செவ்வாய், 26 ஏப்ரல், 2016

பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்': உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!


மும்பை: பொது இடங்களில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது எவ்வளவோ மேல் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு  சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக  நிறைவேற்றியது இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள்,  நாடக அரங்குகள்,  கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

- மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

- இரவு 11.30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

- மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.

- அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

- அழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.

- 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.

- 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

-லைசென்ஸ் இல்லாமல்  விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும்,  ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,  “ஆடுவது ஒரு தொழில், ஆட்டமானது ஆபாசமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அரசின் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கு எதுவும்  தடையாக இருக்க முடியாது. பிச்சை எடுப்பதை விட ஆடுவது சிறந்தது, வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது. vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக