சனி, 9 ஏப்ரல், 2016

சேலத்தின் அடுத்த வீரபாண்டி ஆறுமுகம் நான்தான்...!'- தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்திபனின் 'பகீர்' அரசியல்!

விகடன்.காம் :விஜயகாந்த் மீதும், அவரின் மனைவி பிரேமலதா மீதும் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளைக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியே வந்து பரபரப்பான  பேட்டிகளைக் கொடுத்தனர்  எம்.எல்.ஏ.கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேகர் ஆகியோர். இதனையடுத்து தேமுதிக தலைமை அவர்கள் மீதும்,  அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையை எடுத்தது.
தேர்தல் நேரத்தில் இது போன்று தேமுதிக பிளவுபட்டு நிற்பது பெரும் பரபரப்பான விவாதத்தை தமிழக அரசியல் அரங்கில் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.பார்த்திபன் மீது ஏற்கனவே உள்ளூர் பல்வேறு திடுக்கிடும் புகார்களை,  அத்தொகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியதும், உள்ளூர் தேமுதிகவினரும் தங்களது கட்சித்தலைமைக்கு இவரைப்பற்றி கடந்த காலங்களில் பக்கம் பக்கமாக புகார்களை தட்டிவிட்ட கதையும் இப்போது சென்னை வரைக்கும் பேசப்படுகிறது. 
மேலும் நிறைவேற்றாத வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறி பெருமை பேசிய பார்த்திபனை கண்டித்து பாலமலை மக்கள் போஸ்டர்கள் மூலமாகவும், வீடியோ ஆதாரமாகவும் கொந்தளித்த விவகாரங்களும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கட்சி நலன் கருதி இவ்விவகாரத்தை அமுக்கி வைத்திருந்த உள்ளூர் தேமுதிகவினர், தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தொகுதி மக்கள் வாசிக்கும் புகார்கள் அனைத்தும் உண்மையே என்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகாலமாக மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில்,  தொகுதி மேம்பாட்டிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று சொல்லும் அவர்கள், 2011 சட்டமன்றத் தேர்தலில், பார்த்திபன் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் அவர் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் குப்பையில் வீசப்பட்டுவிட்டதாக குமுறுகின்றனர்.
இதுகுறித்து சேலம் மேட்டூர் தேமுதிகவினர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள், அவர்கள் வார்த்தையிலேயே...
யார் இந்த பார்த்திபன்?

" பார்த்திபன், தனது கல்லூரி பருவத்தில் இருந்தே அரசியல்வாதியாக வரவேண்டும்,சினிமா எடுக்கவேண்டும், நிறைய  கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

அதற்காக கட்டப்பஞ்சாயத்துக் கும்பல்களுடன், சாதியை அடிப்படையாக வைத்து சேலத்தில் சேர்ந்து  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அவர் தனது நெருங்கிய நண்பர்களுடன் பேசுகிறபோது, 'காலேஜ் முடிச்சு ஆறே மாதத்தில் ஒருகோடி சம்பாதித்தேன். அதை வைத்து மூன்று வருடத்தில் 3 கோடி சம்பாதித்தேன், எம்.எல்.ஏ. ஆனேன். அடுத்து சினிமா எடுப்பது அதையும் அடைவேன்' என்று அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். அத்தோடு, 'சேலத்தின் அடுத்த வீரபாண்டி ஆறுமுகமாக உருவெடுக்கவேண்டும்; அதற்காக எதையும் செய்யத் தயார்'  என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் தனது 'லட்சியத்தை' சொல்லி தோள் தட்டுவது  பார்த்திபனின் அரசியல்.

அதன் முதல் கட்டமாக ஜெகத்ரட்சகனின் 'வீரவன்னியர் பேரவை' அமைப்பில் இணைந்தார். அப்போது பாமக அன்புமணியோடு நேரடியாக மோதினார். அதனால் பார்த்திபனைத் தாக்க,  அன்புமணி ஆட்களை அனுப்பியதாகவும் அதில் இருந்து தப்பிய பார்த்திபன், விழுப்புரம் கூட்டம் ஒன்றில், அன்புமணிக்குக் கொலை மிரட்டல் விடுத்து பேசினா.  அதனால் பாமக இவர் விவகாரத்தில் பின்வாங்கியது.
அதனைத் தொடர்ந்து நடந்த அரசியல் மாற்றங்களில், பார்த்திபன் தேமுதிக பக்கம் வந்து, கடந்த 2011ல் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ.ஆனார்" என்று கூறுகிறார்கள் சேலம் தேமுதிகவினர்.

மேட்டூர் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் பார்த்திபன்?

கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ. என்ற முறையில் என்ன சேவைகள் செய்தார் பார்த்திபன்? என்றால் பூஜ்யம்தான் என்கிறார்கள் தொகுதி வாசிகள். 2011 தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றியதாக தெரியவில்லை.

மேட்டூர் பகுதியில்  இயங்கிவரும் MALCO ,CHEMPLAST நிறுவங்களின் நச்சுக் கலந்த நீரால் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க, நடவடிக்கை எடுத்து அந்த கம்பெனிகளை நிரந்தரமாக மூடுவேன் என்றார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேட்டூர் பூங்காவின் அருகில் உணவு அருந்தும் விடுதியைக் கட்டி வசூலில் ஈடுபட்டதால், பொதுப்பணித்துறை அந்த விடுதியை மூடியது. அதே போல அணையின் பராமரிப்புப் பணியில் நடந்த ஊழலை பார்த்திபன் மூடி மறைத்துள்ளார்.மேட்டூர் பாலமலைக்கு தனது சொந்தப் பணத்தில் சாலை அமைத்துக் கொடுத்துள்ளதாக பிரசாரம் செய்து அப்பகுதி மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளார்.
இதே போல அப்பகுதியில் மின் வசதி செய்து கொடுத்ததாகவும் கூறி பொய் பிரசாரத்தில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மீது பாலமலை வாசிகள் நிலஅபகரிப்பு புகாரும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். பாலமலையில் ரூ.15 லட்சத்தில் நியாய விலைக் கடை கட்டிக்கொடுத்ததாக கல்வெட்டு நிறுவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலமலைக்கு, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 33 கிராமங்களுக்கும் சாலை போட்டதாகவும்,மின் வசதி செய்து கொடுத்ததாகவும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதைக் கண்டித்து மலைவாழ் மக்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த விவகாரங்கள் குறித்து தேமுதிக தலைமைக்கு புகார்கள் அனுப்பட்டுள்ளன.

பி.என்.பட்டி பகுதியில், CHEMPLAST நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதாகக் கூறி பூமி பூஜை போடப்பட்டது. இதைக் கண்டித்த அந்த நிறுவனத்தை மிரட்டிய எம்.எல்.ஏ.பார்த்திபன், அவர்களிடமிருந்து கணிசமான தொகையினைப் பெற்றுக்கொண்டு விளையாட்டு மைதானத்தைக் கைவிட்டுள்ளார் என்றும் புகார் இருக்கிறது.

மேலும், மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பிச்சை எடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் போராட்டம்  நடத்தினார் பார்த்திபன். அப்போது  சேர்ந்த தொகையினை எண்ணிப்பார்த்து ஆயிரங்களில் இருந்ததைக் கண்டு அந்தத் தொகையினையும் அவர் கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று கூறி,  அதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என குரல் கொடுத்த  பார்த்திபன்,  தற்போது அதைக் கிடப்பில் போட்டுவிட்டார். இதிலும் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாக  புகார்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும், எம்.எல்.ஏ.பார்த்திபன் மீது ஓய்வு பெற்ற எஸ்.பி.ஒருவர் டி.ஜி.பியிடம் நில அபகரிப்பு மோசடிப் புகார் அளித்துள்ளார். அதில், போலி ஆவணம் தயாரித்து, பார்த்திபன் கோடிகளில் மோசடி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் பார்த்திபன் மீது வாக்காளர்கள் புகார்களை வீசுகின்றனர் மேட்டூர் தொகுதி முழுக்க.

இந்நிலையில் இவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு , 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் ஐக்கியமாக முடிவெடுத்து, தன்னுடன் சந்திரகுமார், சேகர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.களையும், முக்கிய பிரதிநிதிகளையும் பேரம் பேசி  அழைத்துச் சென்றுள்ளார் என்றும், அதற்கு ஜெகத்ரட்சகன் உதவியுள்ளார் என்றும் கூறுகிறார்கள் சேலம் தேமுதிகவினர். இது தொடர்பாக ஆளுக்கு 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டுகின்றனர் உள்ளூர் தேமுதிகவினர்.
திமுகவில் சீட் கிடைக்குமா?

தனது முறைகேடுகளை முழுக்க மறைத்து,  மீண்டும் தேமுதிக சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட எஸ்.ஆர்.பார்த்திபன் முயன்றுள்ளார். ஆனால் அது நடக்காது என்பதை தேமுதிக தலைமையில் இருந்து தெரிந்துகொண்ட பின்னரே அவர், அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், தனியாக போனால் மதிப்பிருக்காது என்று கருதி திமுகவை சரிகட்ட  சந்திரகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை பார்த்திபன் வெளியே அழைத்துச் சென்றுள்ளார் என்றும் கூறுகின்றனர் தேமுதிகவினர்.

மொத்தத்தில் சேலம் தேமுதிகவை இரண்டாக உடைத்து திமுக பக்கம் செல்லவும், அதில் தனக்கு சீட் வாங்கவும் பார்த்திபன் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது என்று கூறும் மேட்டூர் தொகுதி தேமுதிக பிரதிநிதிகள், அவர் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரின் சுயநல அரசியலை வெளிப்படுத்தி முகத்திரையைக் கிழிப்போம் என்று தெரிவிக்கின்றனர் உறுதியாக.
குற்றச்சாட்டுக்களை மறுக்கும் பார்த்திபன்
மேற்கண்ட புகார்கள் குறித்து எம்.எல்.ஏ.பார்த்திபனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்தார்.
"இதெல்லாம் அதிமுக புல்லுருவிகள் செய்யும் வேலை. கடந்த தேர்தலின் போது நான் அளித்த 34 வாக்குறுதிகளில்  27 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். பாலமலைக்கு சாலை,ரேஷன் கடை,மின் விளக்கு வசதி என்று  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.தொகுதி மக்களுக்காக 52 போராட்டங்கள் நடத்தியுள்ளேன். எனது வாக்குறுதியில் 7 ஐ தமிழக அரசு நிராகரித்துவிட்டது.100 சதவீதம் நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். பாலமலை மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.அவர்களின் குடும்பத்தில் ஒரு ஆள் நான்.சொந்தப் பணத்தில் 8 லட்ச ரூபாய் ஜே.சி.பி. இயந்திரம் வைத்து மாசக்கணக்காக வேலை செய்து இருக்கேன். மக்கள் ஒத்துழைப்பால் அங்கு சாலை போடப் பட்டது.யாரோ சொல்வதை எல்லாம் நம்பவேண்டாம்" என்று தெரிவித்தார்.

மேலும், தேமுதிக சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட இந்த முறை சீட் கிடைக்காது என்று தெரிந்துதான் நீங்கள் வெளியேறியதாக கூறப்படுகிறதே என்று கேட்டோம்.
அதற்கு பதிலளித்த பார்த்திபன், "தேமுதிக வில் எல்லாம் 'வெக்ஸ்' ஆகியிருக்கிறார்கள்.போட்டியிட அங்க ஆள் எங்க இருக்காங்க?அங்கே கொள்கையும் இல்லை.ஒன்றும் இல்லை. பணம் கட்டியவர்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு ஓடுகிறார்கள். நான் போராளி. இலட்சியத்திற்காக வாழ்பவன். சுயமரியாதையோடு வாழக் கூடியவன் நான். பதவிக்காக வாழ்பவன் இல்லை. நான் சொந்தப் பணத்தில் அரசியல் செய்பவன். பதவி என்றால் நான்கு பேருக்கு உதவ வேண்டும். அப்படி என்றால் அது பதவியே இல்லை" என்று  கூறினார்.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் சூடு தகிக்க தொடங்கியுள்ளது.- தேவராஜன்<<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக