புதன், 25 மே, 2016

சிவகங்கை மதகுபட்டியில் கலவரம்; 94 பேர் கைது.. முத்தரையர் சதயவிழா...

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் நேற்றுமுன்தினம் போலீசாருக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் 498 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 94 பேரை கைது செய்தனர்.< முத்தரையர் சதய விழா சிவகங்கையை அடுத்த மதகுபட்டி கீழத்தெருவில் மன்னர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விழா நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டின், அங்கு சென்று விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, கிராமத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மதகுபட்டி போலீஸ் நிலையம் முன்பு சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போலீசார் மீது தாக்குதல்

இதுகுறித்து தகவல் அறிந்து அக்கம்பக்கத்து கிராமத்தினரும் அங்கு வரத்தொடங்கினர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்தது.

தகவல் அறிந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீசார் மீது கல்வீசினர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், ஏட்டு வீரபாண்டி, ஆயுதப்படை போலீசார் மலைக்கண்ணன், பாலமுருகன், விஜய், அய்யப்பன், கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

தடியடி

இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு குவிந்திருந்தவர்களை கலைக்க தடியடி நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். அந்த பகுதி வழியாக வந்த ஒரு அரசு பஸ்சையும் மறித்து அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன்பின் கூட்டம் கலைந்து ஓடியது.

தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் மலர்விழி, ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயுதப்படை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

94 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முத்துவேலு அளித்த புகாரின் பேரில் மதகுபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜசேகரன் உள்பட 498 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இரவோடு, இரவாக 94 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமாதான கூட்டம்

இந்தநிலையில் மதகுபட்டியில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பச்சையப்பன், முத்தரையர் சங்க மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி, திருச்சி அருணாச்சலம் உள்பட அந்த பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்று பகலில் மாவட்ட கலெக்டர் மலர்விழியை சந்தித்தனர்.

அவர்கள் மதகுபட்டி பகுதியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் சுமுகமான நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.  .dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக