுபவமும் இல்லாத அதே சக மாணவர்கள். பள்ளியிலும் புதிய சிந்தனைகளை தூண்டாத கல்வி முறை. மாணவர்களுடன் அதிகம் கலக்காத ஆசிரியர்கள். இதில் எங்கு சமூகத்தில் கலப்பது இருக்கிறது...? நாங்கள் ஹோம் ஸ்கூலிங்கில் சொல்வது, குழந்தைகளை பொது பேருந்தில் அழைத்து செல்லுங்கள் என்கிறோம். அங்கு அந்த குழந்தை எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கும்... எவ்வளவு விஷயங்களை கற்கும்...! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பள்ளியில், பாடத்திட்டதில் உள்ளது மட்டும் கல்வி அல்ல... அது சமூகத்தில் இருக்கிறது.

நீங்கள் கற்பித்த கல்வியை படித்த பிள்ளைகள்தான், பொருளாதார மந்த நிலையின்போது தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்பும் ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்... கேரளாதான் இந்தியாவில் அதிகம் கற்ற மாநிலம் என்கிறார்கள். ஆனால், இங்குதான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் இருக்கிறது. மோசமான கற்பழிப்புகள் நடக்கிறது...
நடைமுறையில்  இருக்கும் இந்த கல்வி முறைக்கும் இந்த பிரச்னைகளுக்கும் தொடர்பில்லை என்கிறீர்களா...? குழந்தைகளை அதன் போக்கில் விடுவது ஆபத்தானது இல்லையா...? அதை கடைசி வரை கற்காமல் போய்விட்டதென்றால்...?
அனைத்து குழந்தைகளின் டி.என்.ஏ விலியே தேடல் என்பது இருக்கிறது.  எனக்கு யாரும் இணையதள பக்கங்கள் வடிவமைப்பது, அதற்கு கோடிங் எழுதுவதை கண்டிப்பாக படித்தே தீர வேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு அதில் விருப்பம் இருந்தது. அதை கற்றேன். அது போல் ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொன்றில் விருப்பம் இருக்கும்.  அதன் இயல்பில் விட்டால்,  அதற்கு விருப்பமானதைஅது கற்றே தீரும்.


உங்கள் மனைவி இதையெல்லாம் புரிந்து கொள்கிறாரா...?
அனு இதை புரிந்து கொள்வது மட்டுமல்ல... இது சார்ந்த பயிற்சி வகுப்பையும் அவளே ஒருங்கிணைக்கிறாள். நிச்சயம் அவளது பங்களிப்பு இல்லை என்றால் சில விஷயங்கள் சாத்தியமாகி இருக்காது.

உரையாடலின் முடிவில், கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து கொண்டார்.  “நாங்கள் கெளதமை பள்ளிக்கு அனுப்பாதபோது, எல்லாரும் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள். நாங்கள் ஏதோ தவறான முடிவை எடுத்துவிட்டதாக, குழந்தையின் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டதாக எங்களை குற்றம் சுமத்தினார்கள். ஆனால், அந்த நிலை இப்போது இல்லை. பல பெற்றோர்கள் நடைமுறையில் இருக்கும் கல்வியில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள துவங்கிவிட்டார்கள். மாற்றத்தை தேட துவங்கிவிட்டார்கள். இந்த கல்வி முறை பணம் சார்ந்தது. பணத்தால் மருத்துவரை வாங்கலாம்; ஒரு போதும் ஆரோக்கியத்தை அல்ல. பணத்தால் பெறப்பட்ட கல்வியும் அது போலதான். அதனால் ஒரு போதும் ஞானத்தை வாங்க முடியாது We Can't Bring Change in Education Alone : Writer ShajiWe Can't Bring Change in Education Alone: Writer Shaji | 'சமூகத்திலும் மாற்றம் கொண்டு வராமல், கல்வியில் மட்டும் மாற்றம் சாத்தியமில்லை!' #WhatisEducation? - VIKATAN சமீபத்தில் திருவனந்தபுரத்திலிருந்து 20 பெற்றோர்கள் எங்களை சந்திக்க வந்தார்கள். அவர்கள் எல்லாம் விளிம்பு நிலை மக்கள். அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம் ஸ்கூலிங்கில்தான் பயிற்றுவிக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கனவு கண்ட மாற்றம், நிகழ துவங்கிவிட்டது... நிச்சயம், பெரிய அளவில் மாற்றம் வரும். எத்தனை நாள் மனிதர்கள் அழுத்தத்திலேயே வாழ முடியும்...?” என்றார்

ஆம். மாற்றம் வரத்தான் வேண்டும்...!

பெய்திருந்த மழையால் காற்றெங்கும் செம்மண் வாசனை பரவி இருந்தது. இரை தேட சென்ற பறவை தன் கூட்டிற்கு திரும்பியது. அழுத்தமான கைக்குலுக்களுடன், நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம்.

- மு. நியாஸ் அகமது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக