சனி, 2 ஏப்ரல், 2016

சிறுதாவூர் கன்ட்டெய்னர்கள் ஆந்திரா, கேரளாவுக்கு...இல்லைங்கிறார் ராஜேஷ் லக்கானி...பிரவீன் குமார் போலவே ரொம்பவும் நேர்மையான அதிகாரி ..

விகடன்.com :சிறுதாவூரில் நின்ற கன்ட்டெய்னர்களில் சில ஆந்திராவுக்கும், ஒரு கன்ட்டெய்னர் கேரளாவுக்கும் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், கன்ட்டெய்னர்களில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக  மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மறுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பல கன்ட்டெய்னர்கள் நிற்பதாகவும், அதில் பணம் நிரப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளிப்படையாகவே கூறினார். இந்த செய்தி ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து சோதனை நடத்த வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் மதிமுக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.


இந்த சூழ்நிலையில், அங்கிருந்த கன்ட்டெய்னர்கள் திடீரென மாயமானது. இதனால் மீண்டும் சிறுதாவூர் பங்களாவில் இருந்த கன்ட்டெய்னர்கள் குறித்து கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சில கன்ட்டெய்னர்கள் ஆந்திராவுக்கும், ஒரு கன்ட்டெய்னர் கேரளாவுக்கும் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவுக்கு வந்துள்ள கன்ட்டெய்னர் மூலம் தென்மாவட்ட தேர்தல் செலவுக்கு பயன்படுத்த உத்தரவு வந்துள்ளதாம். தி.மு.க.,  தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதை விட 3 கோடியை அதிகமாக செலவு செய்ய தலைமையில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்கின்றனர். தோராயமாக அதிமுக சார்பில் ஒரு தொகுதிக்கு 7 கோடி செலவு செய்ய திட்டம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான தேர்தல் செலவுக்கான பணம் தற்போது பூவார் ரிசாட்டுகளிலும், திருவனந்தபுரத்தின் முக்கிய வணிக பகுதியான பீமாபள்ளியிலும் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலைகளில் பறக்கும்படையிடம் பணம் சிக்காமல் இருக்க கடல்மார்க்கம் வழியாகவே பணப்பரிவர்த்தனை நடக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தேர்தல் அதிகாரி லக்கானி மறுப்பு
ஆனால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி, சிறுதாவூர் பங்களாவுக்கு  கன்டெய்னர்களில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக இன்று செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.
சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர் மூலம் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

-த.ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக