வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

01. உங்கள் வீடு காங்கிரீட்டில் கட்டப்பட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமென்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் வெறும் காலில் உங்களால் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். பகல் முழுவதும் இப்படி அடுப்பில் வைத்த இட்லிக் குண்டானைப் போல இருக்கும் உங்கள் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து இப்பொழுது அடிப்பாகத்தை எட்டி இருக்கும். ஆக, பகலில் வீட்டின் உள்ளே மேல் பாகத்தில் குளிர்ச்சியாகவும், மாடித்தரையில் சூடாகவும் இருந்த இடம், இப்பொழுது அப்படியே தலைகீழாக மாடித்தரை குளிர்ச்சியாகவும், வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாகவும் இருக்கும்.
இதனால்தான் இரவில் மின்விசிறியைப் போட்டதும் சூடான காற்று உள்ளே இறங்கி இயற்கையான ஹீட்டரைப் போல உங்களை வேகவைக்கும். ஆக, வெயில் சூட்டிலிருந்து உங்கள் மொட்டை மாடித் தரையைப் பாதுகாத்தால் அதன் வழியே உங்கள் வீட்டினுள்ளே சீலிங் வழியாக சூடான காற்று வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு என்ன செய்யலாம்?
01. மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்:
இதை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், வெள்ளை நிற சுண்ணாம்பை மாடித் தரையில் திக் காக அடிப்பதன் மூலம், வெண்மை நிறம் வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டினை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட மாடித் தரையில் நீங்கள் 45 டிகிரி வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம், குளிர்ச்சியாகவே இருக்கும்.
இதற்கு செலவு குறைவானது முதல் அதிகம் செலவு வைப்பது வரை பல முறைகள் இருக்கிறது.
செலவு அதிகம் பிடிக்கும் முறை:
வெப்பத்தடுப்புக்கென்றே பிரத்யோகமாக விற்கப்படும் சுண்ணாம்புக் கலவைகள். 5 லிட்டர் பக்கெட்டுகள் 2500 ரூபாய் முதல் துவங்குகின்றன. இதில் பல வகைகள், கம்பெனித் தயாரிப்புகள் இருக்கின்றன.
செலவு குறைவான முறை:
சாதாரண ஸ்னோசெம், சூர்யா செம் போன்ற சுண்ணாம்புப் பைகள் 10 கிலோ ரூபாய்.200 க்குள் பெயின்ட்/ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும், அவற்றுடன் 500 கிராம் பெவிகால் கலந்து நீர்விட்டுக் கரைத்து நன்றாக திக் காக மாடித் தரையில் அடிக்கவேண்டும். 750 சதுர அடிக்கு 10 கிலோ சுண்ணாம்பு, பெயின்ட் ப்ரஷ், பெவிகால் எல்லாம் சேர்த்து ரூ.500க்குள் முடிந்துவிடும். ஒரு பெயின்டருக்கு ரூ.500 அதிகபட்ச சம்பளம் கொடுத்தால் கூட காலை 6 மணிக்குத் துவங்கி 7.30க்குள் வேலையை முடித்துவிடலாம். அதிகபட்ச செலவு ரூ.1000.00 மட்டுமே.
சரி மேலே சொன்ன செலவு அதிகம் பிடிக்கும் பிரத்யேக ஹீட் ப்ரூப் பெயின்டிற்கும், கீழே சொல்லப்பட்ட செலவு குறைவான சுண்ணாம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பிரத்தியேக பூச்சுகள் தயாரிப்பவர்கள் தரும் அதிகபட்ச் உழைக்கும் கால அளவு 2முதல் 3 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் வெண்மை நிறம் மாறும்பொழுது சூட்டைக் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். போக 750 சதுர அடிக்கு ஆகும் செலவென்பது 6000 ரூபாய்க்கு மேல் போகலாம்.
ஆக, வருடத்திற்கு 3 மாதங்கள் வெயிலைச் சமாளிக்கச் சுண்ணாம்பு கொண்டு குறைந்த செலவில் ஒவ்வொரு வருடமும் அடித்துக்கொள்வது செலவு குறைவு என்பதோடு, நாமே களத்தில் இறங்கி இதைச் செய்யமுடியும்.
எனவே உங்கள் பொருளாதாரம் சார்ந்து இந்தச் சுண்ணாம்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
02.ஷேட் நெட்கள்:
பச்சை நிறத்தில் கட்டிடங்கள் கட்ட மறைப்பிற்காகப் பயன்படுத்தும் இந்த பச்சை நிற வலைகளை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். பல செடிகள் விற்கும் கடைகளிலும் நிழலுக்காக இதை பந்தல் போலப் போட்டிருப்பார்கள்.
இது 10 அடி அகலம், 150 அடி நீள பண்டல்களாக விற்கப்படுகிறது. 50% நிழல் தருபவை, 75% நிழல் தருபவை, 90% நிழல் தருபவை, என்று உங்களுக்குத் தேவையான நிழல் அளவிற்கு ஏற்ப இவை விற்கப்படுகின்றன.
இவற்றை மொட்டைமாடியில் பந்தல் போல நான்குபக்கமும், சவுக்கு அல்லது மூங்கில் கொம்பு நட்டு அதில் கட்டிப் பயன்படுத்தலாம். இதனால் மாடித் தரையில் நேரடியாக வெயில் பட்டு அதனால் சூடேறுவது மட்டுப்படுவதால் சீலிங் வழியே சூடு வீட்டின் உள்ளே இறங்குவது தடுக்கப்படும்.
50% மட்டுமே கிடைத்தது என்றால் இரண்டாக மடித்தும் பந்தல் போலப் போட்டுப் பயன்படுத்தலாம். சென்னையில் ஒரு பண்டல் 3000 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை, தரம், நிழல் அளவுகள் சார்ந்து விற்பனை செய்யப்படுகிறது. குறைவான அளவுகளில் உங்கள் தேவைக்கு ஏற்பவும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். வெயில் காலம் முடிந்து முறையாக எடுத்துப் பாதுகாத்துப் பயன்படுத்தினால் குறைந்தது 5 வருடங்கள் கூட இந்த ஷேட் நெட்கள் உங்களுக்கு உழைக்கும்.
03.தார்பாலின்கள்:
தார்பாலின்கள் அல்லது உபயோகப்படுத்தப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை நீங்கள் பந்தல் போலப் போட்டால் இருக்கும் பிரச்சனை காற்றடித்தால் கிழிவது மற்றும் அதிக வெயில் பட அவை அதன் தன்மையை இழந்து கிழிந்து / நைந்துபோவது. காற்று உள்ளே வெளியே செல்ல வழியில்லாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் ஷேட் நெட் போன்ற குளிர்ச்சியை இவை தருவதில்லை.
04.தென்னை ஓலைகள் :
குடிசை போடப் பயன்படுத்தும் தென்னை ஓலைகளை மாடியில் பரவலாகப் போட்டு தரையை மூடுவதன் மூலமும் ஓரளவு சூடு இறங்காமல் தவிர்க்கப்படும். மாடியில் குடிசை போடலாம். 10000 ரூபாய்க்கு மேல் செலவாகும். தீப்பிடிக்கக் கூடிய வாய்புகள் இருப்பதால் அரசே சில கட்டுப்பாடுகள் வைத்திருப்பதாகக் கேள்வி, அதிகபட்சம் 4 வருடங்கள் வரும். மழைக்காலத்தில் ஒழுகாமல் இருக்க சில விசயங்கள் செய்யவேண்டும்.
05.ஆஸ்பெஸ்டாஸ் / மெட்டல் ரூஃபிங்:
ஆஸ்பெஸ்டாஸ் போன்றவற்றை உபயோகிப்பது கேன்சரை வரவழைக்கும், பல உடல் நலக்கேடுகள் வரும் என்பதால் அதைத் தவிர்த்துவிடுவோம். மேலும் அவற்றால் சூடு அதிகம் உள்ளிரங்கும்.
மெட்டல் ரூஃபிங் எனப்படும் தகடுகளால் மேற்கூரை இடுவதும் ஓரளவு சூட்டைத் தணிக்கும். 1 லட்சம் முதல் உங்கள் தரை அளவைப் பொருத்து செலவாகும்.
06.சான்ட்விச் பேனல்:
இருபக்கம் மெல்லிய தகடுகள் கொண்டு நடுவில் பைபர் போன்ற அதிக கனமில்லாத, கடினமான ஒரு வெப்பத்தடுப்புப் பொருளை வைத்து இந்த கூரையைச் செய்கிறார்கள். சப்தம், வெளிப்பக்க வெப்பம் அல்லது குளிர் உள்ளே வருவது தடுக்கப்படுவது, உள்ளே இருக்கும் குளிர் அல்லது வெப்பம் வெளியே செல்லாமல் தடுக்கப்படுவது போன்றவைகள் இந்த பேனல் மூலம் சாத்தியம். 25 வருடம் உழைக்கும் என்று சொல்கிறார்கள், குறைந்த காலத்தில் இந்தப் பேனலை வைத்து அழகாக ஒரு வீட்டையே நீங்கள் கட்டிவிடலாம். தேவையில்லாதபோது பிரித்து எடுத்து வேறு இடத்தில் மீண்டும் வீடு கட்டிக்கொள்ளலாம். காங்கிரீட் வீடு கட்டுவதை விட செலவு குறைவுதான். இந்தப் பேனலைக் கொண்டு மேற்கூரை அமைப்பதன் மூலமும் வெயில் சூடு இறங்குவதைத் தடுக்கமுடியும். இதுவும் மெட்டல் ரூஃபிங்கை விட செலவு அதிகம் பிடிக்கும்.
07.சாக்குப் பைகள்:
கோணி எனப்படும் சணல் சாக்குப் பைகளை நன்றாக நீரில் நனைத்து மாடித் தரையில் போடுவதன் மூலமும் ஓரளவு வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். சாக்குப் பை காயக் காய நீர் ஊற்றி நனைக்கவேண்டும், எந்த அளவுக்கு இது சூட்டைக் குறைக்கிறது என்பதை நான் பரிசோதித்ததில்லை.
08.கொடிப் பந்தல்:
முல்லை, கொடி சம்பங்கி, பாஷன் ப்ரூட் மற்றும் பலவகை படர்ந்து வளரும் க்ரோட்டன்கள் போன்றவற்றை நீங்கள் ஒரு பெரிய தொட்டியில் வளர்த்தோ அல்லது தரையிலிருந்து மேலெழுப்பியோ மாடி முழுவதற்கும் படறச் செய்யலாம். இவை பசுமையாக நிழல் தந்து உங்கள் மாடித் தரையில் சூடேற்றாமல் காக்கும். வாசமுள்ள பூக்களையோ, மனதிற்கினிய பச்சை நிறத்தையோ உங்களுக்குத் தரும்.
பெரிய இலைகளை உடைய, அடர்தியாக வளரக்கூடிய வெயில் தாங்கும் எந்தச் செடிகளையும் நெருக்கமாக தொட்டிகளில் வைத்தும் மாடித் தரையை வெயில் சூட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்குவது , பூச்சிகள், தரை பாழாவது போன்றவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதை நீங்கள்தான் அறிந்துகொள்ளவேண்டும். :)
சரி, எளிமையான வழிகளை மீண்டும் பார்ப்போம்:
முதலில் சாதாரண வெள்ளைச் சுண்ணாம்புடன் தேவையான பெவிகால் கலந்து (இந்த பெவிகால் சுண்ணாம்பு காலில் ஒட்டாமல் இருக்கப் பயன்படுகிறது) நன்றாக நீர்க்க இல்லாமல் திக்காக மாடித்தரையில் அடித்துவிடவேண்டும். அது காய்ந்ததும், நான்கு பக்கம் கம்புகளைக் கட்டி பச்சை நிற ஷேட் நெட்டைக் கட்டிவிடவேண்டும். இரண்டடுக்கு வெப்பத் தடுப்பு முடிந்துவிட்டது. மூன்றாவதாக, தென்னங்கீற்று அல்லது வெட்டிய ஓலைகளை வாங்கி ஏற்கனவே வெள்ளையடிக்கப்பட்ட மாடித் தரையில் பரப்பிவிடவேண்டும். இந்த மூன்றடுக்கு வெப்பத்தடுப்பு நிச்சயம் அக்னிநட்சத்திர மதியத்திலும் உங்களுக்கு குளிர்ச்சியான அல்லது வெப்பமில்லாத காற்றையே வீட்டிற்குள் உங்களுக்குத் தரும். இரவில் பேன் போட்டாலும் சூடான காற்று மேலிருந்து இறங்காது. இரவில் குளிர்ச்சியான நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு நிம்மதியாக உறங்கலாம். ஏசி பயன்படுத்தினாலும் இந்த முறையில் விரைவில் உங்கள் அறை குளிரூட்டப்படும். மின்சார செலவு குறையும்.
மேலும் சில தகவல்கள்:
சென்னை போன்ற கடல் அருகில் இருக்கும் நகரங்களாக இருந்தாலும், டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற காற்றில் ஈரத் தன்மை குறைவான, கடலிலிருந்து அதிக தூரமிருக்கும் இடங்களுக்கும், வெயில் சூடு இறங்காமல் தவிர்க்க, மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் உதவும்.
நீங்கள் வசதிபடைத்தவராக அல்லது குளிர்ச்சிவேன்டும் என்று விரும்புவராக இருந்தால், சென்னை போன்ற கடல் அருகில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் (வெயில் காலத்தில் வியர்த்துக் கொட்டும்) ஊர்களில் ஏசி எனப்படும் ஏர்கன்டிஷனர்கள் மட்டுமே பயன்தரும். தயவு செய்து விலை குறைவு என்று ஏர்கூலர்களை வாங்காதீர்கள். கிலோ கணக்கில் ஐஸையும், குளிர் நீரையும் ஊற்றினாலும், குளிர்ச்சிக்குப் பதில் எரிச்சலையும் உடல் கேட்டையுமே அது தரும். அதிக ஈரம்ப்பதமுள்ள இடங்களில் ஏர்கூலர்கள் பலனளிக்காது. பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் போன்ற வறண்ட பிரதேசங்களில் ஏர்கூலர்கள் அற்புதமாக வேலைசெய்து குளிர்ச்சியைத் தரும். (ஏசியும் பலனளிக்கும்.)
பால்ஸ் சீலிங் எனப்படும் உள் அலங்காரங்கள், தெர்மொகோல் பயன்படுத்துவது போன்ற வீட்டினுள்ளே செய்யப்படும் விஷயங்களை நான் இங்கே எழுதவில்லை. வெளிப்புற வெப்பத்தடுப்பு பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். அதைப்பற்றிய விவரம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம், தெரிந்துகொள்கிறோம்.
மேலே உள்ள அனைத்து தகவல்களும் என் அனுபவம், தேடலில் நான் தெரிந்துகொண்டது மட்டுமே, இதை விட நல்ல எளிமையான தீர்வுகள் உங்களுக்குத் தெரிந்தால், மேலே கூறியவற்றில் ஏதேனும் பிழை இருந்தாலும் அதை கமென்ட்டில் தெரிவிக்கவும்.
நன்றி : முகநூல்  vadhini.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக