புதன், 20 ஏப்ரல், 2016

புதிய தலைமுறை டிவி’ பாரிவேந்தரின் சமுகநீதிக்கு எதிரான பேட்டி!

0a1f“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார் பாரிவேந்தர். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச்செல்வனுக்கு ஒரு ஊடகவியலராக நன்றாகவே தெரியும் அவர் சமூக நீதிக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று. ஆனாலும், தான் வேலை பார்க்கிற ஒரு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பேசுகிற அபத்தமான சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துப் பெரிய அளவில் அவரால் கேள்வி கேட்க முடியாது.

ஒரு ஒடுக்கப்பட்ட குழந்தைக்கு தடுப்பூசி போட மறுக்கிற சமூகத்தில், இன்னொரு ஒடுக்கப்பட்ட மனிதனை நீங்கள் மருத்துவராக முன்வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க நீங்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரைத் தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனை கல்விக்கூடங்களில் மலம் அள்ள வைக்காமல் இருக்க நீங்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட ஆசிரியரைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது.
ஏழ்மையை எமது குழந்தைகள் புரிந்து கொள்வார்கள், வறுமையை எமது குழந்தைகள் ஏற்றுக்கொண்டு வாழப் பழகி இருக்கிறார்கள், ஏழ்மை எல்லோருக்கும் பொதுவானதாகவும், சம நீதியுடனும் இயங்குகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், உரிமைகளையும், சுய மரியாதையையும் இழப்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
தான் ஏன் பகல் உணவின்போது தனியான இடத்தில் அமர வைக்கப்படுகிறோம் என்கிற கேள்விக்கான பதிலை இலவச உணவு மட்டுமே அவர்களுக்குத் தந்து விடவில்லை. தான் ஏன் இன்னொரு தெருவுக்குள் செருப்போடு நடந்து போகக் கூடாது என்கிற கேள்வியை இலவசக் காலணித் திட்டமும், இலவசப் பயணத் திட்டமும் அவனுக்கு விளக்குவதில்லை. தன்னை விட ஏழை மாணவனின் உணவுத் தட்டைப் பயன்படுத்திய காரணத்துக்காக நான் ஏன் விரல்கள் முறிக்கப்பட்டேன் என்கிற கேள்விக்கான பதிலை பொருளாதாரம் தருவதில்லை.
ஐயா பாரிவேந்தர் அவர்களே, எல்லா ஏழைகளும் இங்கே சமநீதி பெற்றவர்கள் அல்ல. பார்ப்பன ஏழை எப்போதும் கோவில் கருவறைக்குள் போகலாம். தலித் கோடீஸ்வரனால் இன்னும் பல கோவில்களுக்குள் கூட நுழைய முடியாது. ஆதிக்க சாதி ஏழையின் பிணம் மதிப்பும், மரியாதையும் கொண்டது. ஒடுக்கப்பட்ட மனிதனின் பிணம் மதிப்பீடுகள் இல்லாத தீட்டுக் கொண்டது. சமூக நீதியை வெறும் பொருளால் பெற்றுவிட முடியாது பெருமகனாரே.
ஆயிரமாண்டு காலப் புறக்கணிப்பையும், சமூக அநீதியையும் நீங்கள் வெறும் பொருளால் வகைப்படுத்தினால், அதன் பின்னால் இருக்கிற சமூக உளவியல் குறித்த எந்த அக்கறையும் இல்லாத, அரசியல் நுண்ணுணர்வு இல்லாத ஒரு தட்டையான கருத்தியலைச் சார்ந்து இயங்குகிறீர்கள் என்று பொருள்.
தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக ஒரு விடையில்லாத கேள்விகளை எமது குழந்தைகள் தங்கள் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். நான் ஏன் பொதுத் தெருவுக்குள் போகக் கூடாது? நான் ஏன் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது? நான் ஏன் பொதுத் தெருவுக்குள் எனது மிதிவண்டியை ஓட்டிச் செல்லக் கூடாது? நான் ஏன் பொது அரசுப் பள்ளியில் தனி வரிசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்? இது போல ஆயிரமாயிரம் உளவியல் சிக்கல்கள் மிகுந்த கேள்விகளை அவர்கள் தொடர்ந்து கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பொதுச் சமூகம் அவர்களின் முன்னால் வைக்கிற சமூக இயங்கியல் தடைகளை எதிர்கொள்ளும் ஒரு மன எழுச்சிக்கான போராட்ட ஆற்றலை அவர்கள் தொடர்ந்து செலவழிக்கிறார்கள். பொதுச் சமூகத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்கிற ஒரு இயல்பான மனநிலையை அவர்களால் அவ்வளவு எளிதில் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. புறக்கணிப்பாலும், ஒடுக்குமுறையாலும் இழந்து போன கல்வி, பொருளாதார மற்றும் சமூக இருப்பின் வெற்றிடத்தை ஏழ்மையும், வறுமையும் நிரப்பிக்கொண்டு விட்டது.
இப்போது இவர்கள் இரண்டுக்கும் எதிராகப் போரிட வேண்டும். பொது சமூக உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நீதிக்கான போராட்டம், பிறகு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டம். உயர் மற்றும் ஆதிக்க சாதிச் சார்பு நிறைந்த இந்திய பொது சமூகத்தில் வாழும் ஏனைய சமூக குழுக்களுக்கும், உயர் சாதி மனநிலைக்கும் புறக்கணிப்பும், மறுப்பும் இல்லாத ஒரு உளவியல் விடுதலை இருக்கிறபோது அவர்களின் செயல்திறனும், இயங்கியல் திறனும் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கிறது.
மாறாக ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனின் உளவியல் மற்றும் இயங்கியல் திறன்களின் ஊற்றுக் கண்களே இன்னும் திறக்கப்படாமல் இருப்பதை உணர்ந்து தான், உலகம் போற்றும் அறிவுத் திறனும், சமூக ஆய்வாளருமாகிய அண்ணல் அம்பேத்கர் சாதி ரீதியான இட ஒதுக்கீடு ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய அவலங்களை ஓரளவு தீர்க்கக் கூடிய மருந்தாக இருக்கும் என்று வலியுறுத்தி அதனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலிமையாக இடம் பெறச் செய்தார்.
சாதி பிறப்பின் போதே வரையறுக்கப்பட்ட ஒரு எளிதான அடையாளம் இந்த தேசத்தில். பொருளாதாரம் அப்படியில்லை. பொருளாதார இட ஒதுக்கீட்டின் அளவுகோலை வரையறுக்கும் இடங்களில் அமரப் போகும் ஆதிக்க சாதி உளவியலை நீங்கள் எப்படி வெற்றி கொள்வீர்கள்? பொருளாதாரம் எந்தச் சூழலிலும் மாற்றம் பெறக் கூடிய ஒரு புறநிலைக் காரணி. சாதி எந்தச் சூழலிலும் மாற்ற இயலாத சமூக உளவியலோடு தொடர்பு கொண்ட அகநிலைக் காரணி. இதயம் அழுகிப் போயிருக்கும் ஒரு சமூகத்துக்கு நீங்கள் முகத்தை சிவப்பு நிறமாக்கும் “க்ரீம்”களை மருந்தாகக் கொடுக்க முடியாது.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கு முன்னால் எல்லா சமூகக் குழுக்களின் உரிமைகள் மற்றும் உளவியலை ஒரே நேர்கோட்டில் நிறுத்துங்கள். பார்ப்பனரையும், ஆதிக்க சாதி உயர் சமூகக் குழுக்களையும் இவர்களது பிறப்பினாலான இலவச சமூக ஒதுக்கீட்டை முற்றிலுமாக சட்டங்களால் நீக்குங்கள். எல்லாத் தெருக்களையும், எல்லாப் பள்ளிகளையும், எல்லாக் குழந்தைகளையும் பொதுமைப்படுத்திய பிறகு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகளையும், திட்டங்களையும் செயல்படுத்துங்கள்.
ஒடுக்கப்பட்ட எமது குழந்தைகள் பிளவுபட்ட, கரடு முரடான, முட்களும், கற்களும் நிரம்பிய ஒற்றையடிப் பாதைகளில் இருந்து பொதுவில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுச் சமூகமோ நெடுஞ்சாலையில் ஒரு சொகுசான பயணத்தில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பயணத்தையும் ஒன்று என்கிறீர்கள். சிறகுகள் முறிக்கப்பட்ட பறவைகளையும், இளஞ் சிறகுகளால் உயர உயரப் பறக்க முடிகிற பறவைகளையும் “இரண்டும் பறவைகள் தானே” என்று தொடர்ந்து சொல்கிறீர்கள்…….
– கை.அறிவழகன்   ://heronewsonline.com/p

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக