செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மிஸ்டர் கழுகு: பண கஜானாவை காட்டிக்கொடுப்பது யார்?

கழுகார் உள்ளே நுழைந்ததும் கரூரிலும் சென்னையிலும் பணம் பிடிபட்டது தொடர்பான மேட்டர்களை வாங்கிப் பார்த்துவிட்டு நம்மை நோக்கித் தலைநிமிர்ந்தார்.
‘‘தமிழ்நாட்டுக்குள் பண மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. எல்லா இடங்களுக்கும் பட்டுவாடா தொடங்கிவிட்டது. இதுவரை பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததால், வெளியில் தெரியவில்லை. வீடுகளைவிட்டு வெளியேறுவதால் லீக் ஆகிவிடுகிறது” என்றபடியே பண மூட்டை செய்திகளை ரிலீஸ் செய்ய ஆரம்பித்தார் கழுகார்.
‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழகம் வந்தது முதல், அதிரடிச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஓட்டுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு போகும் பணத்தைக் கைப்பற்றும் இந்தச் சோதனையில், இதுவரை இல்லாத அளவில் கோடி கோடியாகப் பணம் கைப்பற்றப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு வரை பறிக்கப்பட்ட பணத்தின் கதை வேறு... அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள் வேறு... இவர்கள் அரசியல்வாதிகளின் பினாமிகள்.
அந்தந்தத் தொகுதியில், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணத்தைப் பதுக்கிவைத்திருந்தவர்கள். அதுவும் அமைச்சர்களின் பினாமிகள். கடந்த 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகத்தில், 11 கோடியே 32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தொகையில் சல்லி பைசாவுக்குக்கூட வியாபாரிகள் சொந்தம் கொண்டாடவில்லை. அதில், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது!”
‘‘ம்!”
‘‘தேர்தல் ஆணையத்தின் அதிரடிச் சோதனைகளில் ஒரு வாரத்துக்கு முன்புவரை அரசியல்வாதிகளின் பணம் அல்லது யாரும் உரிமை கோராத பணம் சிக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. அரசியல்வாதிகள், குறிப்பாக ஆளும் கட்சியினர், இதையெல்லாம் கருத்தில்கொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பே, அந்தந்தத் தொகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், கட்சிக்காரர்களின் குடோன்கள், தொழிற்சாலைகளில் பணம் பதுக்கப்பட்டுவிட்டது. அவர்களின் திட்டம், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நேரத்தில் ‘டேபிள் ஒர்க்’ பார்ப்பவர்களின் மூலம் பணத்தை விநியோகம் செய்வது. வழக்கமாகத் தேர்தல் நேரத்தில் ‘டேபிள் ஒர்க்’ பார்ப்பவர்கள் கட்சிக்கும் வேட்பாளருக்கும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் பூத் கமிட்டியிலும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வட்டச் செயலாளர்களைத் தனித்தனியாகச் சந்திப்பார்கள். அவர்களிடம் இருந்து, அவர்களது வட்டத்தில் உள்ள கட்சிக் குடும்பங்கள், கட்சி அனுதாபிகள், நடுநிலையாளர்கள், எதிர்க் கட்சிக்காரர்கள், கறார் பேர்வழிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும்.”

‘‘ஓஹோ!”

‘‘இந்த வேலையில் ஓட்டு ஜாபிதாக்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்காரர்களிடமும் ஓட்டு ஜாபிதாக்கள் இருக்கும். ஜாபிதா என்பது, அந்தத் தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் விவரங்கள் தெருவாரியாக தெள்ளத் தெளிவாக இருக்கும். அந்த ஜாபிதாக்களைக் கையில் வைத்துக்கொண்டு, வட்டச் செயலாளர்கள் தரும் விவரங்களையும் ஒப்பிட்டு அவர்களிடம் பணம் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்துக்கும் குறைவான தொகை அவர்களிடம் கொடுக்கப்படும். வட்டச் செயலாளர்கள் தங்களுக்கு நம்பிக்கையானவர்களை உடன் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் 2 தெருக்கள் அல்லது 3 தெருக்கள் என்று தங்களின் வேலையை கனகச்சிதமாக முடிப்பார்கள். வில்லங்கம் இல்லாத  வாக்காளர்களுக்கு பகல் நேரத்தில், கைமாற்றுக் கொடுப்பது போல் கொடுத்துவிடுவார்கள். மற்றவர்களுக்கு இரவில், அதிகாலையில் என்று வீட்டுக்குப் பணம் கவரில் சென்றுவிடும். அந்த கவருக்குப் பக்கத்தில் கட்சியின் நோட்டீஸ் ஒன்றும் போடப்படும். அவ்வளவுதான். இந்த முறையில் எந்தப் பிசகும் ஏற்படாது. லோக்கல் போலீஸ்காரர்களால் கூட இதை மோப்பம் பிடிக்க முடியாது. அப்படியே தெரிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதற்கு அவர்களுக்கும் தனி கவனிப்பு இருக்கிறது. திருமங்கலம் தேர்தலில், போலீஸ் வேனிலேயே எடுத்துப் போய் பணம் கொடுத்த கூத்துக்களும் நடந்ததே!”

‘‘இப்போது கோடி கோடியாகச் சிக்குவது எப்படி?”

‘‘வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக,  வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளும் கட்சி, தொகுதிக்குள் பணத்தைப் பதுக்கியது. அப்படி பதுக்கிய இடம் உள்ளிட்ட விவரங்கள், கட்சியின் லோக்கல் முக்கியப் பிரமுகர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களில் சீட் கிடைக்காதவர்கள், சீட் கிடைத்தும், வேட்பாளர் மாற்றம் என்ற பெயரில் வாய்ப்பை இழந்தவர்கள் அதிருப்தி கோஷ்டியாகச் செயல்படுகின்றனர். இப்படி, ‘பணம் இருக்கும் இடம் தெரிந்தவர்கள்’ அதிகம் ஆகிவிட்டார்கள். இந்த அதிருப்தி கோஷ்டிதான், தற்போது கோடி கோடியாகப் பணம் சிக்குவதற்கு காரண கர்த்தாக்கள். அவர்கள்தான் தேர்தல் ஆணையத்துக்கு அனைத்துத் தகவல்களையும் போட்டுக் கொடுக்கின்றனர் என்கிறார்கள். சென்னை எழும்பூர் பகுதியில் பணம் சிக்கியதற்குக் காரணம், ஒரு தி.மு.க பிரமுகராம். இவர் முன்பு அ.தி.மு.க-வில் இருந்தவர். அவருக்கு இன்னமும் அ.தி.மு.க-வில் ஏராளமான விசுவாசிகள் இருக்கின்றனர். அவர்களின் உதவியுடன் எழும்பூர் விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்தின் காதுகளுக்குக்கொண்டு போனார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்!”

‘‘அப்படியா?”

‘‘கரூரில் நடந்த ரெய்டிலும் சென்னை எழும்பூரில் நடந்த ரெய்டிலும் கட்டுக்கட்டாகப் பணத்துடன் முக்கியச் சொத்துக்களின் ஆவணங்களும் கொத்தாக மாட்டின. அதற்குக் காரணம், கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்க தங்களின் பினாமிகளிடம் பணத்தை மட்டும் கொடுப்பதில்லை. பல பினாமிகளிடம் சொத்து ஆவணங்களைக் கொடுக்கின்றன. அதைவைத்து பணத்தைத் தயார் செய்து கொடுத்துவிடுங்கள். தேர்தலுக்குப் பிறகு, ஆவணத்தை மீட்டுக்கொள்கிறோம் அல்லது அதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் இதில் ரகசியம். ஏறத்தாழ ஒரு ஹவாலா மோசடிதான் இது.”

‘‘அந்த அளவுக்கு சீக்ரெட் வைத்துள்ளார்களா?”

‘‘கரூரில் சிக்கிய அன்புநாதன், அ.தி.மு.க அமைச்சர்களுக்கு நெருக்கமானவர். நால்வர் அணிக்கு மீடியேட்டராகவும் பல நேரங்களில் செயல்பட்டவர். நத்தம் விசுவநாதனுக்கு ரொம்ப நெருக்கமானவர். அவருடைய வீட்டில் பலகோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு மேலாக அன்புநாதன் கண்காணிக்கப்பட்டார். அதன்பிறகு, கடந்த 22-ம் தேதி அவருடைய வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அதில், 10.30 லட்சம் ரூபாய் பணம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் போல் போலியாகத் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனம், ஒரு டிராக்டர், ஒரு கார், 12 பணம் எண்ணும் மிஷின்கள் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு ரூ.4.77 கோடி கைப்பற்றப்பட்டன. ஆனால், உண்மையில் சொல்லப்போனால், அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் கொசுறு. அவருடைய நண்பர் மணிமாறன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்படாத பணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டும் என்கிறார்கள்!”

‘‘மணிமாறன் மர்மம் வெளியில் வரவில்லையே?”

‘‘கரூர், வேலாயுதம்பாளையத்தை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மகன்தான் அன்புநாதன். கரூர், சேலம் வட்டாரத்தில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு ஃபைனான்ஸியர் அன்புநாதன். அமைச்சர் நத்தம் விசுவநாதனிடமும் நெருக்கம் ஏற்பட்டது. பணம் பட்டுவாடா செய்யும் பொறுப்பை பார்த்துக் கொண்டவர் அன்புநாதன். அதுபோல, திருச்சி, கோவை மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், அமைச்சர்களின் பணத்தை, ஆம்புலன்ஸில் சமர்த்தியாமாகக் கொண்டுபோய் வாக்காளர்களுக்குச் சேர்த்தார். அதனால், தற்போது சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைத்த பலர், அன்புநாதனின் உதவியை நாடினர். அன்புநாதன் அவருடைய நண்பர் மணிமாறனின் உதவியை நாடினார். ஏனென்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே, தேர்தல் ஆணையம் மற்றும் லோக்கல் அதிருப்தி கோஷ்டியினரின் பார்வையை அன்புநாதன் உறுத்தத் தொடங்கிவிட்டார். அதனால், இந்தமுறை கணிசமான பணத்தை, மணிமாறனின் தோட்டம், வீடு, குடோன்களில் பதுக்கினார். அங்கும் ரெய்டு நடைபெற்றது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, இதுவரை மணிமாறனை சீனிலேயே காட்டவில்லை தேர்தல் ஆணையம்.”

‘‘தேர்தல் ஆணையத்தின் மீதே சந்தேகம் வருகிறதே?”
‘‘சென்னை, எழும்பூர் எத்திராஜ் சாலையில் ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் சிக்கி இருக்கிறார்கள். விஜய், ஆனந்த். இவர்களின் தந்தை விஜய்குமார். தஞ்சை மாவட்ட அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர். சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுக்கு நெருக்கமான குடும்பம் என்கிறார்கள். இந்த நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி சுனிலுக்கு கடந்த 24-ம் தேதி 3.30 மணியளவில் தொலைபேசியில் ஒரு தகவல் வந்தது. அதையடுத்து சுறுசுறுப்பான அவர், தேர்தல் அதிகாரி சங்கீதா மற்றும் வருமானவரித் துறையினரை அழைத்தார். அவர்களிடம் எங்கு போகிறோம் என்பதைக் கடைசிவரை அவர் தெரிவிக்கவில்லை. தன்னுடைய டீமை அழைத்துக்கொண்டு நேராக எழும்பூர் எத்திராஜ் சாலைக்குச் சென்றவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் நுழைந்து ‘சோதனை போடுங்கள்’ என்று உத்தரவிட்டார். கரூரில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்படக் கூடாது என்பதால், அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாடுகளுடன் சென்றிருந்தார். அங்கு நடந்த சோதனையில், 4 கோடியே 80 லட்ச ரூபாய் பணம் சிக்கியது.”

‘‘கோடிகளுக்கு குறைவு இல்லாமல் சிக்குகிறதே?”

‘‘சென்னையில் இந்த ரெய்டு போய்க்கொண்டிருந்த அதே வேளையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 கோடியே 40 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், 150 தங்க நாணயங்களும்  கைப்பற்றப்பட்டன. பள்ளியின் காவலாளி, யாரோ சிலர் தன்னை மிரட்டி, சில மூட்டைகளைப் பள்ளியில் வைக்கும்படி சொன்னதாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். ஆனால், அதை போலீஸார் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் தற்போது விசாரணையில் வெளி வந்துள்ளது. பள்ளி விடுமுறை நாட்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி அங்கும் பணம், நகைகளை பதுக்கிவைக்கும் வேலையில் கட்சியினர் இறங்கி உள்ளனர்.”

‘‘இந்த ரெய்டுகள் ஒழுங்கான முறையில்தான் நடக்கிறதா?”

‘‘தேர்தல் பட்டுவாடாவுக்காக, பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ள வீடு மற்றும் இடங்களில், பறக்கும் படையினர் சோதனை நடத்தக் கூடாது. வருமானவரித் துறையினர்தான் சோதனை நடத்த வேண்டும்.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் வந்தால், உடனடியாகச் செலவினப் பார்வையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். செலவினப் பார்வையாளர் அல்லது பொறுப்பு அதிகாரி, உடனடியாக வருமானவரித் துறை அதிகாரிக்குத் தகவல் தெரிவித்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனப் பல விதிகள் உள்ளன. முந்தைய தேர்தலில் திருச்சியில் ரெய்டு நடத்தி கோடி ரூபாய்களை பிடித்த அதிகாரி சங்கீதா, அந்தப் பணத்தைக் காட்சிக்கு வைத்தார். இப்போது ஏன் தேர்தல் ஆணையம் காட்சிக்கு வைக்கவில்லை?” என்று அதிகாரிகளில் சிலர் கேட்பது சரியாகத்தானே இருக்கிறது” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை மற்றும் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்,  தே.தீட்ஷித்  vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக