திங்கள், 18 ஏப்ரல், 2016

facebook,வாட்சாப் இதுதான் இன்றைய மீட்டிங் கிரவுண்ட் ...ஈயடிக்கும் பிரசார கூட்டங்கள்...

இந்த சட்டசபை தேர்தலுக்கும், ஈக்களுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதோ தெரியவில்லை. ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்த ஈ, அடுத்த கட்சியின் அறிக்கையின் மீது அமர்ந்ததை நாம் பார்த்தோம். அதே ஈ, இன்னும் எந்தெந்த கட்சிகளின் அறிக்கை மீது அமரப் போகிறதோ, யாமறியோம் ஈயே! மற்றொரு வகை ஈ, மாநிலம் முழுதும் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் செய்யும் இடங்களில் அமர்கிறது. புரிகிறதா, இல்லையா? அதாவது, பிரசாரக் கூட்டங்களில், கூட்டமே இல்லை என்பது தான், அதற்கு அர்த்தம். பொதுவாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசும் கூட்டங்களிலோ, தி.மு.க., தலைவர்கள் பேசும் கூட்டங்களிலோ, கூட்டம் நெருக்கி அடித்துத் தள்ளும். இந்த முறை, அப்படிப் பார்க்க முடியவில்லை.   காசு கொடுத்து கூட்டம் வரவழைத்தாலும் சில நிமிடங்கள் அதிகமாக போனாலும் அவர்கள் கூட ஓவர்டய்ம் கேட்கின்றனர்.
ஜெயலலிதா, 9 ம் தேதி, சென்னை தீவுத் திடலில் பேசிய கூட்டத்தில், பல நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. இதை படம் எடுத்த, ஒரு பத்திரிகையின் போட்டோகிராபர் கூட, தாக்கப்பட்டார். விஷயம்வெளியில்
வரவில்லை. கூட்டம் இல்லாததைப் பார்த்து, ஜெ., தன் சகாக்களுக்கு, 'டோஸ்' விட்டதாகவும் தகவல்.
தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசினார். அங்கு உள்ள பெரிய மைதானத்தில், பாதியளவே நிரம்பி இருந்தது. மீதி காலி! அது தெரியாதவகையில், கட்சி சார்பில், வீடியோக்களும், புகைப்படங்களும் நுட்பமாக எடுக்கப்பட்டு, பாராட்டைப் பெற்றனர் என்பது வேறு விஷயம்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும், இச்செய்தியின் நடுவே வெளியான புகைப்படங்கள் சாட்சி.ஏன் இப்படி கூட்டம் குறைகிறது? ஒன்று, வெயில்; இன்னொன்று, சோஷியல் மீடியாக்கள்.
இந்த ஆண்டு, ஏப்ரல் துவக்கத்திலிருந்தே கடும் வெயில் காணப்படுவதாலும், கிட்டத் தட்ட எல்லா, 'டிவி' சேனல்களிலும், பிரசாரக் கூட்டங்கள் நேரடிக் காட்சி யாக ஒளிபரப்பப்படுவதாலும், மக்கள், 'டிவி'க்குள் மூழ்கி விடுகின்றனர்.
கடந்த தேர்தல் வரை, பொதுமக்களிடம் சோஷியல் மீடியாக்களுக்கு அவ்வளவாக வரவேற்பில்லை. ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்ததால், நடுத்தர வயதினர் மற்றும் இளைஞர்கள் அவற்றை வெகுவாகப்பயன்படுத்தத் துவங்கி விட்டனர்.அவற்றில், 'வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக்' ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம், உலகையே கைக்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.
இந்த ஆண்டு, இந்த சோஷியல் மீடியாக்கள் தான், பிரசார மேடைகளாகி விட்டன என்றே சொல்லலாம். ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்தில் தலைவர் ஒருவர் பேசுகிறார் என்றால், அடுத்த நொடியே, அது, 'வாட்ஸ் ஆப் வீடியோ'வாக வேகமாக உலா வருகிறது. உடனே, 'பேஸ்புக், டுவிட்டரில்' கருத்துகள் பதியப்படுகின்றன.
இதை நோக்கும்போது, கட்சிகளின் பிரசார தளத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. இந்த உண்மையை கட்சி கள் புரிந்து கொண்டால், அடுத்த தேர்தலுக்காவது இதற்கேற்றார்போல், பிரசார தளத்தை அமைத்து கொள்ள லாம்.

அப்போது, கூட்டத்தை சேர்ப்பதற்காக செய்யக்கூடிய மைதானம், நாற்காலி, மேடை, மைக்செட் வாடகை, பிரியாணி, குவார்ட்டர், போக்குவரத்து செலவுகள் குறையும்;
எலக்ட்ரானிக் பிரசார தளங்களுக்கான செலவு கூடும்.அதே நேரத்தில், 'குவார்ட்டர்' கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போடும் மக்களின் மனநிலையும் மாறும்.
- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக