வியாழன், 14 ஏப்ரல், 2016

தினமலர் கோபாலபுரத்தில் இருந்து நேரடி வர்ணனை?.......தேர்தல்னா நாலு விதமா பேசத்தான் செய்வாய்ங்க

நீண்ட நாள் தயாரிப்பான, தி.மு.க., வேட்பாளர் பட்டியல், நேற்று காலை வெளியாக இருந்தது. பட்டியலை வெளியிட்டு, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் ஆர்வத்துடன், அறிவாலயம் கிளம்ப தயாராக இருந்தார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். அந்த நேரத்தில் வந்த செய்தியை கேட்டதும், பரபரத்த அவர், நேராக கோபாலபுரம் பறந்தார். பட்டியலும் கையுமாக இருந்த கருணாநிதியை சந்தித்தார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடலும், அதனால் எழுந்த கோபமும், ஸ்டாலினை பழையபடி, வீட்டுக்கே ஓட வைத்து விட்டது.இடையில் நடந்தது களேபரம். கருணாநிதி கேட்ட தொகுதியை, ஸ்டாலின் தர மறுத்ததும், பட்டியலை வெளியிட விடாமல், கருணாநிதி தடுத்ததும் தான் களேபரத்துக்குக் காரணம். தமிழகம் முழுவதும், மூன்று கட்ட சர்வே நடத்தி, வேட்பாளர் பட்டியலை தயார் செய்து கொடுத்தது, ஸ்டாலின் மருமகன்சபரீசன் டீம்.
பட்டியலில் இடம்பெற்ற பலரையும், கடைசி நேரத்தில் மாற்ற வேண்டும் என கருணாநிதி, கையில் பேனாவை எடுத்தது தான், ஸ்டாலின் டென்ஷனுக்கு காரணம்.


கருணாநிதியிடம் கோபித்துக் கொண்டு, கோபாலபுரத்தில் இருந்து, வீட்டுக்கு போய் விட்டார். எப்படியாவது சமாதானமாவார் என காத்திருந்த கருணாநிதி, அவர் வராததால், பட்டியலை வெளியிட தடை போட்டு விட்டார்.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கட்சியின் எல்லா தரப்பையும் திருப்திப்படுத்தும் விதமாக, பட்டியல் இருக்க வேண்டும் என, துவக்கத்திலேயே ஸ்டாலினுக்கு கருணாநிதிஉத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தமிழகம் முழுவதும் தன் ஆதரவாளர்களை உள்ளடக்கிய பட்டியலை, ஸ்டாலின் தயாரித்து, அதையே அறிவிக்க வேண்டும் என விரும்பினார்.
இதனால், ஒட்டுமொத்த குடும்பமும், ஸ்டாலின் மீது கோபம் அடைந்தது. எல்லாரும், கருணாநிதியிடம் தொடர்ந்து முறையிட, பட்டியலை இறுதி செய்வதில் அவர், கறார் காட்ட ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில், தனது உதவியாளர் நித்தியானந்தாவின் சிபாரிசை ஏற்று, பல்லாவரம் முன்னாள் நகரசபை தலைவர் இ.கருணாநிதியை வேட்பாளராக்க, மு.கருணாநிதி விரும்பினார். ஸ்டாலினோ, தன் ஆதரவாளர் தா.மோ.அன்பரசனை வேட்பாளராக்க முயல, அப்பா - மகனுக்குஇடையே கருத்துவேறுபாடு வெடித்தது.

'மாஜி மந்திரி அன்பரசன் செயல்பாடு பிடிக்கவில்லை என, நான் தெரிவித்த பின்னும், அவரை மாவட்ட செயலர் ஆக்கினாய். அப்போதுகூட, 'எனக்கு மீண்டும் சீட் வேண்டாம்' என அன்பரசன் எழுதிக் கொடுத்தார். அதை ஏற்று தான், அவருக்கு மாவட்ட செயலர் பதவி கொடுக்க ஒப்புக் கொண்டேன். இப்போது எதற்கு அவருக்கு சீட் வழங்க வேண்டும்?' என கருணாநிதி எகிறினார்.

அவரின் கோபத்தை பொருட்படுத்தாமல், ஸ்டாலின், 'சீட் வேண்டாம் என்று அன்பரசன் ஒன்றும் எழுதிக் கொடுக்கவில்லை. உங்கள் கூடவே இருக்கின்றனரே, அவர்கள் தான் எழுதி கொடுத்தனர்; அவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கும்போது, அன்பரசன் மட்டும் என்ன பாவம் செய்தார்?' என எரிச்சலுடன் பேசியுள்ளார். கொஞ்சம் இறங்கி வந்த கருணாநிதி, 'கட்டாயம் அவருக்கு சீட் வேண்டும் என்றால், செங்கல்பட்டில் நிற்கச் சொல். பல்லாவரம், இம்முறை இ.கருணாநிதிக்கு தான். அவரும் கட்சிக்கு நிறைய உழைத்தவர் தான். கட்சியில் சீனியரும் கூட' என்று சொல்ல, ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார்.

அவர் முகம் சிவப்பதை பார்த்ததும், 'நீ சொல்றதையெல்லாம் நான் கேட்கிறேன். 234 தொகுதிகளில், எனக்கென பல்லாவரத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டாயா?' என இறுதியாக, பாவம் போல் கேட்டுள்ளார், கருணாநிதி.அதற்கும் மசியாத ஸ்டாலின்,'பரவாயில்லை. அந்த ஒன்றை மட்டும் எனக்கு விட்டுக் கொடுங்கள்; மீதமுள்ள, 233 தொகுதிகளையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். இதுதான் என் விருப்பம்... முடிவும்கூட' என, முகத்தில் அடித்தாற்போல பேசிய ஸ்டாலின், அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அறிவாலயம் தான் போவார்; அங்கே பேசிக் கொள்ளலாம் என கருணாநிதி எண்ணினார். ஆனால், ஸ்டாலின் கார் நேராக, < ஆழ்வார்பேட்டை போய் விட்ட தகவல் தெரிந்ததும், கருணாநிதி சோகமாகி விட்டார். வீட்டுக்குள் நுழைந்த ஸ்டாலின், அறிவாலயம் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

இதற்கிடையில், அறிவாலயத்தில், வேட்பாளர் வெளியிடும் நிகழ்ச்சிக்காக, தூத்துக்குடி, வேலூர், கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தினர் காத்திருந்தனர்; செய்தியாளர்களும் கூடியிருந்தனர்.முன்னாள் அமைச்சர்கள் நேரு, பிச்சாண்டி, மாவட்ட செயலர் தூத்துக்குடி பெரியசாமி உள்ளிட்ட பலரும், கருணாநிதி, ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்தனர்.

பழைய கதைகளை எல்லாம் பேசி முடித்த பின், பசி எடுக்கவே, வாட்சை பார்த்தனர். பகல், 12:00 மணி. அதற்கு மேலம் ராகு காலம் என்பதால், இனி பட்டியலுக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஒவ்வொருவராக கிளம்பினர்.

இதற்கிடையில், நடந்த விஷயம் கேள்விப்பட்டு, கனிமொழி, கோபாலபுரம் வந்தார். அவரிடம், துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராஜா, பொன்முடி ஆகியோரை வர சொன்னார், கருணாநிதி. அவர்கள் வந்ததும், கருணாநிதியுடன் அமர்ந்து, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தனர்.

பட்டியிலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, ஆழ்வார்பேட்டையில் இருந்த ஸ்டாலினிடம் போனில் பேசிப் பேசி ஒப்புதல் பெற்றனர்.இப்படி தயார் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலே, மாலை வெளியாகும் என, கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழியால் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக