ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

Pure Cinema ப்யூர் சினிமா' புத்தகக் கடையும்...சினிமா நூல்களும்!


சினிமா ஆர்வலர்களும், திரைப்பட மாணவர்களும் சினிமா சார்ந்த புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்கிப் பயனடைய வழிவகுத்திருக்கிறது, சென்னை - வடபழனியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 'ப்யூர் சினிமா' புத்தகக் கடை.
தமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் மாற்று சினிமாவை ஊக்குவிக்கப்பதில் தீவிரம் காட்டுபவர் 'தமிழ் ஸ்டுடியோ' அருண். தன் முயற்சிகளில் ஒரு பகுதியாகவே 'ப்யூர் சினிமா' புத்தகக் கடையை திறந்துள்ளார். இதன் முக்கிய அம்சங்களைப் பார்க்கும்போது, இதை ஒரு தீவிர சினிமா இயக்கமாகவே அணுகலாம்.
இந்தப் புதிய முயற்சி குறித்தும், 'ப்யூர் சினிமா' புத்தகக் கடை பற்றியும் அருணிடம் கேட்டபோது, ''சினிமா தமிழ்நாட்டில் தோன்றி இந்த வருடத்தோடு நூறு ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சினிமா சார்ந்து தமிழில் இதுவரை எத்தனை புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்று கணக்கெடுத்தால் சொற்ப இலக்கங்களே மிஞ்சும்.

மலையாளத்தில் சினிமா ரசனைக்காக மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. உலகம் முழுக்கவே சினிமாவுக்கான புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் அச்சிடப்படுகின்றன. போர்களினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஈரான், வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து கூட ஆயிரக்கணக்கான சினிமா சார்ந்த புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், தமிழ்நாடோ சினிமாவிலிருந்து வந்திருக்கிற ஐந்து முதல்வர்களைக் கண்டுள்ளது. ஆனால், இங்கு தமிழர்களின் உணர்வோடு, அன்றாட பழக்கவழக்கங்களோடு இரண்டறக் கலந்துவிட்ட சினிமாவுக்காக, சினிமா என்ற கலையை தெளிவுபடுத்துவதற்காக கூட பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் அச்சாகவில்லை.
இத்தனை பாரம்பரியம் கொண்ட தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சினிமா சார்ந்த நூல்கள் அதிகபட்சம் ஆயிரத்தை தாண்டாது. நல்ல சினிமா இங்கே சாத்தியப்படாததன் பிரச்சனை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஒவ்வொரு வருடமும் இலக்கியம் சார்ந்து இங்கே ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவருகிறது. மொழியின் கட்டமைப்பான கவிதை சார்ந்து இங்கே லட்சக்கணக்கான புத்தகங்கள் வெளிவருகிறது. ஆனால் சினிமா சார்ந்த புத்தகங்களுக்கு இங்கே எத்தனை தட்டுப்பாடு?
ஒரு துறை சார்ந்து புத்தகங்கள் வெளிவரவில்லை என்றால் அந்தத் துறை எப்போதும் அதன் தொழில்நுட்பம், வடிவம் சார்ந்து மேம்பட வாய்ப்பே இல்லை.

பேசாமொழி பதிப்பகத்தோடு, இன்னபிற பதிப்பகத்தின் சினிமா சார்ந்த புத்தகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, இதோ இப்போது 'ப்யூர் சினிமா' (Pure Cinema) புத்தகக் கடை ஏப்ரல் 14-ம் தேதி முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க உள்ள சினிமா புத்தகங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்க்க இருக்கிறோம்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் புத்தகங்களும், அனைத்து மொழிப் படங்களும், குறும்படங்கள், ஆவணப்படங்களும், அரிய சினிமா புத்தகங்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கும்.
புத்தகக் கடை என்பதைத் தாண்டியும், இங்கே தனியாக நூலகமும் செயல்படவிருக்கிறது. சினிமா, இலக்கிய நூல்களை வாசிக்கலாம். குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகப் படங்கள், இந்தியாவின் மற்ற மொழிப் படங்களை ப்யூர் சினிமா அரங்கில் இருக்கும் ப்ரொஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் கண்டுகளிக்கலாம். இதற்காக வருடத்துக்கு மிகக் குறைந்த அளவில் சந்தா தொகையை நிர்ணயித்துள்ளோம்.
மேலும், சினிமா சார்ந்து ஆய்வு செய்யும் மாணவர்கள், இங்கிருக்கும் அறைகளில் தங்கி, ப்யூர் சினிமா புத்தகக் கடையில் உள்ள நூலகத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளலாம். தவிர பவுர்ணமி இரவு, தினசரி திரையிடல், சினிமா கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க இந்த வருட சந்தாவே போதுமானது.
சினிமா சார்ந்த உங்கள் அனைத்து தேடல்களும் இங்கே நிறைவடையும். கலைஞர்களுக்கான சரணாலயமாகவே ப்யூர் சினிமாவை விளங்கவைக்கும் அத்தனை முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறோம்" என்றார் அருண்.
தொடர்புக்கு:
'ப்யூர் சினிமா' (Pure Cinema)
எண் 7, மேற்கு சிவன் கோயில் தெரு,
'டையட் இன்' உணவகம் 2-ம் மாடி,
கமலா திரையரங்கம் அருகில்,
வடபழனி, சென்னை 600026
தொடர்புக்கு: 9840698236   .tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக