சனி, 16 ஏப்ரல், 2016

குனிஞ்சு கும்பிட்டாக....மண்சோறு சாப்பிட்டாக ....மேசையில தட்டினாக........ஆனா தொகுதிபக்கம் போகலையே.....போகலியே?

விகடன்.com‘அமாவாசை’ அலறல்கள்! ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

ஜெயலலிதாவுக்கு, தனது கட்சியில் 227 நல்லவர்கள்-வல்லவர்களைக் கூடத் தேர்வுசெய்யத் தெரியாதா என்ன?< திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் ஆகிய திருத்தலங்களில் பூஜித்தும், கர்ப்பக்கிரகத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியும் எடுத்துவரப்பட்ட வேட்பாளர் பட்டியல், மூன்று நாட்களில் ஏழு முறை மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் 100 முறைகூட மாற்றப்படலாம். திங்கள்கிழமையா, செவ்வாய்க்கிழமையா, புதன் ஓரையா, ஏகாதசியா, வடக்கே சூலமா, தெற்கே சூலமா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலேயே இத்தனை திருத்தங்கள் என்றால், என்ன விசாரணையும் ஆராய்ச்சியும் நடத்தி, இவர்களை வேட்பாளர்களாகத் தேர்வுசெய்தார் ஜெயலலிதா?


பெருமாள் பெயர், முருகன் பெயர் இருப்பவர் களாகப் பார்த்து டிக் அடித்தார் என்றால், அடுத்த தேர்தலில் நிச்சயமாக இவர்களுக்கு ஸீட் கிடைக்காது. இப்படித்தான் கடந்த தேர்தலிலும் ஆட்கள் தேர்வு நடந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து, இவர்களில் எவரும் தேற மாட்டார்கள் எனத் தெரிந்து, இந்த முறை அவர்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை.

இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்கள் என அழைத்துவரப்பட்டு ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்ட 100 பேரை மீண்டும் வீட்டுக்கே அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. இதில் 10 பேர் அமைச்சர்களாகவும் இருந்து சுகம் அனுபவித்தவர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகால தமிழ்நாட்டின் நிர்வாகம்-அரசு ஜெயலலிதாவாலேயே சகித்துக்கொள்ளமுடியாத எத்தகைய தகுதியற்ற மனிதர்கள் வசம் இருந்துள்ளது என்பதற்கு முக்கியமான உதாரணம் இது.
‘அம்மா தாயே! எங்கோ ஒரு குக்கிராமத்தில் எதற்கும் உதவாதவனாக, அன்றாடச் சாப் பாட்டுக்கே  வழி இல்லாதவனாகச் சுற்றிக்கொண்டி ருந்த என்னை, எம்.எல்.ஏ ஆக்கி, அமைச்சராகவும் ஆக்கி, தங்கள் தலைமையில் செயல்பட வாய்ப்பும் கொடுத்த நீங்கள்தான் எனக்கு மீனாட்சி, காமாட்சி, அங்காள பரமேஸ்வரி, அகிலாண்ட ஈஸ்வரி...’ என, இந்த மனிதர்கள் பேசும்போது ஜெயலலிதாவைப் பாசத்தால் பாராட்டுகிறார்கள் என்றுதான் நினைத்தோம். இல்லை, அவர்கள் உண்மைகளைச் சொல்லியிருக்கிறார்கள்; எதற்கும் லாயக்கு அற்றவர்களாகவே பல எம்.எல்.ஏ-க்கள், பல அமைச்சர்கள் இருந்துள்ளனர். ‘அம்மாவிடம் பொய் சொல்லக் கூடாது’ என்பதற்காக, அன்றைக்கே உண்மையைப் பேசியிருக்கிறார்கள்!

இரண்டாம் முறை வாய்ப்பு தரப்படாத அளவுக்கு மோசமாக 100 எம்.எல்.ஏ-க்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் என்ன வகையான ஆட்சி நடந்திருக்கும்? வெறும் ஒப்புக்கு உட்கார்ந்துகொண்டு, மந்திரிகளின் மாதாந்திர கமிஷன்களில் வண்டியை ஓட்டியிருக்கிறார்கள் இந்த எம்.எல்.ஏ-க்கள் என்றுதானே முடிவுக்கு வரவேண்டும்? குறிப்பிட்ட தொகுதியில் சொந்த செல்வாக்கு இவர்களுக்கு இருந்திருந்தால், ஜெயலலிதா ஸீட் தர மறுத்திருக்க முடியுமா?

மாறாக, இவர்களுக்கு எல்லாம் மறுபடியும் வாய்ப்பு கொடுத்தால் கட்சி தோற்றுப்போகும் என உளவுத் துறை கொடுத்த அறிக்கை காரணமாகத்தான் இவர்கள் காலிசெய்யப்பட் டுள்ளார்கள். `இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் ஓட்டு கேட்டு ஊருக்குள் போக முடியாது’ என்றும் உளவுத் துறை அறிக்கை கொடுத்தது. ஏனென்றால், இவர்களில் பலபேர் கடந்த முறை ஓட்டு கேட்டுப் போனதற்குப் பிறகு ஊருக்குள் போகாதவர்கள். ஏன் போகவில்லை? அம்மா போகச் சொல்லவில்லை; அதனால் போகவில்லை.

தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சொன்ன ஜெயலலிதா, தன் மீதான வழக்கில் இருந்து விடுபடுவதற்காக கோயிலுக்குப் போகச் சொன்ன ஜெயலலிதா, தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையில் இருந்து வெளியில் வருவதற்காக யாகங்கள் நடத்தச் சொன்ன ஜெயலலிதா, தனது உடல்நலனுக்காக பல்வேறு பூஜைகள் நடத்தச் சொன்ன ஜெயலலிதா - ‘தொகுதிக்குள் போ, மக்களைச் சந்தி, அவர்களுக்கான தேவை என்ன என்பதை எனக்கு எழுது’ எனக் கட்டளை யிடவில்லை. அதனால் இவர்களும் தொகுதிக்குள் போகவில்லை.
ஜெயலலிதா கிரேட் டிக்டேட்டர்தானே! `சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லோரும் தொகுதிக்குள் போய் மக்களைச் சந்திக்க வேண்டும்’ எனக் கட்டளையிட்டிருந்தால் ஒருத்தராவது பார்க்காமல் இருந்திருப்பாரா... இருந்திருக்க முடியுமா? அம்மாவே சொல்லா விட்டாலும் இவர்கள் தொகுதிக்குள் போனால் ‘அம்மா’ திட்டப்போகிறாரா? இல்லை. பொறுப்பை உணர்த்தாத தலைமையின் கீழ் அக்கறையற்ற மனிதர்களின் ஐந்து ஆண்டுகள் உதவாக்கரையாகக் கழிந்துவிட்டன என்பதற்கு உதாரணம்தான், 100 எம்.எல்.ஏ-க்களுக்கும் 10 அமைச்சர்களுக்கும் தரப்பட்ட கல்தா!

அந்த 150 எம்.எல்.ஏ-க்களில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சர் களாவது தகுதி படைத்தவர் களாக, துறைச் செயல்பாடு களில் தேர்ச்சிபெற்ற, கெட்டிக்காரர்களாக இருந்தார்களா என்றால்... அதுவும் இல்லை.

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் 23 முறை அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது. ஓர் ஆட்சிக்கு ஒரு முறை பதவியேற்பு விழா நடத்தலாம். அதிகபட்சம் மூன்று முறைகூட நடக்கலாம். 15 தடவைக்கு மேல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ‘ஆட்டுக்குத் தாடி எதற்கு... ஆளுநர் பதவி எதற்கு?’ என அண்ணா கேட்டார்.

அண்ணாவுக்குத் தெரியாத ஆளுநரின் அவசியத்தை அம்மா உணர்த்துகிறார். இத்தனை தடவை பதவியேற்பு விழாக்கள் நடத்துவதற்கே, சொந்த வேலைகள் இல்லாத ஒருவர் வேண்டாமா?
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், செல்லூர் ராஜு, என்.சுப்பிர மணியம் ஆகியோர்தான் தாங்களும் மாறாமல் தங்கள் துறையும் மாறாமல் இருந்தவர்கள். கோகுல இந்திரா, எஸ்.பி.சண்முகநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, எஸ்.பி.வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆர்.பி.உதயகுமார், பி.வி.ரமணா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, வெளியில் அனுப்பப்பட்டார்கள். தாங்கள் திருந்தியதாக ‘எப்படி?’ நிரூபித்தார்கள் எனத் தெரியவில்லை. மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள். அதன் பிறகாவது நீடித்தார்களா என்றால்..? அக்ரி கிருஷ்ண மூர்த்தியும் என்.ஆர்.சிவபதியும் ரமணாவும் மீண்டும் தூக்கி வீசப்பட்டனர்.
150 பேரில் சுத்தமான, திறமையான, செயல்படக் கூடிய 30 பேரைக்கூட ஜெயலலிதாவால் தேர்வுசெய்ய முடியவில்லையா?

பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி - ஐந்து ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ஐந்து முன்னோர்கள். பள்ளிக் கல்வித் துறை எப்படி முன்னேறியிருக்க முடியும்? பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சி.எம் ஜெயலலிதாவா அல்லது சபீதா ஐ.ஏ.எஸ்-ஸா? பேசாமல் அவரையே அமைச்சர் ஆக்கியிருக்கலாமே!
பெண் பிரச்னைகளில் மாட்டியே சிக்கல் ஆனவர்கள் பட்டியல் நீண்டது. திருச்சி பரஞ்சோதி, செங்கோட்டையன், எம்.எஸ்.எம். ஆனந்தன், பி.வி.ரமணா, ஜெயபால் என இவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் பயங்கரம். போயஸ் கார்டனில் ஃபேக்ஸ் மெஷின் ரிப்பேர் ஆனதற்குக் காரணமே இவர்கள் மீதான புகார்கள்தான். பெரிய பதவி, திடீர் அதிகாரம், புதுப் பணம் மூன்றும் சேர்ந்து பலரையும் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடவைத்தன. இந்த ஐந்து பேர் சிக்கிக்கொண்டார்கள்; பலர் சிக்கவில்லை. செந்தில்பாலாஜி பற்றி தனிப் புத்தகம்தான் போட வேண்டும். ஒரு ‘பாரா’வுக்குள் அடக்கிவிடக்கூடிய பேரா அது?
இதில் புரியாத புதிர் என்னவென்றால்...

அமைச்சர் பதவிக்கு லாயக்கு இல்லை எனத் தூக்கி வீசப்பட்டவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ-வாகப் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு தந்திருப்பதுதான்.

அதிகாரம் பொருந்திய மனிதராக இருந்து, அமைச்சரவையில் வருவாய்த் துறை தரப்பட்டு, அதில் இருந்து டம்மியான ஐ.டி துறைக்குப் போய், மீண்டும் வருவாய்த் துறை பெற்று... பதவியும் பறிக்கப்பட்ட பரிதாப செங்கோட்டையன் மீண்டும் வேட்பாளர். ம.தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து, அ.தி.மு.க-வில் இருந்து கார்டனுக்குள்ளேயே போய், சின்ன வயதிலேயே செல்வாக்கான அமைச்சர் ஆகி... ஜெயலலிதாவின் பதவிபோனால் அடுத்து இவர்தான் என்றெல்லாம் மகுடம் சூட்டப்பட்ட செந்தில்பாலாஜி, திடீரென பதவிப் பறிப்புக்கு ஆளாகி, கரூரில் சிறைவைக்கப்பட்டார். அவருக்கும் மீண்டும் வாய்ப்பு. இப்படித்தான் சி.வி.சண்முகத்துக்கும் மீண்டும் வாய்ப்பு. எதற்காக நீக்கப்பட்டார்கள்? எதற்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்? ஐயோ பாவம்! ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி மட்டும் என்ன பெரிய பாவம் செய்துவிட்டார். அவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருந்தால் பட்டியலுக்கு ஒரு புண்ணியம் கிடைத்திருக்குமே!

யார் ஆள்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல; எத்தகைய ஆள் ஆள்கிறார் என்பதே முக்கியம். தொகுதிக்கே வராத எம்.எல்.ஏ-க்கள், துறையில் எந்தச் சாதனையுமே செய்யாத அமைச்சர்கள், இதை ஐந்து ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத முதலமைச்சர் - இதுதான் ஐந்து ஆண்டுகால ஆட்சி. இதற்குத்தானா மக்கள் வாக்களித்தார்கள்? தகுதியற்ற மனிதர்களுக்கு, தங்களது பணிகளைச் செய்யத் தவறிய மனிதர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்க மறுத்ததன் மூலமாக, கட்சி ஜெயிக்கும் என ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால், ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளும் தோற்றுவிட்டனவே. அதற்குக் காரணம் அவர்தானே!

இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட 10 அமைச்சர்களில் பி.மோகன், எஸ்.சுந்தர்ராஜ், என்.சுப்பிரமணியன், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.அப்துல் ரஹீம் ஆகிய ஐவரும் பெரிய புகார்கள் எதிலும் சிக்காதவர்கள். (புகார்களே இல்லாதவர்கள் எனச் சொல்ல வரவில்லை!) ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மறுத்த ஜெயலலிதா, தொடர் சர்ச்சை மனிதர்களாகவே வலம்வந்த நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், எஸ்.காமராஜ் ஆகியோருக்கு மீண்டும் அங்கீகாரம் தந்திருக்கிறார் என்றால், அவரது அளவுகோல் என்னவென்று புரியவில்லை.
இந்த எம்.எல்.ஏ-க்கள், இந்த அமைச்சர்கள் மீதான அனைத்துப் புகார்களையும் விசாரிப்பதுபோல நடித்து, கார்டனுக்கு மறைத்து சர்ச்சை நபர்களைக் காப்பாற்றி, பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க ஸ்தம்பிக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் அதே இடத்தைத் தக்கவைத்துள்ளார்கள். கடந்த இரண்டு மாத காலமாக விசாரணை வளையத்தில் இருந்து, ஓமகுண்டங்களின் முன்னால் பரிசோதனை செய்யப்பட்ட இவர்கள், என்ன பரிகாரம்செய்து மீண்டார்கள் என்பது அவரவருக்கே தெரியும். இந்த ஐவர் அணியில் கொஞ்சம் தப்பியவர் எனச் சொல்லப்பட்ட பழனியப்பனுக்கு, இந்த முறை வாய்ப்பே  இல்லை.

`அமாவாசை நேரத்தில்தான் பிரச்னை வருமோ!' என அமைச்சர்கள் இதுவரை அலறினார்கள்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் அப்படித்தான் இருந்தன... இருக்கின்றன. கூட்டிக் கழித்துப்பார்த்தால் ஐந்து ஆண்டுகளுமே அப்படித்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக